அமெரிக்க சுதந்திரத்தின் 248 ஆவது ஆண்டு நிறைவுவை முன்னிட்டு - தூதுவர் ஜுலீ சங் விடுத்துள்ள ஊடக செய்தி!· 248 ஆண்டுகளுக்கு முன்பு, ஜனநாயகத்தில் அமெரிக்காவின் சோதனை பற்றி எதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. எங்களது கொள்கைகள், அபிலாஷைகள் மற்றும் தொலைநோக்கு என்பன தொடர்பான ஒரு துணிச்சலான அறிக்கையுடன் நாங்கள் எங்களது சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினோம் – 'இந்த உண்மைகள் வௌிப்படையானவை என நாங்கள் வெளிப்படுத்துகிறோம், எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களைப் படைத்தவரால் சில மறுக்க முடியாத உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வுரிமைகளுள் உயிர் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமாக இருப்பதற்கான உரிமை மற்றும் மகிழ்ச்சியினைத் நாடிச் செல்வதற்கான உரிமை என்பனவும் அடங்குகின்றன. இந்த உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, ஆளப்படுபவர்களின் சம்மதத்திலிருந்து தமக்குரிய நியாயமான அதிகாரங்களைப் பெறுகின்ற அரசாங்கங்கள் மனிதர்களிடையே நிறுவப்படுகின்றன.’

· ஆனால் அமெரிக்க ஜனநாயகம் இந்தப் பிரகடனத்துடன் ஆரம்பித்து அரசியலமைப்பு உருவாக்கத்துடன் முடிவடையவில்லை. ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல, அது ஒரு செயல்முறையாகும். அடிப்படைக் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்புகளை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டிருக்கும் செயல்முறையாகும். எமது அரசியலமைப்பின் அர்த்தத்துடனும் மற்றும் குடிமக்கள் என்ற முறையில் விடயங்களைத் தெரிவு செய்வதற்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம்.

· ஜனாதிபதி பைடன் கூறியது போல், சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கான மற்றும் சுதந்திரமாக பேசுவதற்கான உரிமை அமெரிக்காவின் பலங்களில் ஒன்றாகும். அது நாங்கள் உடன்படாத கொள்கைகளை விமர்சிப்பதாகவும் அவற்றிற்கெதிராக குரலெழுப்புவதாக இருந்தாலும் கூட. முன்னோக்கி செல்வதற்கான வெவ்வேறு மார்க்கங்கள தொடர்பாக வாதிடும் போராட்டக்காரர்கள் அமெரிக்காவிலும் இலங்கையிலும் இவ்வுரிமைகளை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம். கருத்து வேறுபாடுகள் ஒரு சவாலான விடயமாக இருந்தாலும், அமெரிக்கா அதை வரவேற்கிறது. கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையே எமது அரசியலமைப்பிற்கான முதலாவது திருத்தத்தின் சாராம்சமாகும்.

· ஜனநாயகத்தை தொடர்ந்தும் நிலையாகப் பேணுவதற்கு உழைப்பு அவசியமாகும். சில சமயங்களில் ஜனநாயகம் பலவீனமானதாகத் தோன்றலாம். ஆனால், அமெரிக்கர்களாகிய நாங்கள் எமது ஜனநாயகத்தை பலப்படுத்துதல் மற்றும் எமது அரசாங்க நிறுவனங்களுக்குள் பொறுப்புக்கூறலையும் ஒருமைப்பாட்டையும் பின்தொடர்தல் ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொள்வோம் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

· அமெரிக்காவில் குடியேறியவர் என்ற முறையில், வாக்களிக்கும் உரிமை உட்பட, ஜனநாயகத்தில் பங்கேற்பதற்கான அதிகாரத்தையும் சிறப்புரிமையையும் நான் ஆழமாகப் போற்றுகிறேன். ஆனால் வெளிப்படையாக, வாக்களிப்பதென்பது ஒரு உரிமை மட்டுமன்றி, எந்தவொரு பெரிய தேசத்திலும் சுதந்திரத்தின் சாரத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு ஆழமான பொறுப்பாகவும் அது காணப்படுகிறது.

· ஜூலை 4ஆம் தேதி எனக்கு ஒரு விசேட முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். எனது குடும்பம் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தபோது, எனக்குத் தெரியாத மொழி பேசுகின்ற மற்றும் எதுவுமே பரிச்சயமற்ற ஒரு நாட்டிற்குச் செல்வதற்காக என் பெற்றோர் ஏன் கொரியாவை விட்டு வெளியேறுகிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. காலப்போக்கில், நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். தீர்க்கமான உறுதியுடனும் கடின உழைப்புடனும், எனது பெற்றோர் தங்கள் கனவுகளை எவ்வாறு அமெரிக்காவில் அடைய முடிந்தது என்பதை நான் கண்டேன். ஒரு பொறியியல் நிறுவனத்தின் வரைவு பிரிவில் தனது பணியைத் தொடங்கிய எனது தந்தை, இறுதியில், நாசா மனிதர்களுடன் கூடிய விண்வெளிப் பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உதவிய விண்கலத்திற்கான ஒரு கட்டமைப்பை வடிவமைக்கும் பணியைச் செய்தார். பாத்திரம் கழுவும் தொழிலாளியாக பணியைத் தொடங்கிய எனது அம்மா, ஒரு சிரேஷ்ட நூலகராகவும், தேவாலய உதவிக்குருவாகவும் உயர்ந்தார். அமெரிக்கக் கனவை வாழ்ந்து பார்த்த ஒருவர் என்ற வகையில், வெளிநாடுகளில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமை அடைகிறேன்.

· நாம் இன்று கொண்டாடுகிறோம் என்ற வகையில், அமெரிக்க கனவு வெறும் கனவு அல்ல, அது தொடர்ந்து பாடுபடுவதற்கான, நம்பிக்கைகொள்வதற்கான மற்றும் சாதிப்பதற்கான ஒரு வாக்குறுதியாகும் என்பதை நினைவில் கொள்வோம். ஒரு தேசத்தின் பிறப்பினை மட்டும் அமெரிக்கர்கள் இன்று நினைவுகூரவில்லை, மாறாக எம்மையும் அமெரிக்க - இலங்கை பங்காண்மையினையும் வரையறை செய்யும் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் ஒற்றுமை உணர்வையும் சுதந்திர உணர்வையும் நினைவுகூருகின்றனர். ஜனநாயகம், நட்பு மற்றும் வாய்ப்புகளுக்கான வாக்குறுதி ஆகியவற்றுடன் நாம் ஒன்றிணைவோம். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :