கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முதலாவது புவியியல் பேராசிரியராக கலாநிதி க.இராஜேந்திரம் பதவியுயர்வு!வி.ரி. சகாதேவராஜா-
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் புவியியல் துறையின் முதலாவது புவியியற் பேராசிரியராக கலாநிதி க.இராஜேந்திரம் பதவியுயர்வு பெற்றுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் தலைமையில் கடந்த வாரம் கூடிய கிழக்குப் பல்கலைக்கழக பேரவை இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது. இதுதொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் 30.03.2023 அன்று துணைவேந்தரால் கையளிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி க.இராஜேந்திரம் மட்டக்களப்பு தேற்றாத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது பாடசாலைக் கல்வியை தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயம், தேற்றாத்தீவு மகா வித்தியாலயம், மற்றும் பட்டிருப்பு தேசியபாடசாலை ஆகியவற்றில் பயின்றுள்ளார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புக் கற்கையினை மேற்கொண்டு முதன்மை தேர்ச்சி பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். தனது முதுதத்துவமாணிப் பட்டத்தைப் யாழ் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்ட இவர், தனது கலாநிதிப் பட்டத்தினைப் இந்தியாவின் புதுடில்லியிலுள்ள புகழ்பெற்ற ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் இயங்கும் CSSTEAP இன் புலமைப்பரிசில் பெற்று புவியியல் தகவல் ஓழுங்கு மற்றும் தொலையுணர்வு நுட்பத்தில் (GIS & RS) பட்டப்பின் டிப்ளோமாவினை பெற்றதுடன் பின்னர் எண்ணியல் வானிலை எதிர்வுகூறல் (NWP) தொடர்பான கற்கையினையும் IIRS இல் பூர்த்திசெய்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் முதுநிலை விரிவுரையாளராக (தரம் 1) பதினேழு வருடங்கள் பணியாற்றிய இவர் 2008ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராக (தரம் 1) இணைந்து கொண்டார்.

இவர் புவியியல் துறையினதும், கலை கலாசார பீடத்தினதும், பல்கலைக்கழகத்தினதும் வளர்ச்சிக்கு தனது காத்திரமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளார். குறிப்பாகப் புவியியல் துறையின் தலைவராகவும், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார். உயர்கல்வி முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியினை தாய்லாந்தில் பெற்ற இவர் பீடாதிபதியாக இருந்த காலத்தில் கலைகலாசார பீடத்தில் கலைத்திட்ட மாற்றம், மாணவர் கணினி ஆய்வுகூடவசதிகள், கலையரங்க வசதிகள், புதிய துறை, புதிய பணியிட உருவாக்கம் என பலமுக்கிய அவிருத்திப்பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கலை கலாசார பீடத்தினுடைய மூதவைக்கான பிரதிநிதியாக, மூதவையின் பேரவைக்கான பிரதிநிதியாக, மூதவையின் திருகோணமலை வளாகத்தின் முகாமைத்துவ அவைப்பிரதிநிதியாக, கலை கலாசார பீடத்தின் கலைத்திட்ட மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக, பல்கலைக்கழக கலைத்திட்ட மதிப்பீட்டுக் குழுவின் அங்கத்தவராக, கலைகலாசார பீடத்தின் பட்டப்பின் படிப்புக்கள் அலகின் இணைப்பாளராக, கலை கலாசார பீடத்தின் பட்டப்பின்படிப்புக்கள் அவையின் தலைவராக, சமூக மானிடவியல் பீடத்திற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிலையியற் குழுவின் அங்கத்தவராக, கலை கலாசார பீடத்தின் கௌரவபட்டங்களுக்கான பரிந்துரைக்குழுவின் தலைவராக, மூதவையின் கௌரவபட்டங்களுக்கான பரிந்துரைக்குழுவின் உறுப்பினராக, கலை கலாசார பீடத்தின் ஆய்வு மாநாட்டுக்குழுத் தலைவராக, இணைப்பாளராக என்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குரிய பல்வேறு நிருவாகப் பணிகளையும் பொறுப்புக்களையும் ஏற்று பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் துறையில் கலைமாணி, முதுமாணி, முதுதத்துவமாணி, கலாநிதிக் கற்கைகளுக்கான விரிவுரையாளராகவும், வழிகாட்டியாகவும், பரீட்சகராகவும் பணியாற்றி வந்துள்ளதுடன் இலங்கை, இந்நிய பல்கைலைக்கழகங்களின் கலாநிதி, முதுதத்துவமாணி ஆய்வுகளுக்கான பரீட்சகராகவும் பணிபுரிந்து வருகின்றார். புவியியல்துறை சார்ந்து புலமையாளர்களை வளர்த்தெடுப்பதில் நீண்டகாலமாக உழைத்து வரும் இவர் புவியியல் தொடர்பாக பலஆய்வுக்கட்டுரைகளை சர்வதே ஆய்வுச் சஞ்சிகைகளில் எழுதி வெளியிட்டுள்ளதுடன் பல சர்வதேச ஆய்வு மாநாடுகளில் தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றைச் சமர்ப்பித்து தனது துறைசார் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி வந்துள்ளதுடன் அதற்கான பல விருதுகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
தனது நீண்டகாலப் புலமைத்துவத்தினாலும், நிபுணத்துவத்தினாலும் பேராசிரியருக்கான தகைமைகளைப் பெற்றுள்ளமையினை பல்கலைக்கழக புலமைத்துவ உயர்சபை மதிப்பீடு செய்து சிபாரிசு செய்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :