நாட்டின் தற்போதைய நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்காத பட்சத்தில், கொரோனா தொற்றுக்கான இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாதாந்தம் எண்ணாயிரம் வரையிலான PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, பரிசோதனைகளை மேற்கொண்டால் மாத்திரமே, நாட்டில் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்த வருகை தந்தவர்கள், தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்கள், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் மூலமே, இரண்டாம் கட்ட அபாயத்திற்கான வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.