தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும் - ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு



க.கிஷாந்தன்-
கூட்டு ஒப்பந்தம் இல்லாத நிலையில் தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் பழிதீர்ப்பதற்கான வேட்டையை பெருந்தோட்டக் கம்பனிகள் ஆரம்பித்துள்ளன. எனவே, இதனை முறியடித்து தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் உள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (23.12.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரனும் உடனிருந்தார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

“ அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகள் பாதுகாப்படவில்லை. இது தொடர்பில் சுட்டிக்காட்டியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து நாம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினோம். இதன் பலனாக சில கோரிக்கைகளை தோட்ட நிர்வாகம் நிறைவேற்றியுள்ளன.

இருந்தாலும் நாம் எழுத்துமூல உத்தரவாதத்தைக் கோரியுள்ளோம். அது கிடைக்கும் வரை அடுத்தக்கட்ட நகர்வுக்காக காத்திருக்கின்றோம். அக்கரபத்தனை போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.

கூட்டு ஒப்பந்தம் இல்லாத நிலையில் தொழிற்சங்கங்களை பழிதீர்ப்பதற்கு கம்பனிகள் முற்படுகின்றன. இதனால் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். தேர்தல் காலங்களில் நாம் அரசியல் செய்யலாம். எனவே, தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களுக்காக ஒன்றுபட வேண்டும். ஒத்துழைப்பு தர வேண்டும்.
கூட்டு ஒப்பந்தம் அடிமை சாசனம் என விமர்சித்தனர். நாம் அதிலிருந்து வெளியேறினோம். ஒரு வருடமாக அபிவிருத்தி அரசியலை முன்னெடுத்தோம். தொழிற்சங்க நடவடிக்கையில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. ஆனால் ஏனைய தொழிற்சங்கங்கள் உரிய வகையில் செயற்படவில்லை. அவர்களுக்கு சந்தாதான் பிரச்சினை. எனவே, நாம் தொழிலாளர்களுக்காக மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம்.

நாம் அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி. அந்தவகையில் எமக்கான முழு சுதந்திரமும் இருக்கின்றது. எமது மக்களுக்காக அரசுக்குள் இருந்துகொண்டு போராடியேனும் தீர்வை பெறுவோம். “ –என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :