M.I.இர்ஷாத் -
கம்பஹா மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்துவரும் கொரோனா நாட்டின் ஏனைய பாகங்களிலும் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை எதிர்கட்சிகள் அரசாங்கத்திடம் இன்று கேள்வி எழுப்பியுள்ளன.
இந்த விவகாரம் பற்றி வெள்ளிக்கிழமையேனும் விவாதத்தை நடத்துவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பி.சி.ஆர் பரிசோதனைக்கூட ஒழுங்குமுறையாக நடத்தப்படுவதில்லை என்றும் குளியாப்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா தொற்று கொத்தனிகளாக பரவிவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் குறித்து விவாதமொன்றை சபையில் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார்.
இதனிடையே சஜித் பிரேமதாஸ மற்றும் சுகாதார அமைச்சரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சமூக ரீதியில் இந்த தொற்று பரவவில்லை என்பதை தொற்றுநோய் ஆய்வுப் பிரிவுகூட தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சும், தொற்றுநோய் ஆய்வுப் பிரிவும் விரைந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.
மேலும் யால பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சென்றுள்ள நிலையில், அங்கு கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருப்பதால் இரண்டாவது தொற்றாளராக சஜித் பிரேமதாஸ அடையாளப்படுத்தியிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் கேலியாகக் கூறினார்.
இதனால் சபையில் மிகப்பெரிய கூச்சல் ஏற்பட்டது.
சமூகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதால் அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளாமல், அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சஜித் பிரேமதாஸ தொடர்ந்தும் சபையில் தெரிவித்தார்.
நாட்டில் மிகப்பெரிய சுகாதார சவால் ஏற்பட்டிருப்பதால் இதனை அரசாங்கம் முதன்மைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதுகுறித்து கலந்துரையாடி நாளை முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
0 comments :
Post a Comment