ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சிக் காலத்தில், ஓரிரு முஸ்லிம் எம்பிமார்களும் அமைச்சர்களும் மட்டுமே இருந்தபோதிலும், அக்காலத்தில் அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் ஆற்றிய சாதனைகளை இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதேபோல், அமைச்சுப் பதவி இல்லாத நிலையிலும் எம்பியாக இருந்து கல்முனை தொகுதிக்காக எம்.சி. அஹமத் செய்த சேவைகள், பின்னாளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பால்கூட செய்ய முடியாத அளவுக்கு குறிப்பிடத்தக்கவை என அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்திலும் ஓரிரு முஸ்லிம் எம்பிமார்களே இருந்தனர். எம்.எச். முஹம்மத், ஏ.ஆர்.எம். மன்சூர், சம்மாந்துறை மஜீத் போன்றோர் சமூகத்திற்காக ஆற்றிய சேவைகளின் ஒரு துளியையாவது, இன்றைய தலைமையின் மூலம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
1994ஆம் ஆண்டில் முஸ்லிம் காங்கிரசுக்கு வெறும் 7 எம்பிமார்களே இருந்தபோதிலும், தலைவர் அஷ்ரப் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால், முஸ்லிம்கள் இழந்த ஒரு அடிப்படை உரிமையையாவது பெற்றுத்தர முடியாத நிலையே அக்காலத்திலும் நீடித்தது. காணி பிரச்சினை, மௌலவி ஆசிரியர் நியமனம், தென்கிழக்கு மாகாண சபை, கல்முனை கரையோர மாவட்டம் போன்ற பல உரிமைக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், அவற்றில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. சில அபிவிருத்திகள் மட்டுமே கிடைத்தன; அவற்றை ஒரு சாதாரண அரசுக் கட்சி எம்பியால்கூட பெற்றுத்தர முடியும் என்பதே உண்மை என அவர் தெரிவித்தார்.
2001ஆம் ஆண்டு ஹக்கீம் தலைமையில் 11 எம்பிமார்கள் இருந்தபோதும், இன்றுவரை சொல்லிக்காட்டக்கூடிய உரிமைகளோ, கணிசமான அபிவிருத்திகளோ கிடைக்கவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அந்தக் கட்சியை நம்பிய மக்கள் ஏமாற்றத்துடன் துயருறும் நிலை தொடர்கிறது. அரசு–புலிகள் பேச்சுவார்த்தைகளில் தனித்தரப்பை உரிய முறையில் பயன்படுத்தத் தவறியதன் மூலம், முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் ஒரு தனித்தரப்பாகவே இல்லை என்ற நிலையை உருவாக்கியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அதேபோல், அதாவுள்ளாவின் கட்சி, ரிஷாத் பதியுதீனின் கட்சி உள்ளிட்டவற்றினாலும் முஸ்லிம் சமூகத்திற்கோ நாட்டிற்கோ சொல்லிக்கொள்ளக்கூடிய நன்மைகள் கிடைக்கவில்லை. அனைத்துக் காலகட்டங்களிலும் சமூகத்திற்கு ஏற்பட்டது ஏமாற்றமே என முபாரக் முப்தி வலியுறுத்தினார்.
எனவே, எம்பிமார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் எதுவும் சாதிக்க முடியாது. சமூகத்திற்காக எதையும் தியாகம் செய்யத் தயங்காத, பணத்துக்கும் பதவிக்கும் மயங்காத, திறமையான ஓரிரு முஸ்லிம் எம்பிமார்கள் இருந்தாலே போதுமானது; உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியும். “எண்ணிக்கை தேவையில்லை; குவாலிட்டியே தேவை” என்பதே காலத்தின் கோரிக்கையென அவர் தெரிவித்தார்.
இதுவரை சமூகமானது போதுமான அளவு ஏமாந்துவிட்டதாகவும், இனியாவது சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் தமது கட்சியை மக்கள் பலப்படுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
.jpg)
0 comments :
Post a Comment