தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சபை உறுப்பினர்களின் மனைவிமார் பிள்ளைகள் குடும்பத்தினர் முதன் முதலில் பங்குபற்றிய அமர்வு காரைதீவு பிரதேச சபையில் நேற்றுமுன்தினம் (14) இடம்பெற்றது
காரைதீவு பிரதேச சபையின் 57 ஆவது மாதாந்த சபை அமர்வு நேற்று முன்தினம் சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
அச்சமயம் வழமைக்கு மாறாக , பல்கலைக்கழக மாணவர்களும், உறுப்பினர்களின் மனைவிமார் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
வரலாற்றில் இதுவரை இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றதில்லை.
நேற்று முன் தினம்(14) இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விபச்சார விடுதி என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினருக்கு தவிசாளர் கண்டனம் தெரிவித்து பேசினார்.
உபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர், உறுப்பினர்களான இஸ்மாயில் ,பஸ்மீர், நேசராசா ,மோகனதாஸ், ஜெயராணி, சசிக்குமார், குமாரசிறி, றணீஸ் ஆகிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ,காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபான சாலை அகற்றப்பட வேண்டும் என்ற பிரேரணையில் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ஏகோபித்த கருத்துக்களை பரிமாறினார்கள்.
அவரவர் ஆசனங்களிலே புதிதாக பொருத்தப்பட்ட ஒலி வாங்கி மற்றும் பெயர்ப்பலகை சகிதம் உறுப்பினர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இறுதியாக, தவிசாளரின் விசேட விருந்துபசாரம் இடம்பெற்றது.

0 comments :
Post a Comment