சிகெரெட்டின் மீதான வரியை அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் வரி வருமானத்தை அதிகரித்து அதனூடாக நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்க வேண்டும் இளைஞர் பாராளுன்ற அமைச்சர் சபான்ஹஸ்பர் ஏ ஹலீம்-
2021 - 2022 ம் ஆண்டுகளில் முறையான முறையில் சிகரட்டிற்கான வரி அறவிடப்படாமையினால் சுமார் ரூபா 50 பில்லியன்களை அரசாங்கம் இழந்துள்ளது. இழக்கப்பட்ட இத்தொகையை முன்மொழியப்படவுள்ள 2023 ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என   மாவட்ட ஒருங்கிணைப்பு இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்  ற.முஹம்மது ஸபான் தெரிவித்தார்.

மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற இளைஞர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்

கொவிட் -19 தொற்று காலத்தில் உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், இலங்கையை மிகவும் பாதித்துள்ளமை தொடர்பாக நாம் அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக  நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது. மேலும் எமது நாடு, கடந்த காலத்தில் ஏற்றுமதி உட்பட சுற்றுலாத்துறையினூடாக ஈட்டிக்கொள்ளக் கூடிய பெருந்தொகையை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக நாட்டின் வருமானம் சரிவதோடு, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றமும் உயர்வடைந்து வருகின்றன . இதனால் சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிலைமையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பிரதான பொறுப்பாகும். 

இப்பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக பல்வேறு ஆலோசனைகள் நிதியமைச்சினால் முன்வைக்கப்பட்டன, அவற்றில் சில ஆலோசனைகளுக்கு பொதுமக்களின் எதிர்ப்புக்கள் வெளியாகின. எனினும் பொது மக்கள் பெரிதும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாத சிகரட் மீதான வரியை அதிகரிப்பதற்கு 2019,2020,2021, ஆம் ஆண்டின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியமைச்சினால் முன்மொழியப்படவும் இல்லை, கவனம் செலுத்தப்படவும் இல்லை. இந்த தீர்மானத்தின் மூலமாக நாட்டிற்கு கிடைக்கப்பெறவிருந்த சுமார் ரூபா 100 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கை புகையிலை நிறுவனம் ( CTC ) எனும் பெயரில் இயங்கி வரும் 84.14 வீதமான பங்குகளிற்கு உரிமம் கொண்ட பல்தேசிய நிறுவனமான பிரித்தானியா, அமெரிக்கா புகையிலை நிறுனத்திடமிருந்து, பெற்றிருக்க வேண்டிய தொகையான ரூபா 100 பில்லியன்கள் எனும் தொகை இழக்கப்பட்டமையானது, நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு தாக்கம் செலுத்தும் காரணிகளில் மிக பிரதான காரணியாகும். கடந்த இரண்டு வருடங்களாக அத்தியவசிய பொருட்களின் வரி மென்மேலும் அதிகரித்துள்ளதோடு, அத்தியவசியமற்ற பொருளான சிகரட் மீதான வரி எந்தவொரு காரணத்திற்காகவும் அதிகரிக்கப்படவில்லை. இச்சம்பவமானது புகையிலை நிறுவனம் நிதியமைச்சின் மூலமாக பல தந்திரோபாயமான நுணுக்கங்களை மேற்கொண்டு வருகின்றமை வெளிப்படுகின்றன 

எனது சென்ற வருட முன்னெடுப்பில் ஊடாக 2022ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் சிகரெட் மீதான உற்பத்தி வரி விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது இதன் மூலம் ரூபா எட்டு ( 8 ) பில்லியன் வருமானம் ஒன்றை அரசாங்கம் பெற்றுக் கொண்டது. 

கடந்த காலங்களில் எவ்வாறான முறையில் சிகரட் மீதான விலையேற்றம் ஏற்பட்டது என்பதினை  இவ்வட்டவணையில் காண்பிக்கப்பட்டுள்ளது

            வருடம்      விலை ( ரூபா ) 
             2015              33
             2016              35
             2017              50
             2018              55
             2019              65
             2020              65
             2021              65
             2022              70

கடந்த 2019,2020,2021 ம் ஆண்டு காலப்பகுதிகளில் சிகரட் மீதான வரி அதிகரிப்பு இடம்பெறவில்லை. இவ்விரண்டு வருடங்களுக்குள் முறையாக சிகரட் வரி அதிகரிப்பை குறைந்த பட்சம் ரூபா 20.00 இனால் உயர்த்தியிருப்பின், சுமார் ரூபா 100 பில்லியன்களை அரசாங்கம் வருமானமாக பெற்றிருக்கலாம்.

இழக்கப்பட்ட இவ்வரி வருமானத்தின் பெறுமதியை கீழ்காணும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம். 

இந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஐந்து ரூபாவினால் வரி அதிகரிக்கப்பட்டது இதன்மூலமாக நாட்டிற்கு எட்டு (8) மில்லியன் வருமானத்தினை அரசாங்கம் பெற்றிருந்தது

- [ ] தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு செலவான தொகை : ரூபா 100 பில்லியன்கள் 

- [ ] மொரகஹாகந்த நீர்ப்பாசனத் திட்டத்திற்கு செலவான தொகை : ரூபா 91 பில்லியன்கள். 

- [ ] விமானநிலைய நுழைவிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைத்தல் திட்டத்திற்கு செலவான தொகை : ரூபா 39 பில்லியன்கள்

- [ ] மத்தளை விமான நிலையத்திற்கு செலவாகிய தொகை : ரூபா 21 பில்லியன்கள் 

நிதியமைச்சின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய சுமார் ரூபா 100 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெற்றிருக்காவிடின் அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கான வரியை இந்தளவு அதிகரித்திருக்க நேரிட்டு இருக்காது. 

இறுதியாக 2019 ம் ஆண்டு சிகரட் மீது வரியை அதிகரித்தமையினால் இலங்கை அரசாங்கத்திற்கு ரூபா 94.3 பில்லியன்கள் வருமானம் அதிகரித்துள்ளது என 2020 ம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையில் ( 155 ம் பக்கம் ) குறிப்பிடப்பட்டுள்ளது . இதற்கு முன்னர் மத்தியவங்கி அறிக்கைகளில் சிகரட் மீதான வரி அதிகரிப்பானது ஒரு வெற்றியளிக்கும் வழிமுறை என்பதை நிரூபித்திருந்தாலும், அத்தியவசிய பொருட்கள் மீதான வரி மென்மேலும் அதிகரிக்கும் காலப்பகுதியில் மற்றும் அரசாங்கம் மக்களின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் இத்தருணத்தில் நிதியமைச்சானது இரண்டு வருடங்களாக சிகரட் மீது வரி அதிகரிப்பை மேற்கொள்ளாமல் இருந்தது ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகின்றது. 

மேலும் சிகரட்டிற்கான வரியை அதிகரிப்பதில் தாமதம் ஏற்படல், முறையற்ற விலை அதிகரிப்பு போன்ற புகையிலை நிறுவனத்திற்கு நன்மை பயக்கும் பல விடயங்களிற்கு முக்கிய காரணமாக அமைவது, இதுவரையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிகரட் மீதான " முறையான வரி முறைமை " இல்லாமல் இருப்பதே ஆகும். தற்போதுள்ள வரி அறவீட்டு முறைமையான சிகரட்டின் நீளத்திற்கு வரி அறவிடும் சிக்கலான வரிக் கொள்கையை நீக்குவதன் மூலமும், விஞ்ஞான ரீதியான எளிமைப்படுத்தப்பட்ட வரிக்கொள்கையை கொண்டுவருவதன் மூலமும் சிகரட் மீது அதிக பட்ச வரியை அறவிட்டு அரசாங்கத்தின் இலாபத்தை அதிகரித்துக்கொள்ள முடிவதோடு, சட்டவிரோதமான முறையில் புகையிலை நிறுவனம் ஈட்டி வரும் இலாபத்தை தடுக்கவும் முடியும். 2021 ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் " வரிக்கொள்கை " எனும் தலைப்பின் கீழ் பயன்தகு வரிமுறைமை அறிமுகப்படுத்தப்படும் என அப்போதைய பிரதமரும் நிதியமைச்சருமான கௌரவ. மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கூறப்பட்டது. எனினும் இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் நிதியமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டின் நலனுக்காக சிகரட்மீது வரி விதிக்காது, பல்தேசிய நிறுவனத்திற்கு சாதகமாக கொள்கை முடிவுகளை எடுப்பதே வரலாறு முழுவதும் நிதியமைச்சின் செயற்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைமையை சீர்செய்ய வேண்டியது அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும். 

மேலும் சிகரட் மற்றும் புகையிலை மீது வரியை அதிகரிக்கும் போது பாவனையில் சடுதியான வீழ்ச்சி ஏற்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது ( உலக சுகாதார ஸ்தாபனம் WHO / NMH / PND / 14.2 ). பொதுவாக சிகரட் மீது 10 வீதம் வரி அதிகரிக்கப்படும் போது அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்படுவதோடு, எம்மை போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சிகரட் பாவனையானது 5 வீதத்தினால் குறைவடையும்.

சமூகமயமாக்குவதற்கு சிகரட் மீது வரி அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சட்ட விரோதமான சிகரட்டுக்கள் அதிகரித்துவிட்டன அல்லது பீடி பாவனை அதிகரிக்கும் என பல போலியான பிரச்சாரங்களை புகையிலை நிறுவனம் ஊடகங்களினூடாக முயற்சிக்கின்றது. மேலும் வருடாந்தம் அரசாங்கத்தினால் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்படும் காலங்களில் புகையிலை நிறுவனம் இது போன்ற போலியான கருத்துக்களை பரப்புவது வழக்கம். சட்ட விரோதமான சிகரட் வியாபாரம் என்பது புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு வியாபாரம் என்பதோடு, பீடி பாவனையானது இலங்கையில் அதிகரிக்கவில்லை என்பது பல ஆய்வுகளில் இருந்தும் தெரியவந்துள்ளது. இவை அனைத்துமே புகையிலை நிறுவனத்தின் வியாபார நுணுக்கங்கள் என்பதை நாம் நினைவூட்டுகிறோம். 

மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, நாடு பொருளாதார நெருக்கடியிலிருக்கும் இந்த நிலைமையில் இன்னுமொரு இழப்பை சந்திக்காமல் இருப்பதற்காகவும் , அவ்விழப்பை தடுப்பதன் மூலம் நாட்டின் வருமானத்தை உயர்த்துவதற்கும், பொது மக்களின் சலுகைகளை வழங்குவதற்கும், இம்முறை நவம்பர் மாதம் முன்வைப்பதற்கு எதிர்ப்பார்க்கும் 2023 ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் கீழ்காணும் படிமுறைகளை பின்பற்றுமாறு கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றோம்.

- [ ] சிகரட்டிற்கான அதிக பட்ச வரியை பணவீக்கம் மற்றும் கொள்வனவு திறனுக்கு ஏற்ற வகையில் விதித்தல்.

- [ ] வரி அதிகரிப்பின் பின்னர், வரிப்பணத்திற்கு மேலதிகமாக புகையிலை நிறுவனம் மூலம் விலை நிர்ணயிக்கப்பட்டு அந்நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. ( கடந்த வருடங்களில் முறையான வரி அதிகரிப்பு இடம்பெறாதமையினால் அதிகரிக்கப்பட்ட சிகரட்டிற்கான விலையின் 50 வீதம் சிகரட் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இது அரசாங்கம் பெற்றுக்கொள்ளவிருந்த இலாபமாகும் ) 

- [ ] 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட உரையில் நிதி அமைச்சர் கௌரவ. பசில் ராஜபக்ஷ அவர்களினால் கூறப்பட்ட பயன்தகு வரி விதிப்பு முறைமையை நிறுவுதல். 

மக்கள் நலன் விரும்பும் பிரதிநிதி என்ற வகையில், எதிர்வரும் 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2023 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சிகரட் மீது முறையாக வரி அறவிடப்படும் கொள்கையொன்று உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என தீர்க்கமாக நாம் நம்புகின்றேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :