கல்முனை மாநகர சபையின் 06 ஊழியர்களுக்கு கொரோனாபெருந்தொகையானோர் கடமைக்கு சமூகமளிக்காமல் முடக்கம்;
மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் முதல்வர் றகீப்

அஸ்லம் எஸ்.மௌலானா-
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கல்முனை மாநகர சபையின் பெருந்தொகையான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க முடியாத சூழ்நிலையிலேயே திண்மக்கழிவகற்றல் சேவையையும் இதர பணிகளையும் முன்னெடுக்க வேண்டியிருப்பதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

பொது மக்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, மாநகர சபையின் சேவைகளில் குறைபாடுகள் ஏற்படுமாயின், அவற்றைப் பொருந்திக்கொண்டு, பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் கடமையாற்றுகின்ற 04 சுகாதாரத் தொழிலாளர்களும் பொறியியல் பிரிவில் ஒரு ஊழியரும் நிதிப் பிரிவில் ஒரு ஊழியருமாக 06 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடைய பல ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பாக மாநகர முதல்வர் இன்று (28) மாலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவைக்கு 150 சுகாதாரத் தொழிலாளர்கள் தேவையாக உள்ள நிலையில் 52 நிரந்தர ஊழியர்களும் 52 தற்காலிக ஊழியர்களுமாக 104 ஆளணியினரே எம்மிடம் உள்ளனர். இவர்களைக் கொண்டே முடியுமானவரை வினைத்திறனுடன் திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுத்து வந்த நிலையில், இவர்களுள் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 04 சுகாதாரத் தொழிலாளர்கள் உட்பட தனிமைப்படுத்தப்பட்டோர் உள்ளடங்கலாக 29 சுகாதாரத் தொழிலாளர்களினால் கடமைக்கு சமூகமளிக்க முடியவில்லை. அவ்வாறே ஏனைய பிரிவுகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு, கடமைக்கு சமூகமளிக்க முடியாதிருக்கின்றனர்.

அத்துடன் கொரோனா அபாய சூழல் காரணமாக மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானங்கள் யாவும் தடைப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு நிதி மற்றும் ஆளணிப் பற்றாக்குறைக்கு மத்தியிலேயே எமது மாநகர சபையானது திண்மக்கழிவகற்றல் சேவையையும் வடிகான் மற்றும் தெரு விளக்குப் பராமரிப்பு உள்ளிட்ட இதர பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இக்காலப்பகுதியில் மாநகர சபையின் சேவைகளில் ஏற்படுகின்ற குறைபாடுகளையும் அசௌகரியங்களையும் பொதுமக்கள் பொறுமையுடன் பொறுத்துக்கொள்ள வேண்டும் என வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.

அதேவேளை, சுனாமி அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்காக கல்முனை, இஸ்லாமாபாத் மற்றும் பெரிய நீலாவணை போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்ட மாடி வீட்டுத் திட்டங்களிலுள்ள மலசல கழிவகற்றல் தொகுதிகள், சரியான தொழில்நுட்பங்களுடன் முறையாக அமைக்கப்படாததால் அடிக்கடி கழிவுகள் வெளியாகின்ற அவலம் காணப்படுகின்றது. இதனை அகற்றும் பொறுப்பு மாநகர சபைக்குரியதென பலரும் நினைத்துக் கொண்டு எம்மீது விரல் நீட்டுகின்றனர்.

உண்மையில் இது மாநகர சபைக்குரிய விடயமல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதனை பரிபாலிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் அந்தந்த மாடி வீட்டுத் தொகுதிக்குரிய ஆதன முகாமைத்துவக் குழுவுக்குரியதாகும். இம்முகாமைத்துவக் குழுவின் தலைவராக பதவி வழியில் பிரதேச செயலாளர் கடமையாற்றுவார். அவர் தலைமையிலான இக்குழுவே குறித்த கழிவகற்றல் பிரச்சினையைக் கையாள வேண்டும்.

எவ்வாறாயினும் மனிதாபிமான அடிப்படையில் அவ்வப்போது மாநகர சபை இக்கழிவகற்றல் வேலையை செய்து கொடுத்து வருகின்றது. அதற்காக பிரச்சினை வருகின்ற ஒவ்வொரு முறையும் மாநகர சபையினால் இப்பணியைச் செய்து கொடுக்க முடியாது. அதுவும் கொரோனா பரவல் காரணமாக எமது ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில், இதற்கான ஒத்துழைப்பை எம்மிடம் எவரும் எதிர்பார்க்கக் கூடாது- எனவும் கல்முனை மாநகர முதல்வர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :