திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட உமிரி கடலோரப்பிரதேசம் இல்மனைற் அகழ்வுக்கு உட்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
அங்கு கடந்தகாலங்களில் இதற்கெதிராக பல்வேறு எதிர்ப்பலைகள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் இன்னும் அந்நடவடிக்கை கைவிடப்படவில்லையென்று தெரிவிக்கப்படுகிறது.
திருக்கோவில் பிரதேசத்துக்குட்பட்ட பின்தங்கிய சங்குமண்கிராமம் உமிரி திருப்பதி ஆகிய குக்கிராமங்களில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன. இதில் உமிரிக்கிராமம் கடலோரத்திலுள்ளது.ஆதலால் இல்மனைற் அகழ்வாளர்களின் பார்வை அக்கிராமத்திலுள்ளது.
அவுஸ்திரேலியா தம்சிலா என்ற வெளிநாட்டு கம்பனி கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து உமிரியில் இல்மனைற் அகழ்வுக்கான பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதற்கென உள்ளுரிலும் முகவர்கள் செயற்பட்டுவருகின்றனர்.
அக் கம்பனி பல மட்டங்களிலும் பலமுயற்சிகளை எடுத்துவருகின்றபோதிலும் திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் இ.வி.கமலராஜன் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் ஆகியோரிடம் மக்கள் எதிர்ப்புமகஜர்களை கையளித்து ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடாத்தியிருந்தனர்.
இது தொடர்பில் பிரதேசசபைத்தவிசாளர் இ.வி.கமலராஜனிடம் கேட்டபோது : இல்மனைற் விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. மக்கள் எதிர்க்கிறார்கள். உமிரி தம்பட்டை மக்கள் எதிர்ப்புத்தெரிவித்து என்னிடம் மகஜர் தந்துள்ளனர்.இதேவேளை சுற்றுச்சூழல் அதிகாரசபையின் அறிக்கையும் வந்துள்ளது. எனினும் பொதுசனஅபிப்பிராயம் பெறுவதற்கான 3மாதகாலம் இன்றோடு நிறைவடைகிறது.மேலும் 3மாதகாலஅவகாசம் கேட்டு கம்பனிக்கு எழுதியுள்ளேன்என்றார்.
பிரதேசசெயலாளர் த.கஜேந்திரனிடம் கேட்டபோது மக்கள் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். அத்துடன் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இது தொடரவாய்ப்பில்லை என்றார்.
இந்நிலையில் கடந்தவாரம் திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் டபிள்யு.டி. வீரசிங்க எம்.பி. தலைமையில் முக்கியமான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.
அதாவது மக்கள் விரும்பாத எந்ததிட்டமும் இப்பிரதேசத்தில் அமுல்படுத்தப்படமாட்டாது என்றும் குறிப்பாக இல்மனைற் அகழ்வு ஆற்றுமணல் ஏற்றுதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த உயர்மட்டத்தீர்மானம் அமுலாகுமா? அல்லது அதுவும் நீர்த்துப்போகுமளவிற்கு பணம் மற்றும் செல்வாக்கு பாயுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
0 comments :
Post a Comment