பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிக்கே ரயிலில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திம்புளை – பத்தனை போகாவத்தை பகுதியில் புதிய வீடமைப்பு திட்டத்தில் வசித்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
எஸ்.பிரான்சிஸ் (70) (தந்தை), பி.கமலாவதி (65) (தாய்), பிரான்சிஸ் குமார்ராஜ் (40) (மகன்) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரொசெல்ல மற்றும் வட்டவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 103 மைல் கல் பகுதியில் முற்பகல் 11.45 அளவில் மூவரும் ரயிலில் மோதுண்டுள்ளனர்.
குறித்த மூவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனரா? என்பது தொடர்பில் வட்டவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் அதே ரயிலில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் தமது வீட்டை மூடிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் மூவரும் இன்று (08) புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்ததாக அவர்கள் வாடகைக்கு வசித்த வீடுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் மகன் மசாலா தூள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும், அவர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மகனை தேடி அவரை திருமணம் முடித்த பெண்கள் என கூறி ஏற்கனவே பல பெண்கள் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கடனாளிகளிடமிருந்து தப்பிக்க உயிரிழந்த மகன், தந்தை மற்றும் தாயுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் உயிரிழந்த மகனுக்கு எதிராக பிரதேச மக்கள் பண மோசடி தொடர்பில் திம்புளை - பத்தனை பொலிஸில் பல முறைப்பாடுகளையும் செய்துள்ளனர்.
அதேபோல் கடன் கொடுத்தவர்களில் பலர் உயிரிழந்த மகனை தேடி பல முறை அவர் வசித்த வீட்டுக்கு வந்துள்ளதாகவும் போகாவத்தை மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment