நான் அரசியல்வாதியாக அன்றி மக்கள் பிரதிநிதியாகவே இருப்பதற்கு அதிகம் ஆசைப்படுகிறேன். - கலாநிதி வி.ஜனகன் -

கலாநிதி வி.ஜனகன் -

மிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொண்ட ஆளுமைமிக்க ஒருவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்.

எனவே, தமிழ் தலைவர்கள் மக்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் தலைவர் மனோகணேசனுடன் இணைந்து போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன் வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளில் பங்கேற்று உரையாற்றிய அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

குறித்த மக்கள் சந்திப்புகளில் மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி வி.ஜனகன், தமிழ் பேசும் மக்களின் பெரும்பாலான பிரதிநிதிகள் தங்களுக்கு ஆதரவளித்த மக்கள் மீது எந்தளவிற்கு அக்கறையுடன் செயற்படுகிறார்கள் என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

இதன்காரணமாக தமிழ் பேசும் மக்கள் தங்களின் மாற்றுத் தெரிவாக வேறு வேட்பாளர்களுக்கு இம்முறை வாக்களிக்கக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது.

ஏதோ ஒருவகையில் தங்களை பற்றி அக்கறை கொண்டு செயற்படுவதற்கு ஒரு தலைவர் வரமாட்டாரா என்று மக்கள் எதிர்பார்ப்பதும் சாதாரமான விடயமே.

அந்தவகையில், தமிழ் பேசும் மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்கள் மீது உண்மையான அக்கறையுடன் செயற்படும் தலைவர்களுக்கு மக்கள் எந்நேரமும் ஆதரவாகவே இருப்பார்கள்.

இந்த அடிப்படையில்தான் தலைவர் மனோ கணேசன் அவர்கள் தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை பெற்றுக் வருகிறார்.

தமிழ் பேசும் மக்கள் எப்போதுமே தெளிவானவர்களாகவே இருக்கிறார்கள். தங்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதியானவர் அனைத்து துறைகளிலும் தேர்ந்தவராக அல்லது நல்ல கல்விமானாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.

இதன்காரணமாகவே நான் முகாமைத்துவ துறையில் இருந்து சட்டத்தையும் பயின்று பின்னர் கணிணி தொழிநுட்பத்துறையிலும் தேர்ச்சி பெற்றேன். அதன்பின்னர் வணிக நிர்வாகத்துறையில் முனைவர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டேன். அதனால் தான் தலைவர் மனோகணேசன் மிகத்தெளிவான முறையில் என்னை தெரிவு செய்திருக்கிறார்.

நான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் பட்சத்தில் யாரேனும் என்னை சட்டம் தெரிந்தவரா என்று கேள்வியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

அதேவேளை, சட்டத்தையும் வேறு துறைகளையும் கற்றவராக மாத்திரமல்லாது மக்களுக்கான தேவைகளை அறிந்து சேவை செய்யக்கூடியவரே உண்மையான அரசியல் தலைமையாக இருக்க முடியும்.

அதன்படி, நான் அரசியல்வாதியாக அன்றி மக்கள் பிரதிநிதியாகவே இருப்பதற்கு அதிகம் ஆசைப்படுகிறேன்.

உதாரணமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த எம்.ஜி.ராமசந்திரன் அவர்கள் அரசியல்வாதியாக செயற்படவில்லை. மக்கள் பிரதிநிதியாகவே ஆட்சியில் இருந்தார். அதன் காரணமாகவே இன்றும் மக்கள் மனதில் அவர் நிலைத்திருக்கிறார்.

அந்தவகையில் தான் எமது தமிழ் பேசும் மக்களும் பாராளுமன்றத்திற்கு தங்களுக்கான பிரதிநிதிகளையே அனுப்ப வேண்டும் எனபதே எனது விருப்பமாகும்.

கடந்த 18 வருடங்களாக மக்களோடு நல்ல தொடர்புகளை பேணும் ஒரு வளவாளராகவும், ஆலோசகராகவும், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடியவராகவும் அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்களோடும் நான் வர்த்தக ரீதியாக நல்லுறவை பேணி வருகின்றேன்.

உள்நாட்டில் மாத்திரமன்றி இந்தியா, ஆபிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் நான் எனது கல்வி சேவையை விரிவுபடுத்தி மாணவர்களை கணிணி தொழினுட்பத்துறையில் வளப்படுத்தி வருகின்றேன்.

சுமார் 29 நாடுகளுக்கு மேல் நான் பயணித்திருக்கிறேன் என்ற அடிப்படையில் நான் பலவிதமான சமுகத்துடனும் பழகியிருக்கிறேன். அவர்களின் பிரச்சினை குறித்தும் பேசியிருக்கிறேன். அதனால் பெரும்பாலும் அம்மக்களின் பிரதிநிதியாகவே பல சமயங்களில் செயற்பட்டிருக்கின்றேன்.

ஆரம்ப காலத்தில் இருந்து மக்களுக்கான தேவைகளை அறிந்து செயற்பட்டு வந்ததன் காரணமாக சிறந்த மக்கள் பிரதிநிதியாக என்னால் இருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

எனவே, தமிழ் பேசும் மக்கள் என்னை அவர்கள் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. ஆகவே தலைவர் மனோ கணேசனுக்கு அளிக்கும் வாக்குடன் எனக்கும் ஒரு வாக்கினை அவர்கள் நிச்சயம் வழங்குவார்கள்.

இளைஞர்களுக்கு கல்வியையும், வேலை வாய்ப்பையும் வழங்குவதற்கு எமது மக்கள் வேறு யாரிடமும் சென்று மன்றாடத் தேவையில்லை. ஜனகனிடன் கோரினாலே அதற்கான பலன் கிடைத்துவிடும்.

அதற்கான உறுதியை இந்த இடத்திலேயே என்னால் வழங்க முடியும். அத்துடன் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் கல்வியிலும், விளையாட்டுத் துறையிலும், ஆன்மீகத்திலும் சிறந்தவர்களாக வளர வேண்டும் என்பது எனது நாட்டமாக உள்ளது.

இதுதவிர, மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள ஆலயங்கள் மற்றும் ஏனைய மதத்தலங்களை வளப்படுத்துவது எனது கொள்கைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கு அமைவாக இன்றைய இளைஞர்களையும் யுவதிகளையும் நெறிப்படுத்துவதற்கு ஆலயங்கள் பெரிதும் உதவுகின்றன.

எனவே, சமய தலங்களுக்கான உதவிகளை தயங்காது வழங்குவதே எனது நோக்கமாக இருக்கின்றது.

இந்தவிடயங்களில் நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்ற தீர்க்க தரிசனத்துடன்தான் தலைவர் மனோ கணேசன் என்னை தன்னுடன் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரது விருப்பத்தையும், மக்களின் எதிர்ப்பார்ப்புகளையும் முழுமையாக பூர்த்தி செய்வேன் என்ற உறுதியுடன் நான் இருக்கிறேன் என்றும் கலாநிதி வி.ஜனகன் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -