நாடு மிக மோசமான பொருளாதார நிலையைச் சந்தித்துள்ள தற்போதைய காலகட்டத்தில் இதற்கான உரிய தீர்வுகளை எட்ட அரசு விரைந்து செயற்பட வேண்டுமென அரசை வலியுறுத்தி எமது தொழிற்சங்கம் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் உயர்கல்வித் துறையில் முக்கிய பாத்திரத்தை வகிக்கும் ஒரு பொறுப்புள்ள ஊழியர் சங்கம் என்ற வகையில் எமது சங்கம் தற்போதைய அரசின் பொருளாதாரப் போக்கைத் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றது. இந்த அரசாங்கம் கடைப்பிடித்த பொருளாதார நடைமுறைகள் காரணமாக நாடு வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றது.
பொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக் குறியாகி மக்கள் வீதிக்கு இறங்கி அரசிற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை கண்கூடு. மேலும் நாட்டின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் நாளுக்கு நாள் சொல்வொணார்த் துயரங்களை அனுபவித்து வருகின்றமை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டு வருகின்றது. அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாக சாதாரண மக்கள் மாத்திரமன்றி பல்கலைக்கழகம் உட்பட ஏனைய அரச மற்றும் தனியார் தொழிற்துறையில் பணிபுரிவோரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி சகல தரப்பினரையும் அரசிற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்ளச் செய்வதற்கான வாய்ப்புக்களைக் தோற்றுவித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமை சீர் செய்யப்பட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதுடன் அரச இயந்திரம் சீராக நடைபெற வேண்டும் என்பதில் எமது ஊழியர் சங்கம் அக்கறையாக உள்ளது.
மாறாக, இந்நிலை நீடிக்குமிடத்து அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுக்கும் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டங்களில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் தனது பங்களிப்பை வழங்கப் பின்னிற்கப் போவதில்லை என்ற செய்தியையும் அரசிற்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
0 comments :
Post a Comment