மக்கள் ஆதரவுடன் சமுகமாற்றத்தை ஏற்படுத்துவது நோக்கமாகும்.
மாமூல் அரசியலைவிடுத்து புதியஅரசியல்கலாசாரத்தை உருவாக்குவேன்.
37வயதில் பாராளுமன்றஉறுப்பினராகும் பொத்துவில் முஸர்ரப் கூறுகிறார்.
(ஓர் ஊடகவியலாளன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகிய கதை)
இதுவரை பழகிப்போன மாமூல் அரசியலை விடுத்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி அதனூடாக தூய நேர்மையான அரசியலை நடாத்த ஆசைப்படுகிறேன். அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 18389 வாக்குகளைப் பெற்றுத்தெரிவான இளம் சட்டத்தரணி மொகமட் முஸர்ரப் முதுநபீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியிலேயுள்ள பொத்துவில் கிராமத்தில் 1983.06.10ஆம் திகதி பிறந்தவர்.
பொத்துவில் கிராமத்தின் முதல் பாராளுமன்ற பிரதிநிதியாக விளங்கியவர் அமரர் எம்.சி.கனகரெத்தினம். இவர் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1977இல் தெரிவானவர். அதன் பின்னர் நியமன எம்.பி. என்ற ரீதியில் எஸ்.எஸ்.பி.மஜீத் மற்றும் எ.அசீஸ் ஆகியோரைக்குறிப்பிடலாம்.
அந்த வரிசையிலே 37வயதான ஒரு இளம் சட்டத்தரணி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளாரென்றால் அது ஊடகவியலாளர் முசர்ரப் ஆவார்.
ஓரு புதுமுகமாக பாராளுமன்றம் செல்லவிருக்கும் சட்டத்தரணி முசர்ரப்பினுடனான செவ்வி இதோ:
வினா: முதலில் தங்கள் பூர்வீகம் பற்றிக்கூறுங்கள்.
விடை: நான் பொத்துவிலில் 3 சகோதரர்களுடன் 1983.06.10ஆம் திகதி பிறந்தவன். பொத்துவில் அல்இர்பான் வித்தியாலயம் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப இடைநலைக்கல்வியைக்கற்று உயர்கல்வியை மருதமுனை அல்மனால் மத்திய கல்லூரியில் பயின்றவன்.
வினா: தங்கள் சட்டத்துறைப் பிரவேசம் எவ்வாறமைந்தது?
விடை: உயர்தரத்தில் உயிரியல்விஞ்ஞானம் பயின்ற எனக்கு சட்டத்தரணி ஆகவேண்டும் என்ற அவா ஏற்பட்டது. அதன்காரணமாக திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பயின்று சட்டககல்லூரியில் அற்றர்ணி முடித்து சட்டத்தரணியானேன். இன்று நீதிமன்றுக்குச்சென்று வழக்காடும் நிலையிலுள்ளேன்.
வினா: உங்களின் பிரபல்யத்திற்கு காரணமான ஊடகத்துறை பற்றிக்கூறுங்கள்:
விடை: 2006முதல் 2009வரை சுமார் மூன்றரைவருட காலம் நேத்ரா தொலைக்காட்சியிலும் 2009 முதல் 2017வரை வசந்தம் தொலைக்காட்சியிலும் முழுநேர செய்திவாசிப்பாளனாக நிகழ்ச்சித்தயாரிப்பாளனாக என பல்வேறு துறைகளில் ஈடுபட்டேன். அதில் பெற்ற அனுபவங்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது.
வினா:தங்கள் அரசியல் பிரவேசம் திடுதிப்பென இடம்பெற்றது. அதற்கான காரணம் என்ன?
விடை: இதுவரை பொத்துவில் பிரதேசத்தில் அரசியல்வாதிகளால் எவ்வித மாற்றமும் நிகழவில்லை.பொத்துவிலில் மக்களது வாக்குகளைப்பெறுவதும் பின்னர் தலைமறைவாவதும் வழமை. மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டேவந்துள்ளனர். இந்தநிலையை மாற்றவேண்டும். மக்கள் தொடர்ர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவந்துள்ளமையை மாற்றவேண்டுமானால் ஊடகம் மட்டுமல்ல அரசியல் அதிகாரம் அவசியம் என்பதை உணர்ந்தேன். அதன்வெளிப்பாடே அரசியல்பிரவேசம்.எனவே மாற்றத்திற்காக வாக்களியுங்கள் என்ற சிந்தனையை மையப்படுத்தி இறங்கினேன்.
வினா: அரசியலில் அனுபவமில்லாத நீங்கள் பொத்துவிலில் இருந்து தெரிவாகுவீர்கள் என்ற நம்பிக்கை இருந்ததா?
விடை: நிச்சயமாக. எல்லோரும் பாற்போத்தல் அரசியல் சின்னப்பையன் எனக்கேலி செய்தனர். அல்லாஹ் பெரியவன். எனக்குரியது சிந்தனையும் பேச்சும். ஆனால் அரசியலை நடாத்தியது மக்கள் என்றால் மிகைப்பட்ட கூற்றல்ல. அரசியல் வாதிகள் தொடர்ச்சியாக இந்த மண்ணை ஏமாற்றிவந்தமையை அறிந்து அந்த அரசியல் அதிகாரத்தை நாம்பெறவேண்டும்.அதனூடாக இந்தமண்ணுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யலாம்.மேலதிகமாக அல்லாஹ் நாடினால் இம்மாவட்ட மக்களுக்கு இனமதபேதம் பாராமல் சேவைசெய்யலாம் என்றெண்ணி இத்துறையில் நம்பிக்கையுடனிறங்கினேன். கடந்தமுறை த.தே.கூட்டமைப்பு பெற்றதைப்போல் எமது கட்சிக்கு 40-45ஆயிரம் வாக்குகளும் எனக்கு 17-18ஆயிரம் வாக்குகள் வந்தாலே போதும் என நினைத்து தேர்தலில் நின்றேன். மக்கள் நம்பினார்கள். ஆதவளித்தார்கள். கனவு நனவானது.
வினா: சமகால அரசியல் இனவாதத்தை மையப்படுத்தி நடந்தேறிவருகிறது. பொத்துவில் 3இனமக்களையும் கொண்டது. தாங்கள் எவ்வகையில் ஏனைய இனங்களை பார்க்கிறீர்கள்?
விடை: உண்மையில் நல்லகேள்வி. மூவினமக்களையும் கொண்டது பொத்துவில்.மூவினமும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் இப்பூமியை அரசியல்வாதிகளே அவ்வப்போது பிரிக்கமுற்பட்டார்கள். பொத்துவிலை அரசியல்வாதிகள் இனரீதியாக பிரித்துவைத்தார்கள். பாடசாலைகளை இனரீதியாகப்பிரித்த அவலமும் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள முஸ்லிம் பாடசாலைகள் அக்கரைப்பற்று வலயத்துடனும் தமிழ்ப்பாடசாலைகள் திருக்கோவில் வலயத்துடனும் சிங்களப்பாடசாலைகள் அம்பாறை வலயத்துடனும் பிரிக்கப்பட்டுள்ளது.
இனி அதற்கு சற்றும் இடமளிக்கமாட்டேன்.எனக்கு அனைவரும் வாக்களித்தார்கள். மக்கள் என்னோடு தொடர்ச்சியாக ஒத்துழைத்தால் பெரும் சமுகமாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.
வினா: இனவாதம்கூர்மைப்படுத்தப்பட்ட இந்தக்காலத்தில் முஸ்லிமான உங்களுக்கு ஏனைய தமிழ் சிங்கள மக்களும் வாக்களித்தாகக்கூறினீர்கள். அதையிட்டு விளக்கமுடியுமா?
விடை: நல்லகேள்வி. எனக்கு மூவினமக்களும் வாக்களித்தனர். பாணமை சிங்களசகோதரர்தான் முதலில் எனக்கு தேர்தலன்றுகாலை போன் எடுத்து முதன்முதலில் எனக்கு வாக்களித்ததாகச்சொன்னார்.அதேபோன்று கோமாரி ஊறணி தமிழ்ச்சகோதரர்களும் கூறினாhர்கள். எனவேதான் எனது அரசியல் பயணமானது மூவினமக்களையும் ஒற்றுமைப்படுத்தியதாகத்தான் செல்லும்.
வினா: பாராளுமன்ற உறுப்பினருக்கான வரப்பிரசாதங்களை உடம்பிலே சேரவிடமாட்டேன் என அண்மையில் கூறியிருந்தீர்கள். என்ன சொல்ல வருகிறீர்கள்?
விடை: நான் ஒரு எம்.பி போன்று படாடோபமாக வாழமாட்டேன். சமுகத்தோடு இணைந்து மக்களில் ஒருவனாக மக்களோடு இருந்து சேவை செய்யவிரும்புகிறேன். எம்.பிக்குரிய வரப்பிரசாதங்களை வஞ்சிக்கப்பட்ட கிராமங்களுக்காக பயன்படுத்துவேன். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் முதலாவதாக வாகன பேர்மிட் வரும் அதில் இரண்டு கோடிஇ மூன்று கோடி என்று உழைத்துக் கொள்வார்கள். இந்த அரசியலால் ஒரு சதமும் என் உடம்பில் சேர விடமாட்டேன். 'நான் ஒரு சட்டத்தரணியாக இருக்கிறேன் எனக்கு இருக்கின்ற 'கோட்' போதும் நான் உழைத்து என்னுடைய குடும்பத்தை என்னையும் காப்பாற்றிக் கொள்வேன்.
என்னுடைய நோக்கம் இந்த சமூகம் வெற்றி பெற வேண்டும் அதற்கான வழியை அல்லாஹகாட்டித் தந்துள்ளான்' -
வினா: இனிமேல் மக்களை பணம்கொடுத்து அரசியல்வாதிகள் ஏமாற்றமுடியாது என்று சொல்கிறீர்களா?
விடை: நிச்சயமாக முடியாது. இந்த தேர்தலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டு இருக்கிறோம் என்றாலும் பணம் பொருட்கள் கொடுத்து மாமூல் அரசியல் செய்த காலம் மலையேறிவிட்டது.
காசுஇ பணம் கொடுத்து பொத்துவில் மக்களை ஏமாற்ற முடியாதுஇ நேர்மையான அரசியலை முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த வெற்றியில் எமது கட்சியின் வேட்பாளர்கள் அனைவரது பங்களிப்பும் உள்ளது.
வினா: மாவட்டத்திலுள்ள காணிப்பிரச்சினைகளைத் தீர்க்க ஏதாவது திட்ம் வைத்துள்ளீர்களா??
விடை: அம்பாரை மாவட்டத்தில் 39 இடங்களில் காணிப்பிரச்சினை உள்ளது. வேகாமம் காணி தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
அதேபோன்று ஏனைய காணிப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் காணி பிரச்சினையை கையாளும் குழுவை இன்று அழைத்து தகவல்களை பெற்றுக் கொண்டேன்.
வினா: வேறு ஏதாவது பிரச்சினைகள் இனங்கண்டுள்ளீர்களா?
விடைஇ ஆம்.பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பதில் ஆள் ஓழுங்கின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
பொத்துவில் பிரதேசத்தில் உள்ள மும்மத பெரியார்களையும் சந்தித்து மத நல்லிணக்கத்திற்கு வழியமைக்க உத்தேசித்துள்ளேன்.
பொத்துவிலில் இனமுரண்பாடுகளை இந்த மாவட்டத்திற்கு வெளியிருந்து வந்து ஏற்படுத்த யாருக்கும் இடமளிக்க முடியாது.
முகுது மகா விகாரையை மையப்படுத்தி முஸ்லிம் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த இடமளிக்க முடியாது.
முகுது மகா விகாரை தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
அந்த புனிதமான இடத்தில் ஒரு வேலிக்கட்டையை உடைத்து முஷாரப்பின் ஆதரவாளர்கள் உடைத்ததாக முரண்பாடுகளை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சிப்பதற்கு இடமளிக்க முடியாது.
வினா: அரசுடன் இணைந்து மக்கள் சேவைசெய்யும் எண்ணம் உள்ளதா?
விடை: எமது கட்சியின் தலைவர் றிசாட்பதியுதீன் நல்லதொரு மனிதர். அவரை பிரதமர் மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால பிரதமர் ரணில் ஆகியோரெலலாம் அமைச்சராக்பயன்படுத்தினர். நல்ல செயற்றிறன் மிகுந்த அவரிடம் பல பில்லியன் நட்டத்திலியங்கிய ஹிங்குறான சீனிக்கூட்டுத்தாபனம் மற்றும் ச.தொ.சவை கொடுத்தார்கள் அவர் அதனை பொறுப்பெடுத்து லாபமீட்டும் துறையாகமாற்றினார். இந்த அரசாங்கம் அவர்மீது வீண் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிழைபிடிக்கமுயல்கிறது. எனவே அரசுடன் இணைவதென்பது காலம்தான் பதில்சொல்லும்.
வினர் இறுதியாக எனன சொல்லவிளைகிறீர்கள்?
விடை: 3இனங்களையும் அரவணைத்து இனமதபேதமற்ற தூய்மையான நேர்மையான அரசியல் செய்யவிரும்புகிறேன். மக்கள் தங்களின் அன்பையும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தந்தால சமுகமாற்றத்தை ஏற்படுத்தி சமாதானமாக வளமுடன் வாழலாம்.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
0 comments :
Post a Comment