உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, UK ,சீனா உள்ளிட்ட நாடுகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் தற்போது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பிறகே இந்த தடுப்பூசிகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மருந்து நிறுவனமான பைசரும், ஜேர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. கொரோனா தொற்றுக்கு எதிராக அதிக எதிர்வினையாற்றும் தன்மை கொண்ட காரணத்தால் பைசர் கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்கா, UK உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.
மேலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராக பைசர் தடுப்பு மருந்து சிறந்த பலனை அளித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, அவசரகால பயன்பாட்டுக்கு பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ( Food and Drug Administration ) அனுமதி அளித்துள்ளது. 12 - 15 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது உலகளவில் இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக தங்களது தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பயன்படுத்த அனுமதியளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (Food and Drug Administration ) ‘பைசர்’ நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது.
தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக உலகளவில் பரவி வரும் நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன.

0 comments :
Post a Comment