நல்லைநகர் நாவலர் பெருமானும், முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரும் இலங்கைத்திருநாட்டின் இருபெரும் ஆன்மீக முதிசொம்கள். இருவரது பணிகளையும் இளம்சந்ததியினருக்கு எடுத்துச்சொல்லவேண்டிய கடமை எமக்குள்ளது.
இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை தினவிழா நேற்றுமுன்தினம்(27) சனிக்கிழமை காலை காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நடைபெற்றபோது பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டுரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றமும் இணைந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை தினவிழாவை ஏற்பாடு செய்திருந்தது.
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் திருமுன்னிலை வகிக்க, காரைதீவுப் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
மங்கல விளக்கேற்றல் நந்திக்கொடியேற்றல் அறநெறிக் கீதம் குருபூஜை என்பன நடைபெற்றன.
இந்த நிகழ்விலே ஆன்மிக அதிதிகளாக காரைதீவு ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய சிவஸ்ரீ சி.தியாகராஜக் குருக்கள், காரைதீவு ஸ்ரீ நந்தவனச் சித்திவிநாயகர் ஆலய சிவஸ்ரீ இ.மகேஸ்வரக் குருக்கள் ,காரைதீவு ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி ஆலய சிவஸ்ரீ சி.சாந்தரூபன் குருக்கள், பெரிய நீலாவணை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சிவஸ்ரீ ந.பத்மலோஜன் சர்மா ,காரைதீவு ஸ்ரீ மாவடிக் கந்தசுவாமி ஆலய சிவஸ்ரீ ச.கோவர்த்தனன் சர்மா, நாவிதன் வெளி ஸ்ரீ முருகன் ஆலய சிவஸ்ரீ சுபாஸ்கர் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு ஆசீர்வதித்தனர்.
மணிமண்டபத்தில், அரங்கநிகழ்வில் நாவலர்பெருமான் மற்றும் விபுலாநந்த அடிகளாருக்கு மாலை அணிவித்து சமயகுருமாரால் வேதபாராயணமும் ,தீபாராதனையும் நடாத்தப்பட்டது. அறநெறிமாணவர்களின் நாவலரின் பன்முகதரிசனம் மற்றும் உரைகள் இடம்பெற்ற அதேவேளை, விபுலாநந்தபணிமன்றம் சார்பில் அதன் முன்னாள்தலைவர் வி.ரி.சகாதேவராஜா சிறப்புரையாற்றினார்.
அங்கு மேலதிகஅரசஅதிபர் ஜெகதீசன் மேலும் உரையாற்றுகையில்:
எப்போதும் சிவசின்னங்களை அணியும் ஜந்தாம் பெரும் குரவர் அவர். சைவத்திற்கும் தமிழுக்குமாக வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர். பைபிளை மொழிபெயர்க்கின்ற ஆங்கிலப்புலமை அவருக்கிருந்தது. ஆறுமுகநாவலர் பெருமான் விபுலாநந்த அடிகள் அவர்களது ஆத்மாக்கள் எங்களை வழிநடாத்துகிறது என்ற நம்பிக்கைஇருக்கிறது.
நாம் சமயகுரவர்களை வணங்குகின்றோம். அவர்கள் வாழ்ந்த முறைகளை படித்திருக்கின்றோம். அதேபோன்று இவர்கள் வாழ்ந்துகாட்டியுள்ளனர். விபுலாநந்தரும் நாவலரும் 19ஆம் நூற்றாண்டில் அவதரித்து பலசேவைகளை சமுகத்திற்காக ஆற்றியவர்கள் . அதற்காகவே இலங்கையின் தேசியவீரர்கள் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. தபால்தலையும் வெளியிடப்பட்டிருக்கிறது. அன்றைய மேலைத்தேய அடக்குமுறை காலகட்டத்தில் பலசவால்களுக்குமத்தியில் பெரும்பணிகள் செய்த பெருமகான்களை நாம் மறக்கமுடியாது.
ஆன்மீக அரசியல்தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் நாவலர்பெருமானது வழிகாட்டல் இருந்தது. சேர்.பொன்.இராமநாதனை தெரிவுசெய்ததில் அவரது பங்களிப்பு நிறையவே இருந்தது. திறந்த கூட்டத்தில் ஆராய்ந்து சொற்போர் நடாத்தி தீர்க்கமான முடிவடுப்பது அவரது தனிஇயல்பு.
இன்று வருவாயுள்ள பல ஆலயங்களின் நிருவாகங்கள் நீதிமன்றிவ் உள்ளன. ஆனால் அன்று ஆலயநிருவாகங்களை வழிநடாத்துவதில் ஆன்மீகத்தலைவர்கள் முன்னின்ற சந்தர்ப்பங்கள்இருந்தது. நாவலர்பெருமானும் அதில் தலையாய ஒருவர்.
தமிழகத்தில் பெருமானது பேச்சுத்திறமை கதாப்பிரசங்கத்தை கேட்டுவியந்து அவரை பல்லக்கில் ஏற்றி திருவாவடுதுறை ஆதீனம் 'நாவலர்' என்ற பட்டத்தை வழங்கியமை இலங்கைவாழ் மக்களுக்கு பெருமையானது.
இந்துகலாசார திணைக்களம் அம்பாறை மவட்டத்தில் சிறந்த ஆன்மீக கலைகலாசார விழுமியங்களின் பயிற்சிநிலையமாக இந்த விபுலாநந்த மணிமண்டபத்தை அங்கீகரித்திருக்கிறது. இங் இவ்வாறு தொடர்ச்சியாக சமயஆன்மீக நிகழ்வுகள் நடந்தேறிவருவது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்குமுரியது. அதற்காக பணிப்பாளர் உமாமகேஸ்வரன் மாவட்ட கலாசாரஉத்தியோகத்தர் ஜெயராஜி பிரதாப் போன்றோரைப்பாராட்டலாம்.
சைவத் தமிழர்களுக்கென்று ஒரு மதிப்புமிகு அடையாளம் தந்தவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான். பல்துறை ஆளுமை மிக்க தீர்க்கதரிசனப் பார்வை கொண்ட பெருமகனார் நமக்காகச் செய்த அரும்பணி சைவத் தமிழுலகம் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது என்றார்.
ஆன்மிக அதிதிகள், விஷேட அதிதிகள் எனப் பலரும் கலந்து கொள்ளும் இந்நிகழ்விலே மாணவர்களின் ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வுகளும் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வரவேற்புரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி நிகழ்த்த, நன்றியுரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஸ்ரீபிரியா கங்கைநாயகன் நிகழ்த்தினார். கலாசாரஉத்தியோகத்தர் பிரதாப் நிகழ்வை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.
0 comments :
Post a Comment