முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு.வி.விமலநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற குறித்த இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ #காதர் #மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நஷ்டஈட்டு காசோலைகளை பயனாளிகளுக்கு கையளித்து வைத்தார்.
நிதி அமைச்சின் நஷ்டஈட்டு அலுவலகத்தின் ஊடாக வழங்கப்பட்ட இந்தக் கொடுப்பனவானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிரிழப்பு மற்றும் சொத்திழப்பு ஆகியவற்றிற்காக வழங்கப்பட்டது.
குறித்த கொடுப்பனவின் கீழ் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 30 பயனாளிகளும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 26 பயனாளிகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 49 பயனாளிகளும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 15 பயனாளிகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 25 பயனாளிகளுமாக மாவட்டத்தில் 145 பயனாளிகள் உட்பட பொது இடங்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கலின் கீழ் நான்கு இடங்களுக்கும் இக்கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 10.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பயனாளிகளின் இருப்பிட தொலைவுத் தன்மை ஆகியனவற்றை கருதி முதற்கட்டமாக இன்று கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் இன்றைய தினம் வழங்கப்பட்ட அதேவேளை நாளை துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டவர்களுடன் பயனாளிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment