எம்.பௌசர் இலண்டன்-
ஒவ்வொருவரும் தாம் ஆற்றிய பணிக்காக வரலாற்றில் நினைவு கூரப்படுகின்றனர். அத்துடன் இத்தலைமைகள் விமர்சிக்கப்படுவதுடன் போற்றவும்படுகின்றனர். இவர்களுள் முஸ்லிம் சமூகத்திற்காக தனித்துவமான அரசியல் இயக்கமொன்றை வழி நடாத்தி அதனை இலங்கையின் அரசியல் வரலாற்றில் மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியவர் என்கிற வகையில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கு தனியிடமுண்டு. மேல் குறிப்பிட்ட தலைவர்களுடன் ஒப்பிடுகின்ற போது முக்கியமானவராகவும் அதேவேளை அதீத ஆளுமை நிரம்பியவராகவும் அவர் இருந்தார்.
இன்னொரு வகையில் சொன்னால் அந்த ஆளுமை மரத்தினைப் போல் நமது தோட்டத்தில் வேறு விருட்சங்கள் இன்னும் இல்லை எனலாம்.
20 வருடங்கள் இட்டு நிரப்பப்படமுடியாத வெறுமை. காற்றில் கலந்து கம்பீரமாக ஒலிக்கும் அந்தக் குரல், அளவிடமுடியா ஆகுதி, அவருக்குப் பின் முஸ்லிம் காங்கிரஸ் அடிவழியாக வந்த அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் பதவி வழங்கும் கொடையாக இருக்கிறது. இது சாத்தியப்படுவதற்கும், முஸ்லிம் மக்கள் இன்னமும் அவர் வழி நடாத்திய தேசிய அரசியல் இயக்கத்தின் விசுவாசமிக்க வாக்காளர்களாகவும் அதன் தீவிர ஆதரவாளர்களாகவும் இருப்பதற்கு அசையாக் காரணமும் அடிக்கட்டுமாணமாகவும் இன்றுவரை இருப்பது மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் தான்.
20 வருடங்கள் இட்டு நிரப்பப்படமுடியாத வெறுமை. காற்றில் கலந்து கம்பீரமாக ஒலிக்கும் அந்தக் குரல், அளவிடமுடியா ஆகுதி, அவருக்குப் பின் முஸ்லிம் காங்கிரஸ் அடிவழியாக வந்த அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் பதவி வழங்கும் கொடையாக இருக்கிறது. இது சாத்தியப்படுவதற்கும், முஸ்லிம் மக்கள் இன்னமும் அவர் வழி நடாத்திய தேசிய அரசியல் இயக்கத்தின் விசுவாசமிக்க வாக்காளர்களாகவும் அதன் தீவிர ஆதரவாளர்களாகவும் இருப்பதற்கு அசையாக் காரணமும் அடிக்கட்டுமாணமாகவும் இன்றுவரை இருப்பது மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் தான்.
மரணிக்கும் வரை ஒரு சமூகப் போராளியாகவும், வரித்துக் கொண்ட இலட்சியத்தின் ஆன்மாவுக்கு முற்று முழுதாக துரோகமிழைக்கத் துணியாதவராகவும் அவர் இருந்தார் என்பதே மக்கள் அவரை இன்னமும் நினைவு கூர்வதற்கும் போற்றப்படுவதற்குமான அடிப்படையாக இருந்து வருகிறது.
இலங்கையும் பல்தேசிய இனங்களின் சிறைக் கூண்டு என்பர்,தேசிய இன ஒடுக்குமுறை பிரயோகிக்கப்படுகின்ற அதே நேரம்,குறிப்பிட்ட ஒரு வர்க்கப் பிரிவினரும் அவர்களின் நலனும் பாதுகாக்கப்படுகின்ற அரசியல் ஏற்பாடுகளை கொண்டதாகவும் இலங்கை அரசியல் திட்டமும், நடைமுறையும் இருந்து வருகிறது.
இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களும் மைய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக, அளவிலும் பண்பிலும் வேறுபட்டு,காலத்திற்கு காலம் போராடி இருக்கின்றனர். போராடியும் வருகின்றனர். சிங்கள மக்கள் இரண்டுமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி உள்ளனர். தமிழ் மக்கள் அகிம்சா வழியிலும் ஆயுதமேந்தியும் போரடியுள்ளனர். மலையக மக்களுக்கும் ஜனநாயக, தொழிற்சங்க போராட்ட வரலாறு உள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் மைய அரசின் பல்வகையான ஒடுக்குமுறைகளுக்கு தொடர்ச்சியாக ஆளாகி வந்ததன் காரணமாகவும், 1980க்குப் பின் தமிழர் அரசியல் வழிவந்த ஆயுத இயக்கங்களின் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்களும், முஸ்லிம்களின் தாயகமுமான வடக்கு, கிழக்கு மண்ணில்,முஸ்லிம் மக்களின் இருப்பின் மீதான அடக்குமுறைகளும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் ஸ்தாபனத்தினை உருவாக்குவதற்கான அரசியல் தேவைப்பாட்டினை ஏற்படுத்தி இருந்தன. அத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முஸ்லிம்களுக்குள் எழுந்த அரசியல் விடுதலை உணர்ச்சியின் ஊற்றாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதற்கு தலைமையேற்ற எம்.எச்.எம் அஷ்ரபும் இருந்தார்.
அவருடைய பாத்திரமும் பணியும் இலேசுப்பட்டதாக இருக்கவில்லை. ஒரு பக்கம் இலங்கையின் சிங்கள சோவனிச அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதுடன், வடக்கு கிழக்கில் நடைபெற்று வந்த தமிழ்த் தேசிய ,இன விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்த ஆயுத இயக்கங்களின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புற ரீதியாக இவைகளையும் அக ரீதியாக கொழும்பு முஸ்லிம் அரசியல் தலைமைகளின் எதிர்ப்பினையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
அன்று முஸ்லிம் இளைஞர், யுவதிகள் அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழ் ஆயுத இயக்கங்களுக்கு எதிராகவும் ஆயுதமேந்திப் போராடுவதற்கான அனைத்து சூழலும் காரணகாரியங்களும் இருந்தன. மர்ஹும் அஷ்ரப் அவர்களின் தலைமை இதில் இருந்து முஸ்லிம் சமூகத்தினை, ஜனநாயக அரசியல் தளத்திற்கு திருப்பியது. பாராளுமன்ற ஜனநாயகப் பாதையை தற்காலிக மாற்று வழியாக அன்று முன் நிறுத்தியது. இது அவரின் மிக முக்கிய பாத்திரமாக கருதப்படுகிறது.
அவர் முஸ்லிம் சமூகத்தின் ஆன்மாவாக, அதன் அரசியல் விடுதலையின் அசையா மாலுமியாக இருந்தது மிக சொற்ப காலம்தான். கட்சியின் அரசியல் தலைவராக கிட்டத்தட்ட 15 வருட காலம். பாராளுமன்ற உறுப்பினராக 11 வருட காலம். அமைச்சராக 05 வருடம் இதுதான் அவருடைய முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் காலகட்டமாகும். ஆனால் அந்த வரலாற்றுப் பங்களிப்பாளனை மதிப்பிடுவதற்கு இக்கால கட்டத்தினையும் தாண்டிய அவரது ஆயுள் பரியந்தம் முழுதும் நமக்கு அவசியமாகிறது. அவர் ஒரு எழுத்தாளர், ஊடகவியலாளர், கவிஞர், வாசகர், சிறந்த மேடைப்பிரசங்கி, சட்டவாளர், மனிதாபிமானி,அழகியல் உணர்வு கொண்டவர், இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி மனித குலத்தினை நேசித்த மனிதாத்மா, முற்போக்குவாதி, ஆன்மிகவாதி.
ஒரு சமூக அரசியல் மாணவன் என்கிற வகையில் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களை மீள்வாசிப்பு செய்வது அவசியம் எனக் கருதுகிறேன். என்னைக் கேட்டால் அவரை வெறுமனே ஒரு அரசியல்வாதியாக மட்டும் குறுக்கிப் பார்ப்பது அவர் பற்றிய முழு விம்பத்திற்குமான தரிசனத்தினை தராது. அது முழுமைக்குமான வாசலையும் திறந்து விடாது. அவரை ஆழமாகப் படிக்கவும், மீள் வாசிப்பு செய்யவும் விரும்புபவர்கள் அவரது எழுத்துக்களை, உரைகளை தேடி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரது அனைத்துக் கவிதைகளும் அடங்கிய பெருந் தொகுப்பு ஒன்று வந்துள்ளது.
அவர் அரசியல், சமூகவாழ்வு சார்ந்து குறிப்புகள், வாழ்க்கை சரிதம் தொடர்பாக இரு நூல்கள் வந்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது பாராளுமன்ற உரைகளைத் தொகுத்த மூன்று தொகுப்புகள் உள்ளன. இவைகள் அவரது சுய வார்த்தைகளாகும். அவரது கவிதைத் தொகுப்பு இவற்றுள் மிக முக்கியமாகும், ஏனெனில், 1960களில் இருந்து அவர் மரணிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையான அவரது வாழ்வின், போராட்ட அரசியல் பயணத்தின் உணர்வுகளை இத் தொகுப்பு மூலமாக மர்ஹும்ம் எம்.எச்.எம் அஷ்ரப் நமக்கு கையளித்திருக்கிறார். அவரைப் பற்றி நாம் உண்மையான நோக்கில் மீள மீள தேடிக் கண்டடையும் போது மட்டும்தான், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைப் பயணம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது? அதன் இன்றைய பயணம்,முஸ்லிம் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சிக்கும், மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் ஆத்மாவுக்கும் விசுவாசமானதாக இருக்கிறதா? என்பதை நிதானித்து கணக்கெடுப்பதற்கு பெரும் உதவி புரியும்.
16. செப்டம்பர் 2000 நாளில் மிகத் திட்டமிடப்பட்டு எம்.எச்,எம்.அஷ்ரப் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலையின் பின்னால் சர்வதேச சக்திகளின் கை இருப்பதுடன், ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவும் அந்த உன்மத்த ஆத்மா இருந்துள்ளது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அவரை அழிப்பதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தினை சிதைத்து பலவீனப்படுத்துவதுடன், இலங்கையின் மைய அரசியலில் தவிர்க்கவியலாத் தன்மையுடன் எதிர்காலத்தில் முக்கிய பாத்திரமொன்று வகிக்க இருந்த ஒரு அரசியல் ஆளுமையை அழித்தொழிப்பு செய்வதும் அதன் முக்கிய இலக்காக இருந்திருக்கிறது என்பதில் நான் இன்றும் உறுதியாக இருக்கிறேன்.
மர்ஹும் அஷ்ரப் வழி வந்த, இன்றைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எல்லாம், அவரின் நினைவை தமது அரசியலுக்கான மூலதனமாக்கி, ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 16இல் நினைவு கூர்கின்றனர். ஆனால் அவரின் அரசியல் கொள்கைகளை, நிலைப்பாடுகளை, இலங்கை முஸ்லிம் அரசியலில் அவர் வகித்த வகிபாகத்தை யாரும் முழுதாக முன் கையெடுத்து செய்பவர்களாக இல்லை. முஸ்லிம்களுக்குள் அரசியல் அதிகாரத்தினை கைப்பற்றுவதற்காக தேர்தல் காலங்களிலும், அவர் சஹீதான தினத்திலும் மட்டுமே மர்ஹும் எம். எச்.எம்.அஷ்ரப் நினைவு கூரப்பட வேண்டியவராகி விட்டார். இதனையும் கடந்து அவர் சதா நினைவு கூரப்படவும், இலங்கை முஸ்லிம்களின் அரசியல், சமூக வரலாற்றில் அவர் மீள்வாசிப்பு செய்யப்படவும் வேண்டிய தேவையும் அவசியமும் நம்முன் உள்ளது.
நமது அரசியல் தோல்வியினதும், மீள முடியா கைசேதத்தினது வலியும், உண்மையும்தான் இன்றும் அந்த உன்னதத் தலைவனை நினைக்கத் தூண்டுகிறது.முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் வெறுமனே உணர்ச்சி சார்ந்த அரசியல் கோசத்தினுள்ளும்,அதிகாரத்தினை சுகிப்பதற்கான தேர்தல் போட்டியிலும் மட்டுமே உச்சரிக்கப்பட்டு வரும் எம்.எச்.எம். அஷ்ரப் எனும் நாமம், அந்த மகத்தான மனிதன் முன்னெடுத்த அரசியல் கோட்பாட்டில், கருதுகோளில், இன்றைய தலைமைகளின் வழிமுறையில் இல்லாமலே போய் விட்டது என்பதை உணர மறுப்பதும், அரசியல் ரீதியாக இலங்கை முஸ்லிம்களை ஏமாற்றும் முஸ்லிம் தலைமைகளை அரசியல் அறிவு சார்ந்து கேள்விக்குட்படுத்த முடியாத கையாலாகாத நிலையும் இன்னும் இன்னும் அந்த மனிதனை நினைக்கத் தூண்டுகிறது. அவரை மேலும் மேலும் தேடத் தூண்டுகிறது.
இன்னும் சொல்லப்போனால், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலத்தினை சிதைக்க வேண்டுமென்றால், வீறார்ந்த, ஆளுமைக் கூறுகள் ஒருங்கே திரண்ட அஷ்ரப் என்கிற அந்த மனிதாத்மாவின் உயிரினை அழிக்க வேண்டுமென எதிரிகள் தேர்ந்தெடுத்த உயிராக அஷ்ரப் இருந்தாரே என்பதற்காக, சமூகத்திற்காய் தன்னுயிரை ஈர்த்த தற்கொடைக்காக அந்த தியாகமிகு வரலாற்றை, தேடித் தேடிக் கண்டடைந்து எழுதத் தோன்றுகிறது.
நான் எதிர்காலத்தில் எழுத வேண்டுமேன நினைப்பதில், இலங்கை முஸ்லிம்களின் சமூக அசைவியக்கத்தில் “எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பாத்திரமும், காலமும்"என்பதும் ஒரு நூலாகும். இதற்கு மிகப்பெரும் தேடலும் உழைப்பும் வேண்டும். அது சாத்தியப்படல் வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். நான் ஏன் இதனை எழுத வேண்டுமென நினைக்கிறேன் என்றால் இன்னும் யாரும் அந்தளவுக்கு அப்பணியை செய்யவில்லை என்பதே பிரதான காரணம்.
இலங்கை முஸ்லிம்களுக்குள் இன்னும் அவர் தலைமை தாங்கி வழிப்படுத்திய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் அரசியல் இயக்கம், அவர் மரணித்ததிலிருந்து இன்று வரை இலங்கை முஸ்லிம்களின் மிகப்பெரிய அரசியல் இயக்கம் என்னும் கோசத்துடன் அதிகாரத்தில் உள்ளது.
அவரது மரணத்தின் பின், அதிகாரப்போட்டியில் உள்முரண்பாடுகளின் காரணமாக பிரிந்து வந்தவர்களே இன்றுவரை குறு நில மன்னர்கள்போல் அதிகாரத்தில் இருந்திருக்கின்றனர், இருந்து வருகின்றனர்.
அவர் வடிவமைத்து உருவாக்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம், அதிலிருந்து உருவாகிய, உருவாகி வருகின்ற தொழில்முறை அறிஞர்கள், ஆய்வாளர்கள் உள்ளனர்.அவர் வழங்கிய சமூக உயர் நிலைத் தொழில் வாய்ப்புகள், பதவி உயர்வுகள் காரணமாக சமூக மேல் நிலையாக்கம் பெற்ற ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
அரசியல் அதிகாரம், அம்பு, படை, பணம் , பல்கலைக்கழகம், அறிவு, ஆற்றல் இவை அனைத்தும் இருந்தும் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பற்றிய விரிவான சமூக, அரசியல் ஆய்வுகள் வரவில்லை?, ஏன் குறைந்தது அவரது மரணம் பற்றிய விடயங்கள் பதியப்படவில்லை என்னும் குறை, இன்றுவரை என்னைப் பிடித்து உலுக்கி வந்திருக்கிறது. இந்தக் கேள்விகள் என்னைப் போல் சாதாரணமான பல ஆயிரம் பேருக்கு இருந்து வருகிறது. அந்த எதிர்பார்ப்பிற்கு கைதரும் வகையில், அஷ்ரப் அவர்களின் மரணம் பற்றிய குறிப்புகள் என்கிற வகையில் இந்த நூல், அதன் பணியை செய்திருக்கிறது. இருந்தும் இதுவும் ஒரு பகுதிதான். இந்த மரணத்தின் இலங்கை அரசாங்கத்தின் பகுதியும், அவர்கள் மறைக்க நினைப்பவைகளும் இந்த நூலில் உள்ளன.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின், அவரது மரணம் தொடர்பான நூலொன்றை சகோதரர் சர்ஜூன் ஜமால்தீன், நீண்ட தேடலும் உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டு வெளியிட முன்வந்துள்ளார்கள். அவரது சொந்தக் கட்சியினர், அவரை வாக்கு சேகரிப்பதற்கான குறியீடாகப் பயன்படுத்துவோர் மத்தியில், அஷ்ரப் இறக்கும் போது 09 அல்லது 10 வயது சிறுவனாக இருந்த இந்நூலின் ஆசிரியர் சர்ஜூன் ஜமால்தீன்,தனது அரசியல், சமூக வாசிப்பு வழியாக அஷ்ரப் அவர்களைக் கண்டைந்து இந்த நூலை வெளியிடதன்னை அர்ப்பணித்து உழைத்திருப்பது மிக முக்கியமானது, மனம் கொள்ளத்தக்கது.
இந்த தேடல்மிகு நூலை பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி அவரை எழுதத் தூண்டியிருப்பது அவரது சமூகம் மீதான உண்மையான நேசம்தான் என்பது வெள்ளிடைமலை. இதன்மூலம் இந்நூலாசிரியரும் உதவி நூலாசிரியரும் எந்த நலன்களையும் அடைந்துவிட முடியாது. மாறாக நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் மட்டுமே எதிர் கொள்ள முடியும். அஷ்ரப் அவர்களின் நாமத்தினை உச்சரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு, அதன் தலைமைகளுக்கு இல்லாத ஒரு துணிவு இந்த சகோதரருக்கு இருக்கிறது என்பது இந்த பங்களிப்பின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இவரின் இந்த அர்ப்பணமிக்க உழைப்பு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமை, அஷ்ரப் அவர்களின் வழி நிற்பவர்கள் என்போரை அவர்களது தார்மீகக் கடமையில் இருந்து தவறி வந்திருக்கின்றனர் என்பதை வரலாற்றில் அழுத்தி பதிய வைக்கும்.
மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் படுகொலை மரணம், 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வடோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது. அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு உள்ளூர் திட்டமிடல் அல்ல. இதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன். அதற்கு ஏவப்பட்ட ஒரு கருவியே விடுதலைப் புலிகள். இதன் பின்னால் நோர்வே, மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் இருந்துள்ளனர்.
2002இல் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த அரசியல் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய காய் நகர்த்தலே மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலாகும்.
மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் படுகொலை மரணம், 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வடோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது. அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு உள்ளூர் திட்டமிடல் அல்ல. இதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன். அதற்கு ஏவப்பட்ட ஒரு கருவியே விடுதலைப் புலிகள். இதன் பின்னால் நோர்வே, மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் இருந்துள்ளனர்.
2002இல் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த அரசியல் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய காய் நகர்த்தலே மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலாகும்.
ஒரு நாட்டில் ஒரு விடயத்தினை செய்வதற்கு முன், தமது நிகழ்ச்சி நிரலை தங்கு தடையின்றி நிகழ்த்த வாய்ப்பான சூழலை, சர்வதேச ஆதிக்க அரசுகள் எப்படித் திட்டமிடும், அதற்கு என்ன என்ன செய்யும் என்பதை, சமகால சர்வதேச அரசியல் தொடர்பில் அறிவுள்ளவர்கள் ஒரளவேணும் புரிந்து கொள்ளலாம்.
அஷ்ரப் அவர்களின் பெயரை வெறுமனே தமது மோட்சத்திற்கும், பெருமைக்கும், அரசியல் இருப்புக்கும் பயன்படுத்துவோருக்கு, சமூகப் பொறுப்புமிக்க இளைய தலைமுறையைச் சேர்ந்த சர்ஜுன் ஜமால்தீன் எனும் இளைஞனின் சரியான எதிர்வினையுமாக இந்த பங்களிப்பு அமைந்துள்ளது என்பது முக்கியமானது. இவருக்கு தோழமையுடன் எனது நன்றிகள். நாம் செய்யத்தவறிய பணியை நம் சகோதரர்கள் செய்யும் போது அவர்களுக்கு நாம் நன்றியைக் கூட சொல்ல மாட்டோமா?
0 comments :
Post a Comment