ஜனநாயக ஆட்சியிலிருந்து பிற்போக்கான ஆட்சியை நோக்கியே அரசாங்கம் செல்கின்றதென்றும், இதனை நாம் முற்றாக எதிர்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
JVPயின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில்:-
தற்போது நாட்டிலுள்ள பிரச்சினைகளில் அரசியலமைப்பு பிரச்சினை பிரதானமானது அல்ல. அதிகாரங்கள் அனைத்தையும் ஒருவரிடம் ஒப்படைத்து ஜனநாயக ஆட்சியிலிருந்து பிற்போக்கான ஆட்சியை நோக்கியே அரசாங்கம் செல்கிறது.
சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடிய அதிகாரத்தைக் கொண்ட மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பாரளுமன்றத்தை ஒரு வருடத்திலும் கலைக்க முடியுமென்ற அதிகாரத்தை 20 இல் கொண்டு வந்திருக்கின்றனர். இதே போன்று நீதித்துறை நியமனங்கள் தொடர்பான அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன.
முன்னரைப் போன்று அல்லாமல் முழுமையாக ஜனாதிபதிக்கு தேவையானவர்களை மாத்திரம் கொண்ட ஆணைக்குழுக்களே 20 இன் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. அமைச்சரவை, பாரளுமன்றம், நீதித்துறை என அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி தன்வசப்படுத்தியுள்ளார்.
பிரதமருடைய அதிகாரங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான J.R ஜயவர்தன மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடைய ஆட்சியின் கீழ் செயற்பட்ட பிரதமர்களுடைய நிலையே தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதை விட அதற்காக அரசியலமைப்பை மாற்றியமைப்பது சிறந்தது எனக்கருதி அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அது மாத்திரமின்றி மக்களின் அடிப்படை உரிமைகளை ஜனாதிபதி மீறினாலும் அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.
அவசரமாக சட்டத்தைக் கொண்டு வருவதற்காக அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு மக்களுக்கு காணப்படுகின்ற உரிமையை நீக்குவதற்கு குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment