அது அவ்வாறிருக்கையில் சத்தமின்றி இஸ்லாமிய இயக்கங்கள் ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக லெபனானிலிருந்து ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினர் இஸ்ரேலை நோக்கி தாக்குதலை நடாத்துகின்றனர். மற்றும் சிரியாவிலிருந்தும் சிறியளவிலான தாக்குதகள் நடைபெற்று வருகின்றது.
ஆனால் சுமார் 2200 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் யேமனில் இருந்துகொண்டு இஸ்ரேலை நோக்கி ஹௌதி இயக்கத்தின் அன்சார் அல்லாஹ் போராளிகள் சத்தமில்லாமலும் ஆர்ப்பாட்டமின்றியும் அவ்வப்போது பெரும் செலவில் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் ஆரம்பத்தில் ஆளில்லா விமானங்கள் மூலமாகவும், சிறியரக ஏவுகணை மூலமாகவும் தாக்குதலை மேற்கொண்டனர். நேற்று இரவு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகனை (Ballistic Missile) மூலமாக தாக்குதலை மேற்கொண்டனர்.
ஆனால் அன்சார் அல்லாவின் அனைத்து தாக்குதல் முயற்சிகளும் செங்கடலில் நிலைகொண்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பலின் வான்பாதுகாப்பு கட்டமைப்பினால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஹமாஸ் – இஸ்ரேல் போரில் முதன் முதலாக பலிஸ்டிக் ஏவுகணை அன்சார் அல்லாஹ் போராளிகளினால் ஏவப்பட்டுள்ளது. இது விலை அதிகமுள்ள ஈரானிய தயாரிப்பு ஏவுகணையாகும்.
அன்சார் அல்லாஹ் இயக்கமானது முழுக்க முழுக்க ஈரானிய ஆதரவு பெற்ற இயக்கமாகும். கடந்த பல வருடங்கள் யேமனில் உள்ள அன்சார் அல்லாஹ் போராளிகளை அழிப்பதற்காக சவூதி அரேபியா விமானத்தாக்குதலை மேற்கொண்டு தோல்வியடைந்தது.
பதிலுக்கு சவூதி அரேபியா மீது அன்சார் அல்லாஹ் போராளிகள் தொடர்ச்சியான ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்குதலை மேற்கொண்டு வந்தனர். இறுதியில் ஈரானுடன் சவூதி அரேபியாவுக்கு ஏற்பட்ட இராஜதந்திர உறவு காரணமாக சவூதி அரேபியா மீது நடாத்திய தாக்குதல்களை அன்சார் அல்லாஹ் போராளிகள் நிறுத்திக்கொண்டனர்.
கடந்த ஏழாம் திகதி பல முனைகளிலிருந்தும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதலை மேற்கொண்ட உடனேயே இஸ்ரேலை பாதுகாப்பதற்காக தனது விமானம் தாங்கி கப்பல் தொகுதியை அமேரிக்கா அனுப்பியது. இதில் சில கப்பல்கள் செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.
யேமனில் இருந்து அன்சார் அல்லாஹ் போராளிகளினால் இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தப்படலாம் என்று முன்கூட்டியே ஊகித்ததன் அடிப்படையில் அவர்களது தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment