கல்வித்தாகத்தில் சாதனை புரிந்து வரும் கட்டுவன்வில் முஸ்லிம் வித்தியாலயம் : உயர்தரம் ஆரம்பிக்கப்பட வேண்டும் பாடசாலை சமுகத்தின் கோரிக்கை.



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லைக்கிராமமான திம்புலாகல கல்வி வலயத்திற்குட்பட்ட கட்டுவன்வில் முஸ்லிம் வித்தியாலயம் பல்வேறு பௌதீக வளப்பற்றாக்குறைகளுடன் தொடர்ந்தும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளில் சாதனை புரிந்து வருகின்றது.
கடந்த வருடம் (2022) இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர சாதாரணப்பரீட்சையில் மாணவி பி.றிஸ்கானா ஒன்பது பாடங்களிலும் ஏ தர சித்தியைப்பெற்று பாடசாலைக்கும் கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். இப பெறுபேறு திம்புலாகல கல்வி வலையத்திலுள்ள தமிழ் மொழி மூலம் பாடசாலைகளில் இதுவரை பெற்றிராத சாதனையாகும்.

ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக வளப்பற்றாக்குறை காரணமாக அதிகஷ்ட பிரதேச பாடசாலையாக விளங்கும் இப்பாடசாலையில் 32 மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சைக்குத்தோற்றி 70 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகைமை பெற்றுள்ளனர்.

மேலும், என்.எப்.றிஸ்கானா (08ஏ, 01பி), ஏ.எச்.எப்.ஜெஸா (07ஏ, 01பி, 01சி) சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு முன்னுதாரணமானவர்களாகத் திகழ்கின்றனர்.

இப்பாடசாலை அமைந்துள்ள கட்டுவன்வில் கிராமம் பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒரு எல்லைக்கிராமமாகும். இரு கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ள இக்கிராமத்தில் 4,800 மக்கள் வாழ்கின்றனர்.


இப்பாடசாலையில் 650 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இப்பாடசாலை 1918ல் கட்டுவன்வில் அரசினர் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1947, 1957 மற்றும் 1977ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கடந்த 30 வருட பயங்கரவாத யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட இக்கிராமத்தின் கல்வி வளர்ச்சி பின்தங்கிய நிலையிலயே காணப்பட்டது.

எவ்வாராயினும், பிற்பட்ட காலங்களில் இப்பாடசாலையில் பல்வேறுபட்ட மேலதிக பாட செயற்பாடுகளான தமிழ்த்தின போட்டி, விளையாட்டுப் போட்டி என்பன இடம்பெறக்கூடிய பாடசாலையாக உருவாகியிருந்தது.
1990ல் பாடசாலை மாணவர்கள் முதன் முறையாக கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் கற்றுக் கொண்டிருந்த போது 1987இல் உருவாக்கப்பட்ட துரித மகாவலி அறிவியல் திட்டத்தின் மூலம் செவன்புற முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு மாணவர்கள் மாற்றம் செய்யப்பட்டு அப்பாடசாலையை முன்னோக்கி கொண்டு செல்ல அனுமதித்தனர்.

அக்காலப்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக கட்டுவன்வில் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து எந்தவொரு மாணவருக்கும் பரீட்சை எழுதுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

90களில் ஏற்பட்ட விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலினால் ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர் போன்ற அண்மைய கிராமத்தில் வசித்த மக்கள் துரத்தியடிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வந்த போது, அவர்களுக்கு பாடசாலைக்கட்டடம் அடைக்கலம் கொடுத்தது. இவ்வாறான சூழ்நிலை காரணமாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீண்டும் இஸ்தம்பிதமடைந்து பாதிக்கப்பட்டது.

இ;பாடசாலையில் மாணவர்கள் தரம் 9 வரையே கல்வியைத் தொடர்ந்தனர். மேற்கொண்டு கற்பதற்கான சூழலோ வளங்களோ அப் பாடசாலையில் வழங்கப்படவில்லை.

1987ல் இலவசக்கல்வி மூலம் நாடளாவிய ரீதியில் 92 சத வீதமான எழுத்தறிவைக் கொண்ட எமது நாட்டில் 70 சத வீதத்திற்கும் அதிகமான மக்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாக இருப்பதைக் கண்டு நலன்விரும்பிகள் சேர்ந்து 2017ல் ஆர்ப்பாட்டம் மூலம் பாடசாலைக்குத் தேவையான வளங்களைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி க.பொ.த சாதாரண தரம் கற்பதற்காக மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரி பல சிறிசேன அவர்களால் 8 வகுப்பறைகளைக் கொண்ட இரு மாடிக்கான கட்டடத்திற்கான அடித்தளமிடப்பட்டு 2019 அவரது திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

அவரது வருகையின் போது நூலகம், நிருவாகக் கட்டடம், கூட்ட மண்டபம் போன்ற வளங்களைப் பெற்றுத்தருவதாகவும் அதற்கான பூர்வாங்க முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

2018ல் கட்டுவான்வில் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் முதன் முறையாக சாதார்ண தரப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இதன்படி, என்.சாஜிதா என்ற மாணவி 3ஏ, 5பி, 1சி பெறுபேற்றையும் 2019ல் எம்.எல்.ஹாரித் என்ற மாணவன் 7ஏ, 2பி என்ற பெறுபேற்றையும் 2020ல் என்.என்.நிப்ராஸ் 5ஏ,2பி,2சீ ஆகிய பெறுபேற்றைப் பெற்று 2021ல் மேற்படி மாணவியின் சாதனைப் பெறுபேற்றையும் எமது கல்லூரி பெற்றுக் கொண்டது.

எனவே, இதன் தொடர்ச்சியாக இக்கிராமத்தில் எதிர்வரும் காலங்களில் க.பொ.த உயர்தரம் வரை கற்பிப்பதற்கான பாடசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
இப்பகுதி மக்களின் கோறிக்கை நிறைவேற்றப்படுவதற்கு குறித்த பாடசாலைக்கறிய கல்வி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கருசனை செலுத்த வெண்டியது கட்டாயமாகும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :