இலங்கை அரசாங்கம் 20 வருடங்களுக்கு அதானியிடம் இருந்து ஒரு KW அலகிற்கு 8.26 சத டொலர்கள் எனும் விலையில் காற்றாலை மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான, மின்சக்தி கொள்வனவு உடன்படிக்கையில் (PPA) நுழைவற்கான விலைமனு கோரலை அதானி குழுமத்திற்கு வழங்க, கடந்த 2024 மே 06ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவை எதிர்த்து, வனவிலங்கு இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS), கலாநிதி ரொஹான் பெத்தியகொட உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் தாக்கல் செய்த ஆட்சேபனை மனு கடந்த வெள்ளிக்கிழமை பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட போதே உயர் நீதிமன்றம் மனுதாரர்கள் கோரிய இடைக்கால எந்தவொரு தடையுத்தரவையும் வழங்கவில்லை.
அதானி திட்ட விபரங்கள் மற்றும் இலங்கைக்கான நன்மைகள்
அதானியின் காற்றாலைத் திட்டமானது, இலங்கையில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மிகப்பாரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முதலீடாகும். இந்த முதலீட்டில் 484 MW திறன் கொண்ட நாட்டின் மிகப்பெரிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதும் உள்ளடங்குகின்றது. இத்திட்டம் சாதனை மிக்க இடைவெளியில் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, இந்த திட்டமானது 1,200 MW திறன் கொண்ட புதிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மின்னுற்பத்தி நிலையங்களை இணைப்பதில் மிக நீண்ட 400 kV பரிமாற்ற பிரதான மின் இணைப்பு பாதையைக் கொண்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் காற்றாலை மின்சக்தி மூலம் இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 30 பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும். இதனால் பாவனையாளர்களுக்கான மின்சார கட்டணங்கள், அலகொன்றிற்கு ரூ. 17 ரூபாவினால் குறைக்கப்படும். அது மாத்திரமன்றி, இதன் மூலம் இலங்கையானது புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் போட்டியிடும் ஒரு நாடாக மாறும். அத்துடன், நாட்டில் நடைமுறைப்படுத்தக்கூடிய மிகக் குறைந்த காற்றாலை மின்சக்திக் கட்டணங்களை வழங்க இந்த திட்டம் உறுதியளித்துள்ளது.
அதானி இதனை கைவிட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்
இந்த திட்டத்தில் இருந்து அதானி குழுமம் விலகினால், மிகப் பாரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டை இலங்கை இழக்க நேரிடும் என்பதோடு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான கதவுகளை இலங்கை மூடிவிட்டது என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதாக இது அமையும். தற்போது, இவ்வாறான திட்டமானது 50 MW திட்டம் போன்ற சிறிய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படுவதோடு, அது வெளிநாட்டு பங்களிப்பு இல்லாமல், உள்ளூர் முதலீட்டாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 484 MW எனும் பாரிய காற்றாலை திட்டத்தை மேற்கொள்ள, அதானி போன்ற நிறுவனம் கொண்டுள்ள தனித்துவமான திறனை இது சுட்டிக் காட்டுகிறது. அத்துடன், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வேளையிலும் கூட, வேறு எந்தவொரு முதலீட்டாளரும் இணையாத ஒரு சந்தர்ப்பத்தில் அதானியின் இந்த உறுதியான அர்ப்பணிப்பானது, ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. அதானியின் முதலீட்டை இழப்பதன் மூலம், பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கான சாத்தியமான சந்தையாக எதிர்கால சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கையை கருத்தில் கொள்வது தடுக்கப்படலாம்.
0 comments :
Post a Comment