காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கடரோரம் அண்மைக்காலமாக பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகிவருகிறது. அதன் கோரத்தாக்கம் அங்குள்ள மையவாடியில்(மயானம்)இடம்பெற்றுள்ளது. அதனகாரணமாக மையவாடி சுற்றுமதில் இடிந்துவீழ்ந்துள்ளது.
மையவாடியின் சுற்றுமதில்கள் கடலரிப்புக்கு உள்ளாகி இடிந்து விழுந்துள்ளதை அடுத்து அதனை பாதுகாக்க நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் பரவலாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். மையவாடியின் சுற்றுமதில் உடைந்து விழுந்தமை காரணமாக புதைக்கப்பட்டுள்ள சடலங்கள் கடலில் அடித்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து தற்காலிக தீர்வாக உரப்பைகளில் மண் இட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பகல் இரவாக சுழற்சி முறையில் மூடி வருகின்றனர்.
குறித்த அவல நிலைமையை அறிந்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் காரைதீவு பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார் காரைதீவு பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் உள்ளிட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் சுற்றுமதிலின் ஒரு பகுதி கடலரிப்புக்கு இலக்காகி இடிந்து விழுந்துள்ளது.கடலரிப்பை தடுத்து ஜனாஸா மையவாடியின் சுற்றுமதிலை பாதுகாக்க காரைதீவு பிரதேச சபையின் உதவியுடன் குறித்த துறைக்கு பொறுப்பான காரைதீவு பிரதேச செயலக அதிகாரியின் ஆலோசனையுடனும் மேற்பார்வையுடனும் மண் மூட்டைகளை அடுக்கும் சிரமதானப்பணி அண்மையில் நடைபெற்றிருந்து. ஆனால் அந்த தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கையும் கைகூடவில்லை.
மதில் இடிந்து விழுந்ததால் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள்(பிரேதங்கள்) கடலரிப்பின் காரணமாக இனிவரும் நாட்களில் வெளியேறும் நிலை ஏற்படுட்ள்ளது. இதனால் பல அசௌகரியங்கள் ஏற்பட்டு வருவதனால் அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் எடுத்து நிரந்தர தீர்வை பெற்றுத்தர முன்வரவேண்டும் என மாளிகைக்காடு பொதுமக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைக்கின்றனர்.
0 comments :
Post a Comment