நாம் வரிசைகளில் நிற்கிறோம் (கவிதை)



திகாலைத் தொழுகைக்காக
கண் விழிக்கும் பனிக்குளிரில்
விரிப்பை மடித்து வைத்த கையோடு
ஒரு கோப்பைத் தேநீருக்காகக் காத்திருக்கும் வீடு
இப்போது
அங்கங்கே வரிசைகளில்
கால் கடுக்கக் காத்து நிற்கிறது.
மாதம் நான்காக வந்து போகும்
வெள்ளிக்கிழமை என்பது
ஊரின் சிறிய பெருநாளைப் போன்றதொரு
குதூகலிப்பால் நிறைந்திருந்தது
முற்றம் முற்றமாய் மணம்பரப்பும்
தாழிப்பு வாசனையும்…
பள்ளிவாசல் விறாந்தைக்கு வெளியிலும்
தக்பீர் கட்டி தொழுகைக்கு நிற்பவர்கள்
தெருக்களைக்கடக்கும் போது
நாசிக்குள் மிதக்கும்
அத்தர் மற்றும் வாசனைத்திரவியங்களின்
தூக்கலான நறுமணமும்
நாளாக நாளாக
குறைந்து செல்வது வேதனையளிக்கிறது
எரிக்கிற பகல் வெயிலின் நடுவில்
மின்சாரம் துண்டிக்கப்படும் இடைவெளிகளில்
ஒரு அங்குலக் காற்று புக முடியாத
கட்டட நெரிசலுக்குள் புழுங்கிய படி
மனிதர்கள் வாழ நேரும் போது
எழும் எரிச்சலுக்குள் தெந்தரவு செய்யும் குழந்தைகளை
அம்மாக்கள் திட்டித் தீர்க்கிறார்கள்.
பொருட்கள் பெரும் மலைகளைப் போல
விலையேறி தலைக்குள்
பெருந்துயர் கரையான்கள்
வரிசையாய் வந்து அமர்ந்து
வாழ்க்கையை அரிக்கத்துவங்கி இருக்கிறது
நாம் வரிசைகளில் நிற்கிறோம்
எல்லாம் இருந்த ஒரு கடந்தகாலம்
எங்களுக்கிருந்தது என
நம் இளம் தலைமுறைக்கு கதைகளைச் சொல்லிக்கொண்டு
நாம் வரிசைகளில் நிற்கிறோம்
ஒரு விறகடுப்பிற்காக
மண்ணெண்னை விளக்கிற்காக
பால் மாவிற்காக
பின் சீனிக்காக
வாழ்வதற்காக
வாழ்வின் மீந்த பொழுதுகளுக்காக
மயங்கி வீழ்தழுக்காக
பின் சரிந்து விழுந்து இறப்பதற்காக
நாம் வரிசைகளில் நிற்கிறோம்
பெட்ரோல் வரிசையில்
ஏழாவது மரணம் நிகழ்ந்திருக்கிறது
இது இன்றைய நாளின் தலைப்புச் செய்தி.
றஹீமா பைஸல்
15.04.2022
(“தலைமுறைக்கு தீ வைத்தவர்கள்” கவிதைத் தொகுப்பில் இருந்து..)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :