கொரோனாதொற்றுக்குள்ளான கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக நடந்தேறியமகப்பேற்று சத்திரசிகிச்சை!தாயும் சேயும் நலம்: கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை!
வி.ரி.சகாதேவராஜா-
கொரோனாத் தொற்றையுடைய 39வயது கர்ப்பிணியொருவருக்கு வைத்தியர்களின் அர்ப்பணிப்பினால் கொவிட் சுகாதார வழிமுறைக்கிணங்க பாதுகாப்பானமுறையில் அவசர மகப்பேற்றுச்சத்திரசிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

இவ் அவசர சத்திரசிகிச்சை கல்முனை ஆதாரவைத்தியசாலையில் முதல் தடவையாக நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

தற்போது தாயும் சேயும் அதே கொவிட் விசேட பிரிவில் 24மணிநேர கண்காணிப்பில் நலமாக பராமரிக்கப்பட்டுவருகின்றனர்.

கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரனிடம் தொடர்புகொண்டுகேட்டபோது ,பின்வரும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை காலை அம்பாறையையடுத்துள்ள சென்றல்கேம்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வார கர்ப்ப காலத்தையுடைய தாய் ஒருவர் மகப்பேற்றிற்காக அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்படும் போது மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதன் பின் வைத்தியசாலையில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.

இவருக்கான சிகிச்சைத் திட்டமிடல்கள், சிகிச்சைகள் அனைத்தும் மகப்பேற்றுப் பிரிவு, கோவிட் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட அனைவரினதும் அர்ப்பணிப்பான சேவை மூலம் நோயாளிக்கு வழங்கப்பட்டு வந்தது.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை பி.ப.6.00 மணியளவில் மகப்பேற்று சிகிச்சைப் பிரிவினரின் சிகிச்சைத் திட்டத்திற்கு அமைய அதே கொவிட் பிரிவில் அவசர சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் குழந்தையும் தாயும் வைத்தியசாலையில் அமைந்துள்ள கோவிட் விசேட சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்தும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தாயும் குழந்தையும் தேக சுகத்துடன் உள்ளனர்.

இந்த துணிகரமான அர்ப்பணிப்புடன்கூடிய சத்திரசிகிச்சையில் மயக்க மருந்து நிபுணர் உட்பட வைத்தியர்கள், சத்திர சிகிச்சைக்கூட தாதியர்கள் என அனைத்து ஊழியர்களும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

வைத்திய அத்தியட்சகரின் சிறந்த வழிகாட்டுதல் மூலமும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஏனைய அனைத்து ஊழியர்களினதும் அர்ப்பணிப்பான சேவைகள் மூலம் வைத்தியசாலையின் வழமையான சேவைகளுக்கு மேலதிகமாக பல மாதங்களுக்கு முன் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட கோவிட் நோயாளர்களுக்கான விசேட சிகிச்சை பிரிவின் மூலம் கோவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கான சிகிச்சைகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் 20க்கும் மேற்பட்ட படுக்கைகளையும் விசேட மகப்பேற்று சிறுபிள்ளை பிரிவுகளையும் கொண்ட இந்த விசேட கொவிட் பிரிவினூடாக இதுவரை சுமார் 130க்கு மேற்பட்ட கோவிட் உறுதிசெய்யப்பட்ட நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :