இரண்டு கட்ட கலந்துரையாடல்களாக நடைபெற்ற இச்சந்திப்புகளில் முதலாவது சந்திப்பு NFGGயின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் பிரிவு சகோதரிகளுடனானதாக அமைந்திருந்தது. காத்தான்குடி கடற்கரையில் அமைந்துள்ள ரையான் கார்டன் வளாகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் SJBயின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மதும பண்டார, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்றூப், முன்னாள் பிரதியமைச்சர் திரு.கணேசமூர்த்தி அவர்கள் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திரு. T.தயானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.
NFGG சார்பில் அதன் தவிசாளர் Dr. ஸாஹிர், பிரதித் தவிசாளர் MM.அப்துர்ரஹ்மான், பொதுச்செயலாளர் ALM சபீல் நளீமி , மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் சியாட், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள் உட்பட NFGGயின் செயற்குழு உறுப்பினர்கள், மகளிர் பிரிவு சகோதரிகள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இரண்டாவது சந்திப்பு SJB பிரதிநிதிகளுக்கும் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கிடையில் NFGG தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.இரு கலந்துரையாடல்களின் போதும் SJB பிரதிநிதிகள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் குறிப்பாக அதன் பிரதித்தவிசாளர் அப்துர்ரஹ்மான் அவர்களும் SJBயுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டுமென்ற கோரிக்கையினை மிக வலுவாக முன்வைத்திருந்தனர்.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன் கருதி இவ்வாறு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவஷ்யம் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.மிக நீண்டகாலமாக இவ்வேண்டுகோளினை தாங்கள் விடுத்து வருவதாகவும் அதற்கான சாதகமான பதிலினை NFGGயும் அப்துர்ரஹ்மானும் வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கட்சியாக இணைந்து SJBயுடன் பணியாற்றுவது குறித்து உயர்மட்ட ஆலோசனைகளின் பின்னர் இறுதித் தீர்மானத்திற்கு வரமுடியும் என NFGG தரப்பில் இதன்போது பதிலளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment