நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பில் ஊடக நிறுவனங்கள் முன்வைத்திருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (10) ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
பிரதமரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டமை அடங்கலாக அனைத்து வன்முறைச் சம்பவங்களையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எந்த வகையிலும் வன்முறைச் சம்பவங்களை அனுமதிக்க முடியாது எனவும் வன்முறைகள் மூலம் நாட்டில் ஸ்திரமற்ற நிலையே ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலைமைகளால் நாட்டின் பிரஜைகள் மத்தியில் உள்ள ஒற்றுமை சீர்குலையும் என்பதோடு, நாட்டின் பொருளாதார நிலைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு தொடர்பிலான சர்வதேசத்தில் உள்ள நற்பெருக்கு களங்கம் ஏற்படும் என்பதால், இந்த வன்முறைகளுக்கு துணை போக வேண்டாம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி பதவி விலகுவதாக இருந்தால், ஜனாதிபதி தனது கையொப்பத்துடன் கூடிய இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதன்போது கூறினார்.
அவ்வாறு கையளித்தால் மாத்திரமே ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.TM

0 comments :
Post a Comment