திருக்கோவில் பிரதேசத்தில் ஆற்றுமண் எடுக்கவும் இல்மனைற் அகழவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டீ.வீரசிங்கவின் தலைமையில் செயலக கேட்போர்கூடத்தில் நேற்று புதன்கிழமை (3) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில்இ அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஆர். கமல்ராஜன் அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுன இணைப்பாளர் சாந்தலிங்கம் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
திருக்கோவில் பிரதேசத்தில் 03 பாரிய நீர்ப்பாசனக்குளங்களும் 75 விவசாயக்குளங்களும் உள்ளன. குறித்த நீர்ப்பாசன விவசாயக்குளங்களை புனரமைப்புச்செய்யப்படவேண்டும் என பிரதேசசெயலாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவை முதலில் 05குளங்களை புனரமைப்புச்செய்வதெனவும் படிப்படியாக ஏனைய குளங்கள் புனரமைப்புச்செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆறுகளைத்தோண்டுவது என்ற போர்வையில் மண் அகழ்வது தடைசெய்யப்படவேண்டும் என்றபிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டு இனிமேல் அப்படியான தேவைவரும்போது உள்ளுர் சமுர்த்தி மக்களைக்கொண்டு அகழ்வதென தீர்மானமாகியது.
பிரதேசத்திலுள்ள 25கிலோமீற்றர் விவசாயப்பாதைகள் புனரமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது
மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதில்லை. இல்மனைற் அகழும் திட்டத்தை மக்கள் விரும்பவில்லையெ பிரதேசசெயலர்கூறியபோது அத்திட்டத்திற்கு தடைவிதிப்பதென தீர்மானமாகியது.
மக்களது காணிகள் பல வனபரிபாலனத்துள் எடுக்கப்பட்டுள்ளது.இதற்கு இராஜாங்கஅமைச்சர் விமலவீரதிசாநாயக்க தலைமையில் கூட்டத்தை நடாத்தி முடிவெடுப்பது என்று தீர்மானமாகியது.
திருக்கோவில் பிரதேசத்தில் 400மீற்றர் மைதானம் எதுவுமில்லை. எனவே தாண்டியடி பாடசாலையில் அப்படியான மைதானத்தை அமைக்கவேண்டுமென கோரியபோது அதற்கு நடவடிக்கை எடுப்பதென தீர்மானமாகியது.
திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டபோது சுகாதாரஅதிகாரிகளைக்கொண்டு கூட்டம் நடாத்தி தீர்மானமெடுப்பது என முடிவானது.
வட்டமடு மேய்ச்சல் தரைப்பிரச்சினை மீள்குடியேற்ற கிராமங்களுக்கான விவசாய கிணறுகள் குடிநீர் தெரு மின்சார இணைப்பு கிராமிய பாலங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உள்ளூர் வீதிகள் வடிகான்கள் காஞ்சிரங்குடா நெற்களஞ்சியசாலை புனரமைப்பு வன இலாக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் யானை வேலி அமைத்தல் காணி காணி ஆவணங்கள் விவசாயம் சுகாதாரம் கல்வி நீர்ப்பாசனம் குளங்கள் புனரமைப்பு வீட்டுத்திட்டம் ஆலய புனரமைப்பு போன்ற பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு தீர்வுகளும் இதன்போது பெற்றுக்கொடுக்கப்பட்டது.
0 comments :
Post a Comment