சர்ச்சைக்கு மத்தியில் மு.கா பிரதித்தலைவர் ஹரீஸுக்கு வெற்றிப் பாராட்டு விழா எடுக்கிறார் மக்கள் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர் !



நூருல் ஹுதா உமர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் 2020 செப்டம்பர் மாதம் முதலாம் திகதி மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் தலைமையில் அவரது சாய்ந்தமருது அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொள்ள உள்ளதுடன் கல்முனை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். ரஹீப் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான மக்கள் பிரதிநிதிகள், முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

கடந்த பொதுத்தேர்தல் காலப்பகுதியில் மாவட்டத்தை வெல்வோம் எனும் கருத்துப்பட பேசி தமது ஆதரவாளர்களை தொலைபேசியின் பக்கம் வாக்களிக்க செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் மீது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைபீடமும், முக்கியஸ்தர்களும் மட்டுமின்றி ஆதரவாளர்களும் கடுமையான அதிருப்தியில் இருக்கும் இச்சூழ்நிலையில் இந்த பாராட்டுவிழாவும் கடுமையான கோபத்தை உண்டாக்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களுடன் முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இணைந்து இருவருமாக சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்பாராட்டு விழா பேசுபொருளாக மாறியுள்ளதுடன் இரண்டு கட்சிகளினுள்ளும் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றிருந்தமையும் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது.
இதே போன்று மக்கள் காங்கிரசின் கொள்கைகளுக்கு எதிராக செயலாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக இருந்த ஏ.எம்.எம். நௌசாத் அவர்கள் மீது அண்மையில் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்று இவருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :