அல்லாஹ்வை நிந்தித்த ஒருவரை “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் 20 இலட்சம் முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்? - பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!


ஊடகப்பிரிவு-
னவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசுக்கு வாக்களித்த மக்கள் கூட இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று (16) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

"இன்று நாட்டு மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றார்கள். நீங்கள் உங்கள் தொகுதிகளுக்கு சென்று அந்த மக்களுடன் உரையாடினீர்கள் என்றால் விவசாயிகள் படுகின்ற வேதனைகள் புரியும். அரசாங்கத்தை உருவாக்கிய விவசாயிகள் கூட தங்களது எதிர்காலம் பூச்சியமாகிவிடும் என்ற அச்சத்தில் காலம் கடத்துகின்றார்கள். அவர்களின் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். இன்று பாதையில் நிற்கும் அத்தனை பேரும் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர், எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களின் தேவைப்பாட்டை நிறைவேற்றக் கூடிய வகையில், உங்கள் உள்ளத்தில் மாற்றம் வர வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் பாதுகாப்பு விடயத்துக்காக நிதி அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு என்று கூறும் போது, வெறுமனே ஆயுத ரீதியானது மட்டுமின்றி ஒரு மனிதனின் உணவு, வறுமையை நீக்குதல், இருப்பிட வசதி, சுகாதார வசதி, கல்வி மற்றும் இன்னோரன்ன விடயங்களை வழங்குவதும் கூட பாதுகாப்புடன் தொடர்புபட்டதே. எனவே, அந்த விடயத்துக்கு இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடுகள் போதாமையாக உள்ளது.

இந்த அரசாங்கம் மட்டுமின்றி, கடந்த காலங்களிலும் வரவு செலவு திட்டத்தை பார்க்கும் போது, தேர்தலை மையமாக வைத்துக்கொண்டோ, கட்சியை வளர்ப்பதற்காகவோ செயற்பட்டதனால்தான், 70 வருடங்களுக்கு முன்னர் நாம் சுதந்திரத்தைப் பெற்ற போதும், இன்னும் அதலபாதாளத்தில் இருக்கின்றோம். இதனால்தான் ஒவ்வொரு வருடமும் நமது நாட்டின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போகின்றது. பொருளாதாரம் சீரழிகின்றது. உலக வரைபடத்திலே வறுமையான நாடாக பதியப்பட்டுள்ளது. எனவேதான், இந்த நிலையை மாற்றுவார் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சுமார் 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். அந்த நம்பிக்கையில்தான் பாராளுமன்றத் தேர்தலிலே கிட்டத்தட்ட 142 ஆசனங்கள், அதாவது, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக்கூடிய வகையில் அவரது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

நமது பாராளுமன்றத்திலே இருக்கின்ற மூத்த அரசியல்வாதிதான் மஹிந்த ராஜபக்ஷ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்திலும் பாராளுமன்றத்திலும் இருந்த அதிகாரங்கள், இருபதாவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கைமாறப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒரு நாமம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பேசப்பட்ட ஒன்று. அவரது அரசாங்கத்தில் ஒன்பது வருடங்களாக நானும் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். அவரது தேர்தல்களிலே அவருக்கு பக்கபலமாக இருந்தவன் என்ற வகையிலே அவரது அமைச்சரவையிலே சுமார் ஒன்பது வருடங்கள் பணியாற்றியவன் என்ற வகையில் அவரிடம் இருந்த தூர சிந்தனையை நாம் கண்டோம்.

நாட்டைப் பற்றிய கவலைகளை அவரிடம் கண்டோம். நாட்டின் பொருளாதாரம் பற்றிய திட்டங்களைக் கண்டோம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனையைக் கண்டோம். ஆனால், இன்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரமாக்கப்பட்டுவிட்டாரா? என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. அவரது கருத்துக்களுக்கு இடமில்லையா என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது. ஏனெனில், இந்த இரு வருட கால ஆட்சியையும் மகிந்தவின் ஒன்பது வருட ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மலையும் மடுவும் போல இருக்கின்றது. மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது. மக்களின் வெறுப்பை மிகவும் விரைவாக சம்பாதித்த அரசாக இது மாறியுள்ளது. எதை எடுத்தாலும் இனவாதம், மதவாதமாக பார்க்கின்ற ஒரு நிலை.

இதன் மூலம் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் போது சமத்துவம் என்ற தொனிப்பொருளைக் கொண்டுவந்து, “ஒரே நாட்டு ஒரே சட்டம்” என்று கூறினார்கள். இந்த நாடு ஒரே நாடே. இரு நாடுகள் அல்ல. யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது ஒரே நாடுதான். இந்த நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, நான் சார்ந்த முஸ்லிம் சமூகமும் சகோதரச் சமூகங்களான சிங்கள, தமிழ் சமூகங்களும் இணைந்தி சுதந்திரத்துக்காகப் போராடி, அதை பெற்றுக்கொண்டோம். இந்த ஒரே நாட்டிலே முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் அவர்களுடைய தனித்துவக் கலாச்சார விழுமியங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அதுபோல, தேச வழமை மற்றும் கண்டியச் சட்டங்களும் நடைமுறையில் இருந்தன. இதனை அன்று தொடக்கம் எல்லோரும் அங்கீகரித்ததுடன் நீதிமன்றங்களிலும் அவை பிரயோகிக்கப்பட்டன.

இந்த நாட்டிலே பயங்கரவாதம் உருவெடுத்த போதும், நாட்டிலுள்ள பெரும்பாலானவர்கள் அதனை எதிர்த்து ஒற்றுமையை பேணியதே கடந்தகால வரலாறு. இப்போது அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற தூரநோக்கு இல்லாத ஒரு கொள்கையை அறிமுகப்படுத்தி, அதுவும், அல்லாஹ்வை மிக மோசமாக கேவலப்படுத்திய ஒருவரை அதன் தலைவராக ஆக்கியுள்ளீர்கள். உலகின் இரண்டு பில்லியன் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ்வை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக் கூறி, அவரை ஏசிய ஒருவரை இவ்வாறு தலைவராக ஆக்கியுள்ளீர்களே. அதுமட்டுமின்றி, நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் இருந்து பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் மன்னிப்பளிக்கப்பட்ட ஒருவரையே, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவராக நியமித்துள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் எதனை சாதிக்க நினைக்கின்றீர்கள்? இந்த நாட்டில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்று நினைக்கின்றீர்களா? அல்லது பெரும்பான்மை மக்களை சந்தோஷப்படுத்தலாம் என்று நினைக்கின்றீர்களா? எதிர்மாறாக பெரும்பான்மை சிவில் சமூகம் கூட இதனை எதிர்க்கும் நிலை இன்று வந்துள்ளதே.
இந்த இருவருட காலத்தில் நீங்கள் மிகவும் சண்டித்தனமான ஆட்சியே நடத்துகின்றீர்கள். நான் சிறையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்து, எனது கருத்தைக் கூட கூற முடியாது தடுத்தீர்கள்.. ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவனாக, ஜனநாயகவாதியாக மக்கள் தந்த ஆணையில் இங்கு வந்திருக்கும் நான், எனக்கு நடந்த அநியாயத்தை கூற விடாமல் மறுக்கின்ற விரோதப் போக்குடன் செயற்பட்டீர்கள். இவைகள் எல்லாம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

கடந்த கால ஆட்சியாளர்கள் உங்களை சிறையில் அடைத்தார்கள் என்றீர்கள். இவ்வாறான சிறையடைப்புக்\கு நாங்களா காரணம்? நாங்கள் இருதரப்புடனும் பங்காளிகளாக இருந்திருக்கின்றோம். நியாயத்தின் பக்கம் நின்றிருக்கின்றோம். நாட்டின் அபிவிருத்திக்கு துணை செய்திருக்கின்றோம். நாட்டின் பாதுகாப்புக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றோம். அனைத்து நல்ல விடயங்களுக்=கும் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்திருக்கின்றோம்.

இந்த பட்ஜெட்டிலே சில விடயங்களை நீங்கள் மறைமுகமாகக் கொண்டு வந்து மக்களுக்கு சுமையை கொடுத்திருக்கின்றீர்கள். இந்த நாட்டிலே டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் நான்கைந்து மாதங்களுக்குப் பின்னர் என்ன நடக்குமென்று தெரியாது.
எனவே, இவ்வாறான நிலையிலே இனவாதத்தை கிளறி, நாட்டைக் குட்டிச்சுவராக்காதீர்கள். சட்டத்தை எல்லோருக்கும் சமமாகப் பிரயோகியுங்கள். அப்போதுதான் நாடு முன்னேற்றமடையும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். கடந்த காலங்களில் மலேசியா, அபுதாபி போன்றவை பாரிய முதலீடுகளை செய்தனர். நான் அமைச்சராக இருந்த போது, கட்டார் ஒரு பில்லியன் முதலீடு செய்ய தயாரானது. ஓமான் மற்றும் பல இஸ்லாமிய நாடுகள் இவ்வாறு தயாராக இருந்தன. அந்த நாடுகளைப் பொறுத்தவரையில் இந்த நாட்டிலே வேறு எந்த எண்ணத்தையும் அதாவது, வளங்களை சூறையாட வேண்டும் என்ற கபட நோக்கம் இருந்ததில்லை. இந்த நாட்டில் சமாதானம், அபிவிருத்தி ஆகியவற்றை மட்டுமே சிந்திக்கின்ற இஸ்லாமிய நாடுகள் கூட, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவராக முஸ்லிம்களின் இறைவனை நிந்தித்த ஒருவரை ஏற்றுக்கொள்வார்களா? எனவே, இவற்றை எல்லாம் நீங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும். இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு நீண்டகாலம் அரசியல் செய்ய முடியாது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்.
இன்னுமொரு விடயத்தையும் நான் கூற வேண்டும். அண்மையில் நடந்த திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சட்டமாணி நுழைவுப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரேயே வெளியாகின. இது தொடர்பில், நீதி அமைச்சரும் கல்வி அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், அண்மையில் புத்தளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். அவர்களின் நிவாரணக் கொடுப்பனவுகள் மற்றும் பாதிப்புக்களை சரிசெய்வது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்." என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :