நெருக்கடியான காலகட்டத்தில் சமூகத்திற்கு ஆறுதலளிக்கும் பணியில் முஸ்லிம் காங்கிரஸ்


அட்டாளைச்சேனை கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பெருமிதம் 

டந்த ஆட்சியில் சமூகம் நெருக்கடிகளுக்குள் மாட்டிக்கொண்ட போதும், சவால்களை எதிர்கொண்டபோதும், சில தலைமைகளை இராஜினாமா செய்யுமாறு இனவாத மதகுருமார்கள் உண்ணாவிரதம் இருந்த போதும், பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்த அந்த பணியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முன்னின்று இந்த சமூகத்திற்கு மிகவும் இக்கட்டான அந்தக் காலகட்டத்தில் ஆறுதலளிக்கும் பணியை சிறப்பாகவே ஆற்றியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொலைபேசி சின்னத்தில்  போட்டியிடும் வேட்பாளர்களுள் ஒருவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரை ஆதரித்து அட்டாளைச்சேனையில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் வளர்ச்சியில் பலவிதமான அனுபவங்களைக் கொண்டவர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். இந்த இயக்கத்தினுடைய நீண்ட அரசியல் பாதையில் ஒரு சிலரின் அந்தஸ்த்து என்பது அபரீமிதமான வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இந்த மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவர் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்களை கட்சி பாராளுமன்றத்தில் அமைச்சு பதவிகளால் அலங்கரிக்கவில்லை. ஆரம்பம் தொட்டு அவர்களை ஒவ்வொரு கட்டமாக முன்னேற்றி அடித்தளத்திலிருந்து மேல்தளம் வரை கொண்டுவந்துள்ளோம்.
ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகிய இருவரும் பிரதேச சபை உறுப்பினர்களாகவும், அந்த சபைகளின் தவிசாளர்களாகவும், மாகாண சபை உறுப்பினர்களாகவும், மாகாண சபை அமைச்சர்களாகவும், பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் ஆகிய வெவ்வேறு படித்தரங்களை அடைந்தவர்கள். இனி அடுத்தகட்ட நிலையையும் இந்த தேர்தல் வெற்றி மூலம் அடைந்துகொள்வார்கள். ஆளும் கட்சியானாலும், எதிர்கட்சியானாலும் முஸ்லிம்களின் ஆளும் கட்சி நாங்களாகவே இருப்போம்.
இந்த இயக்கம் பலவிதமான சோதனைகளை கடந்த ஆட்சி காலத்தில் சந்தித்துள்ளது. எங்களால் கொண்டுவரப்பட்ட ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரிய கலவரங்கள் கூட கட்டவிழ்க்கப்பட்டன. அம்பாறையில் ஆரம்பித்த கலவரம் திகன, அக்குறனை ஆகிய பிரதேசங்கள் வரையில் பரவி பேரழிவையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மீண்டும் குருநாகலில் தொடங்;கி கொட்டராமுல்லை, மினுவங்கொடை போன்ற பல இடங்களிலும் பாரிய அனர்த்ததை ஏற்படுத்தியது.
எமது இயக்கம் ஆட்சியில் இருக்கின்ற போது முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் இல்லை என்ற அங்கலாய்ப்பினால் நிறைய விமர்சனங்களை சந்திக்க நேர்ந்ததது. அந்த ஆட்சிக்குள் இருந்துகொண்டு நாங்கள் நிறைய போராட்டங்களைச் செய்ய வேண்டியிருந்தது. எங்கள் பாராளுமன்ற அணியுடைய ஆதரவு வேண்டுமென்பதற்காக சட்டவிரோதமாக 52 நாட்கள் ஆட்சியை கைப்பற்றியிருந்த இன்றைய ஆட்சியாளர்கள் நாட்டில் ஸ்த்திரமற்ற நிலையை உருவாக்கினார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுள் யாரை, எப்படி காவு கொள்வது என்று பகீரத பிரயர்த்தனங்களை முன்னெடுத்தார்கள்.
அந்த சூழ்ச்சியில் சிக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அணியாக கைகோர்த்து, சோரம் போகாமல், யாருக்கும் விலை போகாமல் நின்று வெற்றிகண்டமை கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் மிகப் பெரிய நிம்மதிக்குரிய விடயமாக அமைந்தது. ஈற்றில் நீதிமன்றம் சென்று போராடியதனால் ஆட்சி அதிகாரம் மீண்டும் நாங்கள் சார்ந்து நின்ற தரப்புக்கே கிட்டிய போது ஜனநாயகத்தை தலை நிமிர வைப்பதில் திடவுறுதியுடன் ஆட்சியாளர்களுக்கு பக்கபலமாக இருந்தோம்.
எங்களுக்குரிய ஆசன ஒதுக்கீடுகள் வருகின்ற போது அடுத்த பாராளுமன்றத்தில் அவர்களுக்கும் இடம் கிடைத்தால் இந்த கட்சி சந்தோஷப்படும். யாருக்கும் பதவிகள் மீது ஆசை இருப்பது இயல்பானது. ஆனாலும், பொறுமையுடன் தலைமைக்கு இருக்கின்ற நெருக்கடிகளை புரிந்துகொண்டு செயலாற்றுவதில் இவர்கள் இருவரும் சிறப்பாகவே நடந்துகொண்டனர். அவர்கள் வெறும் ஆசை வார்த்தைகளுக்கு சோரம் போகாமல் சமூகம் மற்றும்; கட்சியின் நலன், மானம், மரியாதை ஆகியவற்றை மேலும் அதிகரித்துக்கொண்டார்கள்;.
அட்டாளைச்சேனை ஏறத்தாழ 35000 வாக்குகளை கொண்டதொரு பிரதேசமாகும். இங்கு இருக்கின்ற வாக்குகளின் பெறுமானம் நிச்சயமாக பாராளுமன்ற ஆசனத்தை பெறுவதற்கு சிறந்த அடித்தளமாக அமையும். கடந்த பிரதேச சபை தேர்தலில் எங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டன. அதனை ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த முடிவுகளோடு ஒப்பிட்டு பார்க்கின்ற போது அது சமநிலை செய்யப்பட்டுவிட்டது. இந்த தேர்தலிலும் எங்களுக்குரிய ஆசனம் இந்த பிரதேச செயலக எல்லைக்குள்ளும் வெற்றிகொள்ளப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம்.

முஸ்லி;ம் காங்கிரஸிலிருந்து காலத்திற்குக் காலம் கட்டம் கட்டமாக விலகி சென்றவர்களை வைத்து இவர்கள் அரசியல் வியாபாரம் செய்கின்றார்கள். இப்போது மக்களை கவர்வதற்காக சில்லறை பொருட்களை விநியோகம் செய்துகொண்டிருக்கின்றார்கள். இது தான் அவர்களின் அரசியல் கலாசாரமாக மாறியுள்ளது. ஆனால், அவர்களுடைய தலைமையை நாங்கள் தான் பாதுகாத்தோம். எதிர்வரும் காலங்களிலும் பாதுகாப்பதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. அடுத்த பாராளுமன்றத்திலும் கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருக்கும் கவசமாக இருந்து அவர்களை பாதுகாக்கின்ற பணியை சிறப்பாக மேற்கொள்ளும்.
எமது அணிக்கு அம்பாறை மாவட்டத்தில் மொத்தமான அரசியல் அடையாளத்தை கடந்த பொதுத் தேர்தலில் வழங்கியதை போல இத்தேர்தலிலும் தரவேண்டும். முன்னைய ஆட்சி காலங்களைப் போல் இல்லாமல் கடந்த ஆட்சி காலத்தில் தாராளமாக அபிவிருத்தி செயற்றிட்டங்களை செய்திருக்கின்றோம். சமூகத்துடைய கவசமாக நாங்கள் இருந்து வருகின்றோம். வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட தருணத்திலும் அவற்றிற்குரிய இழப்பீடுகளை பெற்றுக் கொடுத்தோம். தாக்குதல் நடத்திய கும்பல்களை கைது செய்து தண்டணை வழங்க வைத்தோம். முன்னர் இவ்வாறு நடக்கவில்லை.
இன்றைய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை இலக்கு வைத்து பலவிதமான சித்துவிளையாட்டுக்களை காண்பிக்கிறார்கள். இவர்களை எதிர்கொள்வதற்கு நாங்கள் இந்த தேர்தலில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு விவகாரத்திலும் இந்த சமூகத்தை பழிவாங்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த மாவட்டத்தின் நிர்வாகத்தில் நியாயத்தை நிலைநாட்டுவது தடுக்கப்படுகின்றது.
அது கேள்விக்குட்படுத்துவதற்கு முஸ்லிம்களுடைய அரசியல் செல்வாக்கு மிக முக்கியமானது. இந்த தேர்தலில் தான் தங்கியிருக்கின்றது. வெறுமனே ஓரிரு ஆசனங்களை ஆங்காங்கே பெற்று அதனை சாதித்துவிட இயலாது. மாவட்டம் ரீதியாக நாம் வெற்றியடைய வேண்டும். இது முஸ்லிம்களின் தாயக பூமி. இதில் எங்களுடைய ஆசனங்களின் பெறுமானம் சாமானியமானதல்ல.

கடந்த ஆட்சியில் சமூகம் நெருக்கடிகளுக்குள் மாட்டிக்கொண்ட போதும், சவால்களை எதிர்கொண்டபோதும், சில தலைமைகளை இராஜினாமா செய்யுமாறு இனவாத மதகுருமார்கள் உண்ணாவிரதம் இருந்த போதும், கூட்டாக இராஜினாமா செய்த அந்த பணியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முன்னின்று இந்த சமூகத்திற்கு நெருக்கடியான காலகட்டத்தில் ஆறுதலளிக்கும் பணியை சிறப்பாகவே ஆற்றியது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்பாவி நாட்டுப்புற பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் எப்படியெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக சந்தைப்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன என்பதை நாங்கள் நன்றாக அவதானித்தோம்.
“நாங்கள் குற்றம் செய்தவர்களை இராஜினாமா செய்ய சொன்னால், குற்றம் செய்யாத ரவூப் ஹக்கீம் மற்றவர்களையும் அழைத்து அவர்களையும் இராஜினாமா செய்ய சொல்கின்றார். இப்படி தான் இந்த சமூகம். தனி நபருடைய சுயநலத்திற்காக அனைவரும் ஒன்றுபட்டுவிடுவார்கள். எனவே இப்போது நாங்களும் ஒன்றுபட வேண்டும்” என்ற பாங்கில் ஒருவிதமான வித்தியாசமான பார்வையில் மிகவும் விஷமத்தனமான பிரசாரங்களை சகல வழிபாட்டுத்தலங்களிலும் அவர்கள் கச்சிதமாக மேற்கொண்டார்கள்.
அதனால்தான் இறுமாப்போடு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முதன்முறையாக “இந்த நாட்டின் சிறுபான்மையினரின் தயவில்லாமல் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் வெல்ல முடியும் என்பதை நிரூபித்ததையிட்டு பெருமையடைகின்றேன்” என அறிவி;த்தார்.
அதற்கு பதிலளிக்கின்ற போது “நீங்கள் கூறிய விடயத்தில் எனக்கு எதுவித மாற்றுக்கருத்தும் கிடையாது. உண்மையில் நீங்கள் அவ்வாறு தான் வென்றிருக்கின்றீர்கள். ஆனால், நானும்; சிங்கள பௌத்தர் ஒருவரை அல்லவா ஆதரித்தேன். அதனை ஏன் வித்தியாசமாக சித்திரித்தார்கள்? ஏன் அவர் வெல்லவில்லை? என்று நான் சுய விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றேன்” என்று மிகப் பக்குவமாக நான் கூறினேன். அத்துடன், “சிறுபான்மையினத்தவர்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதையும் நீங்கள் சற்று திரும்பி பார்ப்பது சிறந்தது” என்றேன்.

இந்நிலையில் தான் எதிர்காலத்தில் மிக வித்தியாசமானதோர் அரசியல் களத்தை சந்திக்கவுள்ளோம். எனக்கு பின்னால் நிற்கப் போவது ஒரு சாதாரண அணி அல்ல. நிறைய ஆசை வார்த்தைகளை எதிர்த்து நின்று, சமூகத்திற்கான நன்மை எதுவென்று எடைபோட்டுப் பார்த்து, சமூகத்தினால் நம்பிக்கையின் நிமிர்த்தம் தரப்பட்ட ஆசனங்களை எவ்வாறு சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்பு வைக்க பயன்படுத்துவது என்ற சோதனைக்களத்திற்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையுடன் சேர்ந்து செயற்படவுள்ளனர்.
இந்த அணியினரின் நம்பகத் தன்மையை தேர்தலுக்கு முன்னர் உரசிப் பார்க்க முடியாது. எல்லோரும் நம்பிக்கையார்களே. ஆனால், ஐந்து வருடம் ஆட்சி இல்லை என்றால் நின்று பிடிக்க கூடிய திராணி, சமூகப் பிரச்சினைகள் சம்பந்தமாக முதுகெலும்போடு நின்று பிடித்து போராடுவதற்கான தைரியம், அதனை சாதிப்பதற்கான சாதுரியம் எமது அணியிடம் இருக்க வேண்டுமென்றால் அந்த தெரிவுகளை மக்களாகிய நீங்களே சரியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -