நூருல் ஹுதா உமர்-
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 9ஏ சித்திகளைப் பெற்றுக் கொண்ட 23 மாணவர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (04) காலை ஆராதனையோடு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபரும் கல்லூரியின் பழைய மாணவருமான கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனை படைத்த இம்மாணவர்களுக்கு பணப் பரிசில்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கல்லூரியின் அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் டாக்டர் சனுஸ் காரியப்பர் உட்பட நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவ சங்கத்தின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இச்சாதனையானது கல்முனை கல்வி மாவட்டத்தில் ஒரு பாடசாலை பெற்ற அதி சிறந்த பெறுபேறு என்பதோடு இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் கல்முனை சாஹிராவானது தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபீர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இங்கு உரையாற்றிய தொழிலதிபர் முபாறக்;
இக்கல்லூரி 75வது வருடத்தின் மைல்கல்லாக இருக்கும் இச்சாதனையோடு நின்று விடாமல் ஏனைய விடயங்களிலும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என வாழ்த்துவதாகவும் இனிவரும் காலங்களிலும் கல்விக்காக உதவுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment