04/02/2022 ஆம் திகதி 'தமிழன்' நாளிதழ் தீட்டியிருக்கும் ஆசிரியர் தலையங்கம். சண்முகா பாடசாலை சமூகத்தின் கவனத்திற்கு...



'அபாயா அணிந்து வரவேண்டாம். ஆசிரியைக்குரிய ஆடையை அணிந்து வரவும்' என திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்யும் போராட்டம் நேற்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்தமை குறித்து எமது கவனம் திரும்பியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் சைவமகளிர்களுக்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சண்முகம் அம்மையாரால் உருவாக்கப்பட்ட சண்முகா மகளிர் இந்துக்கல்லூரி, பின்னாளில் தேசிய அரசால் பொறுப்பெடுக்கப்பட்டு ஒரு தேசிய பாடசாலையாக உருவெடுத்து கல்வியில் முன்னிலை வகிக்கின்றது.

இப்பாடசாலையைப் பொறுத்தவரை துளிகூட இனவாதம், மதவாதம் இன்றி மற்றைய மத உரிமைகளை மதித்து அவர்களையும் பாடசாலையில் உள்வாங்கி சகல மதத்தவருக்கும் பொதுவான பாடசாலையாக திகழ்ந்தமை வரலாறு.
2017ஆம் ஆண்டு இப்பாடசாலையில் ஹபாயா பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், அப்பாடசாலையில் ஏற்கனவே கடமையாற்றி வந்த ஆசிரியை மீண்டும் பாடசாலைக்கு நேற்றுமுன்தினம் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த பாடசாலை அதிபர் காரியாலயத்தில் கடமையைப் பொறுப்பேற்க சென்ற நிலையில் பாடசாலை சமூகத்திற்கும், குறித்த பெண் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பாடசாலையின் அதிபரை ஹபாயா அணிந்து வந்த ஆசிரியை தாக்கியதாகவும் இதேவேளை ஹபாயா அணிந்து வந்தமையால் கோபம் கொண்ட அதிபர் தன்னை தாக்கியதாகவும் கூறி இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பில் நடக்கும் விசாரணைகளுக்கு இடம்விடுவோம்.

ஹபாயா அணிந்து சென்ற காரணமாக சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா பஹ்மிதா, நீதிமன்றத்தில் இருதரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக, மீண்டும் பாடசாலைக்கு கடமையை பொறுப்பேற்கச் சென்றபோதே மேற்படி பாடசாலையில் பதற்றநிலை தோன்றியுள்ளது.
2017இல் அபாயா அணிந்து கற்பிக்கச் சென்ற ஆசிரியைகளை ஹபாயா அணிந்து வந்ததன் காரணமாக பாடசாலையை விட்டு சண்முகா கல்லூரி நிர்வாகம் அவர்களை வெளியேற்றி இருந்தது. அதன்பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியைகள் செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு, ஆசிரியைகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்ததோடு ஆசிரியைகளை மீள சண்முகா இந்து கல்லூரிக்கு உடனடியாக அனுமதிக்குமாறு பிரேரித்தது.

மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரை வெளியாகி சில வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அதனை நடைமுறைப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
சென்ற மாதம் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரச தரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக்கொண்ட மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா தான் மீண்டும் சண்முகாவிற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட அரச தரப்பு நேற்று முன்தினம் ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் சண்முகா இந்து கல்லூரிக்கு கடமையை ஏற்குமாறு அனுமதித்தது. அதற்கான கடிதத்தினை கல்வி அமைச்சு அனுப்பியிருந்தது. அதன் பிரகாரமே நேற்றுமுன்தினம் சண்முகாவிற்கு மேற்படி ஆசிரியர் கடமையேற்கச் சென்றுள்ளார். இதன்போதே மேற்படி சம்பவம் நடந்து ஆசிரியையை வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சட்டமா அதிபரின் கவனத்திற்கும் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் யார் தவறு யார் சரி என்று ஆராய்வதோ அல்லது நாட்டாமை போன்று தீர்ப்பை வாங்குவதோ எமது நோக்கமல்ல. ஆனால் இந்த விவகாரத்தில் சில விடயங்களை பொறுப்பான ஊடகம் என்ற வகையில் சில விடயங்களை நாம் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது.

குறித்த பாடசாலை அபாயா விவகாரத்தில் நீதிமன்றத்தில் சுமுகத்தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய கல்வி அமைச்சின் பணிப்பின்படி கடமைக்கு சமூகமளித்த ஆசிரியையை ஒப்பமிட அனுமதிக்காது தாமதிக்க வைத்ததன் காரணம் என்ன? இந்த விவகாரத்தில் உடனடியாக வெளியார் எவ்வாறு வந்து தலையீடு செய்தார்கள்? மாணவிகள் உடனடியாக பாடசாலையை விட்டு வெளியேறியமைக்கான பின்னணி என்ன? மாணவர்களை ஆர்ப்பாட்டங்களுக்குத் தூண்டுவோர் யார் ? இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன ? என்பனவே எம்முன்னுள்ள கேள்விகள் .

சண்முகா கல்லூரிக்கென ஒரு கலாசாரம், வரம்புகள் இருக்கின்றன. சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவை பின்பற்றப்படவேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால் நாட்டின் நீதிமன்றம் ஒரு முடிவைச் சொன்ன பின்னர் கடமைக்கு வந்த ஆசிரியை இவ்வாறு நடத்தப்படும் பண்பினையா பாடசாலைச் சமூகம் கொண்டுள்ளது என்று கேட்கவேண்டியுள்ளது.

ஆசிரியையின் ஆடை குறித்து சர்ச்சை இருக்குமாயின் அவரை அழைத்து பேச்சு நடத்தியிருக்கலாம். அல்லது கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கலாம். அவர்களின் பதில் கிடைக்கும்வரை அவரை கடமையாற்ற அனுமதித்திருக்கலாம். இப்படி பல மாற்றுவழிகள் இருக்கும்போது அவற்றையெல்லாம் விடுத்து, மாணவர்களை வெளியேற்றச் செய்து அவர்களை போராட்டம் செய்யவைப்பது நியாயமானதா? அல்லது அப்படிச் செய்வதன்மூலம் மாணவர்களின் மனங்களில் கிலேசத்தை உருவாக்கியதைத் தவிர வேறெதனை சண்முகா பாடசாலைச் சமூகம் சாதித்துவிட்டது?

நாட்டில் தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் கடந்த பல தசாப்த காலமாக நிலவிவரும் வரும் அந்நியோன்னியம் ஒரு சில காரணங்களினால் அவ்வப்போது பின்னடைவைச் சந்தித்தாலும், இப்போதுதான் அந்த உறவில் மேம்பாடு வந்துகொண்டிருக்கிறது. வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் இந்த சமூகங்கள் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றன. காணிப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை, நில அபகரிப்பு, அடாத்தான குடியேற்றங்கள் என்று இரண்டு சமூகங்களும் நாளாந்தம் பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை எதிர்நோக்கவேண்டுமாயின் இந்த இரு சமூகங்களும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்.அதற்கு படித்த கல்விச் சமூகமே முன்மாதிரியாக செயற்பட வேண்டும்.

சண்முகா கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை வெறுமனே பாடசாலை பாரம்பரியத்தை மீறியதால் வந்தது என்று கூறிவிட்டு வரலாற்று அபாண்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ள தமிழ்க் கல்விச் சமூகம் முயலக் கூடாது.
அபாயா அணிந்து இஸ்லாமிய ஆசிரியை கற்பிப்பதால் கலை கலாசாரம் கெட்டுப்போய்விடுமென அல்லது அவை பாதிக்குமென பொதுபல சேனாவோ அல்லது இராவணா பலயவோ கூறுவதுபோல உப்புச்சப்பில்லாத காரணத்தை கற்றறிந்த தமிழ்ச் சமூகம் கூறுவது அழகுமல்ல. உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காமல் நியாயமான நீதியான அடிப்படையில் இந்த பிரச்சினை அணுகப்படவேண்டும்.

அறையொன்றுக்குள் பேசித் தீர்க்கப்படவேண்டிய விடயத்தை அம்பலமாக்கியதன்மூலம் இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தத்தமது வேலைகளை செய்ய மேடை அமைத்துக் கொடுக்கப்பட்ட கைங்கரியத்தைத்தவிர வேறெதுவும் இதன்மூலம் நடக்கவில்லை. இனவாதிகளுக்கு எமது இந்த நியாயம் எரிச்சலைத் தரலாம். அதற்கு எம்மிடம் மருந்தில்லை.நாட்டில் நீண்டகாலம் பிரச்சினைகளை உருவாக்கி அவற்றை வைத்தே இலாபம் தேடும் போக்கிரித்தனமான ஊடக கலாசாரத்தை பின்பற்ற நாம் விரும்பவில்லை என்பதால் இந்த நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிறோம்.

இந்த கருத்துகளை ஏற்பதும் நிராகரிப்பதும் சண்முகா பாடசாலை கல்விச் சமூகத்தின் கைகளில் உள்ளது. ஆனால் சாம, பேத, தான, தண்டமென்ற கோட்பாடுகளை மீறி உடனடியாக சட்டத்தை கையிலெடுப்பது நல்லதல்ல. தவறான முன்னுதாரணங்கள் இளம் சமுதாயத்தின் மத்தியில் விதைத்துவிடக் கூடாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :