முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் திறன்நோக்குனரும் கவிஞரும் சிறந்த எழுத்தாளருமான கலாபூஷணம் அலியார் பீர்முகம்மது எழுதிய 'எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், எனும் நூலின் அறிமுக விழா சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று (27) சனிக்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் கலந்து கொண்டு, நூலை அறிமுகம் செய்து வைத்தார்.
நூலின் முதற்பிரதியை பிரபல தொழிலதிபர் இக்ரா யு. சத்தார் பெற்றுக் கொண்டதோடு, சிறப்பு பிரதிநிதிகளை ஐக்கிய காங்கிரஸின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் மற்றும் அரசியல் ஆய்வாளர் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில், முன்னாள் அதிபரும் சாய்ந்தமருது கலாசார அதிகார சபையின் பிரதித் தலைவருமான ஏ.எச்.ஏ. பஸீர் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, தலைமை உரையை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் நிகழ்த்தினார்.
மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். ரிம்சான், சாய்ந்தமருது நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம் எஸ்.எம்.நளீர், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எம். ரஹீம், அக்கரைப்பற்று பேஜஸ் புத்தக இல்லத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிராஜ் மஷ்ஹூர் ஆகியோர் நிகழ்வில் கருத்துரைகளை வழங்கினர். சாய்ந்தமருது கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபிக்கா நன்றி உரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கல்விமான்கள், சாய்ந்தமருது கலாசார உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலாசார அதிகார சபையின் உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment