அதிபர் 45 இலட்சம் ரூபாய் ஊழல் மேற்கொண்டு உள்ளார் என்றும் அதிபருக்கு உடந்தையாக வலய கல்வி பணிப்பாளர் உள்ளார் என்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் பெற்றோர் பிரதிநிதிகள் ஐவர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இவர்கள் இது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, ஆளுனர் அனுராதா ஜகம்பத், மாகாண வலய கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கு முறையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி உள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஆணை குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்முனை மாகாண மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டும் உள்ளனர்.
இந்நிலையில் அதிபரை இடம் மாற்றுவதாக கடந்த வாரம் உத்தரவிட்ட மாகாண கல்வி பணிப்பாளர் மறுநாளே அவ்வுத்தரவில் இருந்து பின்வாங்கினார்.
அதிபருக்கான இடம் மாற்ற உத்தரவை வாபஸ் பெற்றமையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி ஐவரும் உடனடியாகவே மாகாண கல்வி பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பினர்.
அதே நேரம் அதிபர் கடந்த 04 ஆம் திகதி மாலை அவசரமாக கூட்டம் நடத்தி அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் பெற்றோர் பிரதிநிதிகளை மாற்றினார்.
மாகாண கல்வி பணிப்பாளரின் உத்தரவு, வலய கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தல் ஆகியவற்றுக்கு அமையவே அதிபர் இந்நடவடிக்கையை மேற்கொண்டார் என்று கூறப்படுகின்றது.
ஆனால் இது சட்ட விரோதமான நடவடிக்கை என்றும் புதியவர்களுக்கான நியமனம் செல்லுபடி அற்றது என்றும் ஐவரும் புதிய பிரச்சினையையும் கொண்டு வந்து உள்ளார்கள்.
இவர்கள் இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொண்டு உள்ளனர்.
அத்துடன் நீதிமன்றத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்வார்கள் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்கள்.
0 comments :
Post a Comment