திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, தோப்பூரில் இன்று (25) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று, அவர் உரையாற்றினார்.
தொடர்ந்து கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் கூறியதாவது,
மக்கள் காங்கிரஸின் மீது கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கை காரணமாகவே, திருமலை மாவட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் எம்முடன் தொடர்ந்தும் இணைந்து வருகின்றனர். பிராந்தியத்தின் குரலாக மட்டுமின்றி, தேசியத்தின் குரலாகவும் மிளிரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் கரத்தைப் பலப்படுத்துவதற்காக, அவர்கள் எம்முடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகின்றது. சதிகாரர்களை தோற்கடிப்பதற்கான பெரிய பலமாக உங்கள் வருகையை நாம் காண்கின்றோம். இறைவனும் அதற்கு உதவி செய்ய வேண்டும்.
திருமலை மாவட்டத்தில், சிறுபான்மைச் சமூகம் ஒன்றுபட்டுச் செய்ய வேண்டிய கடமையை, இப்போது சரியாகச் செய்வதாகவே எமக்குப்படுகின்றது. ”அதைத் தருவோம், இதைத் தருவோம். எமக்கு வாக்குத் தாருங்கள்” எனக் கேட்கும் காலம் இதுவல்ல. குற்றஞ் செய்யாதவர்களை கூண்டில் அடைப்பதன் மூலமே, வாக்கு வாங்கியை பெரிதும் கூட்டிக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையில் ஒருதரப்பு அலைகின்றது. சிறுபான்மை மக்கள் ஜனநாயக ரீதியில் ஒன்றுபடும் போது, அவர்களை தட்டிக்கொடுத்து, பக்கபலமாக இருக்க வேண்டிய அரசு, சிறுபான்மை மக்களை மிதிக்கின்றது. தலைமைகளை ஒடுக்க முயற்சிக்கின்றது. சமூகத்தின் கவலைகளை எமது கவலைகளாக சுமந்துகொண்டு, அதற்கான தீர்வுகளைத் தேடுவதனாலேயே நாம் அடக்கப்படுகின்றோம்.
தோப்பூரில் கூட, ஹாஜா மொஹிடீன் என்பவரை சிறையிலடைத்து வைத்துள்ளனர். சுமார் ஒன்றரை வருடத்துக்குப் பின்னர், இந்தப் புதிய நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எவனோ ஒரு கயவன் செய்த செயலுக்காக, முழுச் சமுதாயத்தையும் பழிவாங்கத் துடிக்கின்றனர். கயவர் கூட்டத்தைக் காட்டிக்கொடுத்தோம். பல சூத்திரதாரிகளை கூண்டோடு அழிக்க உதவினோம். அவர்களின் வலையமைப்பை சிதைப்பதற்கு துணை செய்தோம். எஞ்சியுள்ளவர்களை தண்டிப்பதற்கும் வழி செய்து கொடுத்தோம். இவ்வாறு நல்ல பல காரியங்களைச் செய்து, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உதவிய நமது சமுதாயம், இன்னும் ஏன் குறிவைக்கப்படுகின்றது? தலைமைகள் ஏன் துரத்தப்படுகின்றன?
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எமது கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்றில் மௌனம் காத்தவர் அல்ல. சமுதாயத்துக்கு ஆபத்துக்கள் வந்த போதெல்லாம் தட்டிக்கேட்டவர். அஞ்சாநெஞ்சமுள்ள அவர், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்கும் திராணியுள்ளவர். அச்சம் இல்லாமல் எழுந்து, சிங்கம் போல கர்ஜித்து, நியாயத்துக்காக போராடியவர். இனிவரும் காலங்களிலும் அவர் எமக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.
எனவே, திருமலை மாவட்ட மக்களாகிய நீங்கள், அவரை தேர்ந்தெடுக்க உங்கள் வாக்குகளை அவரது சின்னமான தொலைபேசிக்கும், அவரது இலக்கம் 2 க்கும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.