கதிர்காமத்தில் சோழர்கால ஆலயம் கண்டுபிடிப்பு ! புனரமைக்க சித்தர்கள் குரல் சங்கர் ஜி ஏற்பாடு!சோழர்காலத்தில் நிருமாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் பிள்ளையார் ஆலயம் ஒன்று கதிர்காமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் திஸ்ஸ பகுதியில் தஞ்சை நகரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் பாழடைந்த நிலையில் காணப்பட்டது. கூரைகள் இறந்து விழும் நிலையில் இருந்துது. மூலவிக்கிரகம் அகற்றப்பட்டு வெறும் பீடம் மட்டுமே காணப்பட்டது.

அங்கு சித்தர்கள் குரல் அமைப்பினர் அதன் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையில் நேற்று முன்தினம் (16) ஞாயிற்றுக்கிழமை அங்கு விஜயம் செய்தனர்.
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி செ. சுதர்சன் இவ்வாலய நிலையை நேரிலறிந்து திருமலை பிரபல ஆசிரியர் பிரகாஷ் மூலமாக சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜியிடம் தெரிவிக்கப்பட்டது.

அகில உலக மகா சித்தர்கள் அறக்கட்டளை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான ஆலோசகரும் வாரணாசி பெலாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சித்தவித்யாகீர்த்தி வேதிக்பண்டிற் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர் குருஜி
தலைமையில் சித்தர்கள் குரல்அமைப்பினர் அங்கு விஜயம் செய்து
ஆலயத்தை பார்வையிட்டு ஆலய உரிமையாளர் விஸ்வநாதன் பராமரிப்பாளர் சிவகுமார் குடும்பத்துடன் கலந்துரையாடினர்.அதன்போது
ஆலயத்தை புனரமைத்து தருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனையடுத்து சித்தர்கள் அங்கு மடைவைத்து விடைகேட்டு முன்னால் இருமணிநேர சிறப்பு யாகத்தை நடாத்தினர். அதன்போது சூழவுள்ள தமிழ் சிங்கள மக்களும் இணைந்து கொண்டனர்.

யாகத்தில் சித்தர்கள் அமைப்பின் தலைவர் சிவசங்கர் ஜி நடாத்த சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் ,உப தலைவர் மனோகரன், நமசிவாய மகேஸ்வரன் சுவாமி, ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, தியாகராஜா, சிங்கப்பூர் டாக்டர் பி.மகேஸ்வரன், வீரமுனை கஸ்தூரன், மற்றும் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆலயத்தை புனரமைத்து உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்படுமென சிவசங்கர் ஜி அங்கு தெரிவித்தார்.
அங்கு ஆலய தலைவர் விஸ்வநாதன் கூறுகையில்..

கதிர்காமத்திலிருந்து அம்பாந்தோட்ட செல்லும் பிரதான வீதியில் அமைந்த திஸ்சமஹாராமவில் அமைந்த புராதனமான சைவத்தமிழ்க் கிராமம் "தஞ்சை நகரம்" என்று தொன்றுதொட்டு அழைக்கப்பட்டுவருகிறது.

அங்கு மன்னராட்சிக் காலத்தில் பெருநகராக விளங்கிய இக்கிராமம் இன்றும் "தஞ்சை நகரம்" என்றே அழைக்கப்படுகிறது. தஞ்சை நகரத்தில், பிரதான வீதியை மிக அண்மித்து, பிரதான வீதியை நோக்கியவாறு அமைந்திருப்பதுதான், யாத்திரிகர்களுக்கும் தன்னை நாடுவோருக்கும் ஞானம் வழங்கும் "குளவிப் பிள்ளையார்" ஆலயம்.

கதிர்காம யாத்திரிகர்கள் இந்த ஆலயத்தைக் கடந்து செல்லும்போது இப்பிள்ளையாரின் அனுமதியைப் பெற்றே செல்ல வேண்டும் என்ற மரபு காலங்காலமாகப் போற்றப்பட்டு வருகிறது.

யாத்திரைக்குத் தகுதி அற்றவர்களைப் பிள்ளையார் குளவி வடிவில் தண்டிப்பார் என்றும் அதனாலேயே "குளவிப் பிள்ளையார்" என்ற பெயர் புராதன காலத்திலிருந்து வழங்கப்பெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் சித்தர்களாலும் ஞானிகளாலும் பூசிக்கப் பெற்ற புனிதம் மிக்க இவ்வாலயமும் இது அமைந்த நிலமும் ஆங்கிலேய ராச்சியம் ஓச்சிய ராணிக்கு உரியதாகியது.

இந்த நிலையில், இவ்வாலயத்தின் அருளைப் பெற்று உயர்ந்த மகான் மதனகுரு சாமி என்பவர் 1903 இல் ராணியிடமிருந்து கோயிலையும் நிலத்தையும் பெரும் முயற்சி செய்து பெற்றார்.

இந்தியாவிலிருந்து ஐந்தரை அடி உயரமான அழகிய ஒரு பிள்ளையார் சிலையைக் கொணர்வித்து 1929இல் அதைத் ஸ்தாபித்து அழகிய கட்டடக்கலையுடன் கூடிய ஆலயமாக்கினார்.

மதனகுரு சாமியின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவியும் முருக பக்தையுமான பழநி அம்மா இந்த ஆலயத்தைப் பேணிவந்தார்.

நாட்டில் 83 இல் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் இக்கோயில் பாதிப்புக்குள்ளாகி அழிவடையும் நிலைக்குச் சென்றது. "கிராமோதயம் 87" கொண்டாட்டங்களை முன்னெடுத்த அப்போதைய பிரதமர் ஆர். பிரேமதாசா அவர்களின் பணிப்புரையின் பேரில் 23.06.1987 அன்று இந்த ஆலயம் மீளவும் திருத்தியமைக்கப்பெற்றது.

பிரதமர் ஆர். பிரேமதாசா அவர்களால் புனரமைக்கப்பெற்ற ஆலயத்தின் முக்கியத்துவத்தை அப்போது நிறுவப்பெற்ற கல்வெட்டு சிறப்புறக் காட்டுகிறது. நாட்டில் இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 2007 இல் இந்த ஆலயம் மீளவும் பாதிப்புக்குள்ளானது. இங்கிருந்த ஐந்தரை அடி உயரமான மூலமூர்த்தி காணாமற்போய்விட்டது.
தடயமற்று அழியும் தறுவாயில் உள்ள இந்த ஆலயத்தில் கடையில் வாங்கிய ஒரு சிறிய பிள்ளையாரை வைத்து இப்போது வழிபடுகின்றனர்.
மதனகுருவின் பெறாமகனாகிய கந்தையா விஸ்வநாதன் ஆகிய நானும் மனைவியும் இந்த ஆலயத்தைப் பராமரித்து வருகின்றோம்.

இந்த ஆலயத்தைச் சூழவும் சுமார் 50 சைவத் தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றன. சிங்கள மக்களும் இவ் ஆலத்திற்கு வந்து செல்கின்றனர். சூழ உள்ள சைவத் தமிழ்க் குடும்பங்கள் வறிய நிலையில் உள்ளன. ஆனால் அங்குள்ள எல்லோருக்கும் ஆலயத்தைத் திருத்தி அமைக்கவேண்டும் என்ற பெருவிருப்பு உள்ளது.
இந்த ஆலயம் திருத்தி மீளமைக்கப்பெற்றால் அவ்வாலயச் சூழலில் உள்ள சைவத் தமிழர்களுக்கும் பாத யாத்திரிகருக்கும் சிங்கள பக்தர்களுக்கும் பெரும் துணையாக இருக்கும்.

இந்த சுற்றுச்சூழலிலே தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். ஆரம்பத்தில் தஞ்சை நகரம் என்றிருந்த இந்த பிரதேசம் இன்று சுதுகம்பல என அழைக்கப்படுகின்றது. தூர்ந்து கிடக்கும் இவ் ஆலயத்தை புனரமைத்து தருமாறு வேண்டுகிறேன் என்றார்.

மிக விரைவில் ஆலயத்தை புனரமைத்து மக்கள் வழிபாட்டிற்காக திறந்துவைப்பதாக சங்கர் ஜி அங்கு தெரிவித்தார்.

கலந்து கொண்ட அனைவருக்கும் உருத்திராட்ச மாலை அணிவித்ததுடன் அனைவருக்கும் ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.
ஆலயத்தை புனரமைத்து மக்களின் வழிபாட்டிற்காக திறந்து விடும் நாளை இந்துக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :