தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு!



லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக (2015-2021) உப வேந்தராக பதவி வகித்து, பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் புரட்சி ஒன்றினை மேற்கொண்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களது பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதியுடன் முடிவிற்கு வருகிறது. சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் குறிப்பிடும்படியான பல பங்களிப்புக்களை செய்துள்ளார். அத்தகைய அவரது பங்களிப்புக்களை நினைகூர்ந்து, அவரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வொன்றினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆளும் பல்கலைக்கழக பேரவை மற்றும் பல்கலைக்கழக சமூகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வு 2021.07.25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை (அதாவது இன்று) காலை 10 மணிக்கு அப்பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அரசாங்க சுகாதார வழிகாட்டலுக்கமைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உப வேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ், பல்கலைக்கழக பேரவை அங்கத்தவர்கள், பேராசிரியர்கள், நிருவாகிகள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சமய அனுஷ்டானத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வில், வரவேற்புரையினை பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.சீ.எம். நவாஸ் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் ஆற்றிய பணிகள் குறித்த குறிப்புரையொன்றினை அரசியல் விஞ்ஞானத் துறையின் தலைவர் பேராசிரியர் எம்.எம். பாஸில் வழங்கினார். அவரது உரையில் ஒரு ஆய்வு அறிவியல் நிறுவனமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உயர்ந்து நிற்பதில் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் ஆற்றிய அர்ப்பணிபுடன் கூடிய அரிய பங்களிப்பினை அவர் எடுத்துக்காட்டினார். பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமினை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வின் பிரதான உரையினை பேராதனை பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் சாலிந்த பெனரகம ஆற்றினார். இணையவழி கற்றல், கற்பித்தல் செயன்முறை குறித்த முக்கிய செல்நெறிகள் பலவற்றை அவரது உரை கோடிட்டுக் காட்டியது.

கோவிட் நோய் தொற்று பரவலுக்கு மத்தியில் தொடர்ந்தும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு மாற்று வாழியொன்றாக இணையவழி கற்றல் - கற்பித்தல் செயன்முறை விளங்குவதனை பேராசிரியர் சாலிந்த பெனரகம தனது உரையில் சுட்டிக்காட்டினார். எனினும் இணைவழி கல்வி நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுத்துச் செல்வதில் உள்ள இடர்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆனால் இப்போதைக்கு இணையவழி கல்வி நடவடிக்கைகளை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தி மாணவர்கள் உயர்ச்சி பெறவேண்டியது அவசியம் என்ற ஆழமான கருத்தினையும் அவரது உரையினூடாக உணரமுடிந்தது. அதேவேளை, இலங்கைப் பல்கலைக்கழகங்களின் இணையவழி கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் குறித்த சில புலமைத்துவ அனுபவங்களையும் பேராசிரியர் பெனரகம தனது உரையில் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பேராசிரியர் கொலின் என் பீரிஸ் சிறப்புரையொன்றினை நிகழ்த்தினார். அவரது உரையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முக்கிய அடைவுகள், எதிர்காலத்தில் அப்பல்கலைக்கழகம் பயணிக்க வேண்டிய பாதை குறித்த தெளிவுகள் அடங்கியிருந்தன. அதேவேளை, அவரது உரையில் சேவையினை நிறைவு செய்யும் உப வேந்தருக்கான பாராட்டுக்களும் புதிய உப வேந்தர் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயங்களும் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வினை சிறப்பிக்குமுகமாக சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி எஸ்.எம். அய்யூப் வாழ்த்துக் கவிதையொன்றினை வழங்கினார். இக்கவிதையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் ஆற்றிய பணிகள் இரத்தினச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களது ஆறு வருட சேவையினை நினைவுகூரும் வகையில் பேரவை உறுப்பினர்களான சிரேஷ்ட நிருவாக அதிகாரி, முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா, கலாநிதி அன்வர் எம். முஸ்தபா ஆகியோர் நினைவுச் சின்னத்தினை வழங்கிவைத்தனர். அத்துடன் தென்கிழக்குப் பல்கலையின் சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் உபவேந்தரின் அயராத உழைப்பை தனிப்பட்டமுறையில் கௌரவித்து பொன்னாடை போர்த்தி பரிசில் வழங்கி கௌரவித்தார். அதேபோன்று, நிகழ்வின் பங்குபற்றுனர்களால் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தியும் அவர் கௌவரவிக்கப்பட்டார்.

அடுத்த நிகழ்வாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களது ஏற்புரை இடம்பெற்றது. அவர் தனது உரையில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த பல்கலைக்கழகப் பேரவைக்கு நன்றி கூறியதுடன், தான் பல்கலைக்கழக உப வேந்தராக பதவியேற்றது முதல் எதிர்கொண்ட இடர்பாடுகள், அதனை ஊடறுத்து தான் வெற்றிகரமாக பயணித்த விதம் குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு உப வேந்தராக தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் பயனாக இப்பல்கலைக்கழகம் கல்வி, ஆய்வு உள்ளிட்ட துறையில் மேம்பட்டு நிற்பதனை நினைவுகூர்ந்த அவர், அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியினைத் தருவதாகவும் குறிட்டிருந்தார்.

நிகழ்வின் இறுதி அம்சமாக நன்றியுரையினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் நிகழ்த்தினார். ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே சீராக இடம்பெற்ற இந்நிகழ்வு, பங்குபற்றுனர்களின் மதியபோசன ஒன்றுகூடலுடன் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இந்நிகழ்வின் கதாநாயகனான எமது பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களை நாமும் வாழ்த்தி வழியனுப்புவோம். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வல்ல இறைவனின் ஆசி கிட்டட்டும்.




ஊடகப் பிரிவு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
ஒலுவில்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :