கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் நெல் மூடைகளால் மறைத்து சூற்சுமமாக கொண்டுவரப்பட்ட பாலை மர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 03 சந்தேக நபர்களும் நேற்று (திங்கள்) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தொப்பிக்கல் பிரதேசத்தில் சட்ட விரோத மரக்கடத்தல் இடம் பெறுவதாக வட்டார வன அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலத்தின் வழிகாட்டலில் வட்டார வன உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது தொப்பிக்கல் பிரதேசத்தில் இருந்து கிரானுக்கு கொண்டுவரப்பட்ட பாலை மரங்கள் புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 13 பாலை மரக்குற்றிகளும் 53 நெல் மூடைகளும் இவற்றிற்கு பயன்படுத்திய உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
தொப்பிக்கல் பிரதேசத்தில் சூற்;சுமமாக மரக்கடத்தல் இடம் பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்தின் பகுதி வன உத்தியோகத்தர் ரீ.சிவக்குமார், வெளிக்கள உத்தியோகத்தர்களான் கே.பி.ஐ.பத்திரன, ரீ.என்.ஸ்ரீரிவர்த்தன ஆகியோர் எனது வழிகாட்டலில் வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் சூற்சுமமாக கடத்தப்பட்ட மரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.