இயற்கை வளங்கள் நிறைந்து, நாலா புறமும் கடலால் சூழப்பட்ட இந்த நாட்டில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மலிந்து காணப்படுகிறது. இவ்வாறான அழகிய நாட்டில் வாழ்ந்துகொண்டு குருதிச்சோகை (Anaemia) நோயால் பாதிக்கப்படுவது ஆச்சரியமாக உள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸதீன் தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற குருதிச்சோகை (Anaemia) நோயை குறைக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கல்முனை பிராந்தியத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற நோய்களில் பெரும்பாலானோருக்கு (Anaemia) குருதிச்சோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனை குறைக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
கல்முனை பிராந்தியத்தில் குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற இந்த நோயானது தற்போது 26 வீதமாகக் காணப்படுகின்றது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி எதிர்வரும் ஆண்டில் இதனை குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். கடல் வளத்தினையும் மண் வளத்திணையும் கொண்டுள்ள எமது நாட்டில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மலிந்து காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த நோயினால் பாதிக்கப்படுவது கவலையான விடயமாகும். கற்பினித்தாய்மார்களுடைய போசாக்கு உணவு அவர்களது ஆரோக்கிய வாழ்வு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றார்.
பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பயிற்சி கருத்தரங்கில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச் சுகாதார மருத்துவத்துவ தாதியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மகப்பேற்று வைத்திய நிபுணர் பேராசிரியர் மார்க்கண்டு திருக்குமார் அவர்களும் டாக்டர் விவேக் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தார்கள்
0 comments :
Post a Comment