ஒருவேளை, உலகம் படைக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் வாழ்ந்த மனிதர்கள் இன்றைய மனிதர்களின் வாழ்வினை அவதானித்தால் முகத்திலேயே உமிழ்ந்து விடுவார்களோ என்னவோ? அந்தளவுக்கு மனிதமற்றுக் கிடக்கிறது இன்றைய உலகு.
ஏழை - பணக்காரன், கறுப்பன் - வெள்ளையன் ,உயர் சாதிக்காரன் - தாழ் சாதிக்காரன், படித்தவன் - பாமரன் என்று எத்தனை வேறுபாடுகள் எம்மத்தியில். ஒருபுறம் இந்த வேறுபாடுகளெல்லாம் உலகின் யதார்த்தமாக வாழ்வின் நியதியாகவே இருந்தாலும் மனிதம் என்ற ஒற்றை வார்த்தை இந்த அனைத்து வேறுபாடுகளையும் மிஞ்சிய ஒற்றுமையை ஏற்படுத்தி விட வேண்டும் அல்லவா?....... "அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே " என்ற கேரள பிரபல பாடகர் ரேஷ்மி சதீஸ் அவர்களின் பாடல் வரிகள் எத்தனை ஆழமானது. மதங்களைத் தாண்டியும் மனிதம் அன்று வாழ்ந்தது. மனிதத்துவம் அன்று தான் எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
உலகில் மனிதர்கள் யாவரும் மனிதம் என்ற குடையின் கீழ் வாழ்ந்த காலம் ஒன்றிருந்தது. பின் இடைப்பட்ட காலங்களில் கருப்பினத்தவர,உயர் சாதிக்காரன, தாழ் சாதிக்காரன், தீண்டத்தகாதவன் எனச் சில அநியாயங்கள் ஆங்காங்கே அரங்கேறத் தொடங்கின. ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டியது. பின் புதுமைகளும் புதுச் சிந்தனைகளும் வளரத் தொடங்கவே அவற்றில் அனேகமானவை நீங்கிப் போய் மனித உரிமைகள் சமத்துவங்கள் வலுப்பெறத் தொடங்கின.
ஆனாலும் சிற்சில மூலைகளில் அநீதியும் அத்துமீறல்களும் அமைதியாக அரங்கேறவே செய்தன. இன்றும் கூட அதே நிலையில் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது போலும். மனித உரிமைகள், சமத்துவம், அனைவருக்கும் ஒரே நீதி போன்ற கோஷங்கள் உலகின் நாலா புறங்களிலும் உயர்ந்து ஒலிக்கின்ற அதேவேளை ஆரவாரமில்லாமல் மனிதம் நாளுக்கு நாள் புதையுண்டு போய்க் கொண்டுதான் இருக்கின்றது.
அதற்கு நல்ல உதாரணமே அண்மையில் அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்டுக்கு அரங்கேரிய அநியாயம். ஜோர்ஜ் வெறுமனே தோலின் நிறத்தில் இருந்த வேறுபாட்டினால் உயிருடன் நெரித்துக் கொல்லப்பட்டான். சுமார் எட்டு நிமிடங்கள், 46 நொடிகள் "என்னால் சுவாசிக்க முடியவில்லை" என்று கூறிக்கொண்டே துடிதுடித்து இறந்தார். இல்லை துடிதுடிக்கக் கொல்லப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இயற்கையாகக் கிடைக்கப்பெற்ற தோலின் நிறத்திற்காகவா இவ்வளவு கொடூரமான தண்டனை?!!..
அதுவும் ஜனநாயகம் ,சமத்துவம், மனித உரிமைகள் என்றெல்லாம் பலமாகப் பேசிக்கொள்ளும் நாட்டில் இத்தகையதொரு கொடூரம் அரங்கேறியது. தன் தந்தை எதற்காகக் கொல்லப்பட்டார்? என்ற அந்தப் பிஞ்சுக்குழந்தையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? இந்த உலகைப் பற்றி மானிட ஜென்மத்தைப் பற்றி அந்தப் பிஞ்சு உள்ளம் எவ்வாறு இனிக் கற்பனை செய்யப் போகின்றது?
இங்கு கருப்பருக்கு ஒரு சட்டம் வெள்ளையனுக்கு இன்னொரு சட்டம். கருப்பாகப் பிறந்தது யாருடைய தவறு என்று கேட்க முன்னர் கருப்பாகப் பிறந்தது தவறா?!!! அவ்வாறெனில் ஏன் வெள்ளையாகப் பிறந்தது அதிஷ்டமாகின்றது?! என்றெல்லாம் பல கேள்விகள். யாராலும் விடை காண முடியாத வினாக்களல்ல இவை. மாறாக மனிதம் தொலைந்து போனதால் தோன்றிய வினாக்கள்.
கருப்பினத்தவர்கள் கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்ட நாட்டில்தான் அதே கருப்பினத்தவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையை உலகமே ஏற்றது. ஒலிம்பிக் ,சர்வதேச அமைப்புக்கள் , நிறுவனங்கள் என்றெல்லாம் கருப்பினத்தவர்களுக்கும் களங்கள் திறக்கப்பட்டன. அனைவருமே இதனை வரவேற்றார்கள். என்றாலும் எம்மில் பலருடைய உள்ளங்கள் இன்னும் மனிதம் கொண்டு திறக்கப்படவில்லை என்பதே உண்மை.
"அறிந்து கொள்ளுங்கள்! எந்தவோர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ எந்த ஓர் அரபியல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்தவொரு வெள்ளையருக்கும் ஒரு கறுப்பரை விடவோ எந்தக் கறுப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை".
"மக்களே ! உங்களுக்குக் கருப்பு நிற அடிமை ஒருவர் தலைவராக ஆக்கப்பட்டாலும் (நல்லவற்றை ஏவும் காலமெல்லாம் ) அவருக்குக் கீழ்ப்படியுங்கள்".
"பணியாளர்களின் பொறுப்பாளர்களே! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்".
நபிகளார் தனது இறுதி உரையின் போது முன்வைத்த மனித உரிமை மற்றும் சமத்துவத்திற்கான ஆணித்தரமான பிரகடனங்கள் மற்றும் கொள்கைகள் இவை. மதப் பிணக்குகள்,முரண்பாடுகள் தாண்டி மனித இனம் இவற்றை நடைமுறைப் படுத்தும் போது தான் இவ்வுலகில் மனிதம் மீண்டும் உயிர்த்தெழுவதற்கான வாய்ப்பு உள்ளது.
வெள்ளையர்கள் ,உயர் சாதிக்காரர்கள் ,படித்தவர்கள் மட்டும் இங்கு சுதந்திரமாக வாழ உலகம் அவர்களுடைய வாரிசுச் சொத்தல்ல. இது அனைவருக்குமான பூமி. இங்கு சுவாசக்காற்று அனைவருக்கும் ஒன்றுதான் .ஓடும் உதிரம் அனைவருக்கும் ஒரே நிறம்தான்.
ஒரே ஒரு நிமிடம் தான் வாழ்நாளாக இருந்தாலும் சுதந்திரமாக வாழ இங்கு அனைத்து ஜீவராசிகளுக்கும் உரிமையிருக்கின்றது. அந்த உரிமையை யாரும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் தேவையில்லை. யாரும் யாருடைய உரிமைகளைப் பறிக்கவும் தேவை இல்லை. விலங்குகளில் இருந்து எம்மை வேறுபடுத்தும் "மனிதம்"என்ற சொல்லை வாழவைப்போம். அன்பு, கருணை ,புன்னகை ,சமத்துவம் போன்ற கருவிகளால் இவ்வுலகை நிரப்புவோம்.
'வழித்தடம்'- All University Muslim Student Association
Rasmiya Niyas
University of Colombo
'வழித்தடம்'- All University Muslim Student Association
Rasmiya Niyas
University of Colombo
0 comments :
Post a Comment