கிண்ணியா- குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (08) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் கிண்ணியா- பெரியாற்றுமுனை பகுதியைச் சேர்ந்த முகமது அலி முகமது ரியாஸ் (40வயது) அப்துல் முத்தலிப் பஸ்மி (35வயது) ஜமால்தீன் முபாரக் (35வயது) எனவும் தெரியவருகின்றது.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இழுவைப் படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், இழுவைப்படகை செலுத்திய சந்தேக நபர்கள் தலைமறைவாகி இருந்தனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 24ஆம் திகதி கிண்ணியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.
இதேவேளை கிண்ணியா நகர சபை தவிசாளர் இழுவைப் படகைப் பாவிப்பதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு நாளை (09) அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
0 comments :
Post a Comment