1988.03.31 மதியம் 11.00-13.00
பயங்கரவாத தர்மயுத்தம் ஒருபக்கம்
இனவாத அதர்மயுத்தம் மறுபக்கம்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் 1988.03.31ஆம் திகதி காலை 11.00 மணியளவில் காரைதீவின் எல்லைப்பகுதியிலிருந்த முஸ்லீம் மக்கள் படிப்படியாக தமது பிள்ளைகள் துணிமணிகள் சகிதம் மெதுவாக சாய்ந்தமது பக்கம் நகரத் தொடங்கினர்.பின்னர் இந்திய அமைதிகாக்கும் படை (Indian peace keeping force) IPKF இன் நடமாட்டமும் சற்று அதிகரித்துக் காணப்பட்டது.அப்பாவிப் பொதுமக்கள் இந்தியாவிலிருந்து அமைதி காக்கத்தானே வந்திருக்கின்றார்கள் இவர்கள் எமக்கு பாதுகாப்பாகத்தானே இருப்பார்கள் என நினைத்து முன்னேற்பாடுகள் ஏதுமின்றி தமது வழமையான அலுவல்களை மேற்கொண்டனர்.
மாளிகைக்காடு சாய்ந்தமருது முஸ்லிம் மக்கள் வேகமாகவே இயங்கிக்கொண்டிருந்தனர். இவ்வேளை சரியாக 12.00 மணியளவில் பாரியவெடிச்சத்தங்கள் துப்பாக்கிவேட்டுக்கள் முஸ்லீம்மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி ஏவப்பட்டன.
மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு கொதிவெயிலில் பசியோடும் தமது வயோதிப உறவினர்களையும் கைக்குழந்தைகளையும் சுமந்தவர்களாகவும் மற்றும் கணவன்மார்களை இழந்து துக்க அனுஷ்டானம் (இத்தா) அனுபவித்துக் கொண்டிருந்த விதவைகளையும் தூக்கிக் கொண்டு அவலக்குரல்களுடன் பீதியுடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும்வேளை சாய்ந்தமருது 5ஆம் குறிச்சிப் பள்ளிவாசல் (தற்போதைய அல் மஸ்ஜிதுல் தக்வா ஜும்ஆ பள்ளிவாசல்)லில் பொருத்தியிருந்த ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலும் மதியநேர லுஹர் தொழுகைநேரம் என்பதனாலும் பள்ளியில் ஒன்றுகூடுமாறு அழைப்புவிடுத்தோம்.
வீதிகளில் அலைந்து ஓடோடிக்கொண்டிருந்த மக்கள் பலர் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி மைதானம் வரைசெல்ல சிலர் இப்பள்ளிவாசலுக்குள் தஞ்சம் புகுந்தனர்.வெளியில் அகதிமுகாம் (Refugees Camp)என எழுதி ஒட்டிவிட்டு ஒலிபெருக்கிமூலம் தக்பீர் முழங்கிக் கொண்டிருந்தோம்.
சற்று நேரத்தின்பின்னர் பள்ளிவாசல் பொதுமக்களால் நிரம்பிவழிந்ததுடன் அவலக்குரலால் தக்பீர் முழக்கம் தளம்பல் சப்தமாக காணப்பட்டது.திடீரென வீதியினால் வந்த மூன்று இந்திய அமைதிகாக்கும் படை வண்டிகளில் வந்த படையினர் பள்ளியைச் சுற்றி பாதுகாப்பில் நிற்கின்றனர் என ஆறுதலடைந்த நாம் சற்று நம்பிக்கைப்பெருமூச்சு விடுவதற்கிடையில் திடீரென இன்னொருபடையினர் (தமிழ் தேசிய இராணும்) அதிநவீன ஆயுதங்களுடன் வெளியில்வந்து சுற்றிவளைத்ததுமட்டுமன்றி அவர்கள் கொண்டுவந்த ஆயுதங்களைக்கொண்டு அப்பாவி மக்கள்மீது சரமாரியான துப்பாக்கித்தாக்குதல்களையும் மேற்கொண்டனர் இதனால் சரியாக லுஹர் தொழுகை நேரத்திலேயே தக்பீர் ஓசை முழங்கி அல்லாஹ்வின் உதவியைநாடிக் கொண்டிருந்தவேளையிலேயே அல்லாஹ் பலரின் உயிர்களை தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டான்.
இன்னாலிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அனைவரும் அல்லாஹ்வின் திருக்கலிமாவை மொழிந்தவர்களாக பீஸபீல்களாகஸஹீதாக்கப்பட்டார்கள்.
அனைவரும் அல்லாஹ்வின் திருக்கலிமாவை மொழிந்தவர்களாக பீஸபீல்களாகஸஹீதாக்கப்பட்டார்கள்.
நெஞ்சுகளை நிமிர்த்தி அனைத்துத் துப்பாக்கிரவைகளையும் தமது நெஞ்சுகளில் சுமந்தவர்களாக நிலத்தில் சாய்ந்தார்கள்.இதில் ஆண்கள் பெண்கள் இளைஞர் யுவதிகள் சிறுவர் சிறுமியர்கள் ஏன் பச்சிளம் பாலகர்களும் துடிதுடித்து ஷஹீதாக்கப்பட்டவேளை மனித இரத்தத்தில் நீந்தி நீராடி அந்த துப்பாக்கிதாரிகளின் இரும்புச்சப்பாத்துக்களால் நெஞ்சில் ஏறிமிதிக்கப்பட்டும் கால்களால் உருட்டப்பட்டும் மூச்சை அடக்கிக்கொண்டு கண்களால் அந்த அகோர அல்லோல அவலக்காட்சியைக் கண்டு இன்றுடன் முப்பத்திமூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இச்சம்பவத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்கள் காயப்பட்டவர்களையும் நினைத்து அல்லாஹ்விடத்தில் இறைஞ்சி துஆச் செய்கின்றேன்.இச்செய்தியை பதிவிடுகையில் கண்கள் குளமாகின்றன இதயங்கள் கனக்கின்றன.
அல்லாஹ் அவர்களைப் பொருந்தி மேலான சுவர்க்கத்தை வழங்க இறைவனிடம் துஆச்செய்வோம்.
எஸ்.எம்.அமீர்
20210331
0 comments :
Post a Comment