கல்முனை மாநகர எல்லையில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது பகுதிகளில் அமையப்பெற்றிருக்கும் சிறுவர் பூங்காக்கள் ஒழுங்காக பராமரிக்கப்படாத நிலையில் அத்தனையும் உப்புக்காற்றுக்கு இரையாகி துருப்பிடித்திருக்கிறது. பூங்காவில் உள்ள சிறுவர்களின் ஊஞ்சல்கள் விளையாட முடியாது அறுந்து விழும் நிலையில் உள்ளது. விடுமுறை காலப்பகுதியாகையால் ஆசையோடு பொழுதை கழிக்க வரும் பிள்ளைகள் அனர்த்தங்களை எதிர்கொண்டு வைத்தியசாலையை நாட நேரிடும் நிலையுள்ளது.
கோடிகள் கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டு சுமார் ஐந்து வருட குறுகிய காலப் பயன்பாட்டுக்கும் உட்படாத நிலையில் இந்த உபகரணங்கள் உடைந்து இரும்புக்கும் எடுக்க முடியாத நிலையில் இருக்க காரணம் பொருத்தமற்ற பாராமரிப்பற்றிருப்பதுமாகும். இறப்பர் மெத்தைகளோடு அமையப்பெறவேண்டிய சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் இது வரைகாலமும் இறப்பர் மெத்தைகளே இல்லாமலேயே பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதோடு ஆபத்தான சூழலிலேயே சிறுவர்கள் விளையாடி வந்திருக்கின்றனர். ஆனால் தெய்வாதீனமாக எந்த அசம்பாவிதங்களும் மேற்படி இடங்களில் இன்றுவரை பெரியளவில் பதிவாகியிருக்கவில்லை. இருந்தாலும் பாரிய அனர்த்தம் வர முன்னர் இந்த பூங்காக்களை பாவனைக்கு உகந்ததாக மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது.
கடற்கரையை அண்டி அமையப்பெற்றிருக்கும் பூங்காக்களின் உபகரணங்களையும், சுற்றியுள்ள கம்பி வேலிகளையும் பராமரிப்பதில் கல்முனை மாநகரசபையோ, சபையின் உரிய அதிகாரிகளோ இன்றுவரை எந்தவித எத்தனங்களும் எடுக்காதது கவலையளிக்கிறது. பெயர்ப்பலகை கூட இல்லாமல் சில இடங்களில் புற்கள் வளர்ந்தும் கட்டாக்காலி மாடுகளின் இருப்பிடமாகவும் உள்ள இந்த நிலையை கவனத்தில் எடுத்து சிறுவர்களின் பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து மாநகர மேயர் மீது அமானிதமான சிறுவர் பூங்காக்களை பொருத்தமான பாதுகாப்பு வசதிகளை செய்து பாராமரித்துத்தர முன்வர வேண்டும் என்று பிரதேச பொதுமக்கள் கல்முனை மாநகர சபை நிர்வாகத்தை கேட்டுக் கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment