ஜனாதிபதி தேர்தல் வெற்றியை வைத்து பொதுத் தேர்தல் வெற்றியை எடைபோட முடியாது.-முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு


எம்.எப்.பஸ்னா-
னாதிபதி தேர்தலில் வெற்றியடைந்ததை வைத்து பாராளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. இப்போது அனைவரும் ஐக்கிய தேசிய கட்சி உடைந்து போய்விட்டது என நினைக்கின்றார்கள். அவ்வாறு அல்ல. ரணில் விக்கிரமசிங்கவோடு சிறு குழுவொன்றே நிற்கின்றது. ஏனைய 95சதவீதமான பாராளுமன்ற உறுப்பினர்களும் 5 கட்சிகளின் தலைவர்களும் எங்களுடனேயே இந்தக் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் ஒன்றிணைந்திருக்கின்றார்கள். இது தான் மாற்று அரசாங்கமாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர் பங்குபற்றிய தேர்தல் பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (19) தெஹியங்க கிராமத்தில் நடைபெற்ற போது அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

எங்களது தேர்தல் பிரசார கூட்டங்களில் இவ்வாறாக பெரும் திரளாக கலந்துகொள்ளும் மக்களை நாடெங்கிலும் காண்கின்றோம். நாங்கள் தான் மாற்று அரசாங்கம். இதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இருந்தாலும், இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளாத சிலரை எண்ணி கவலையாக இருக்கின்றது.

இம்மேடையில் அரசியலில் நடுநிலையான போக்கைக் கடைப்பிடிக்கும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரும் கலந்துகொண்டிருக்கின்றார். அவர் மகத்தான மாற்றமொன்றுக்கு பங்களிப்பு செய்யக் கூடிய அரசியல்வாதி. அவ்வாறான அரசியல்வாதியொருவர் தனது கட்சியிலிருந்து தூரப்படுவதற்கு வேறு காரணிகள் இல்லை ஒருவரிடத்தில்தான் பிழை இருந்தது. அந்த தவறு யாரிடமிருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு அதைப் பொருட்படுத்தாது விடுவோம்.
2015ஆம் ஆண்டில் பெரியதோர் எதிர்பார்ப்போடு ஜனாதிபதி தேர்தலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினோம். அந்த மாற்றத்தின் அச்சாணிகளாக முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினரே இருந்தனர். அத்தகைய மாற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பாக்கீர் மார்;க்காரது தொகுதியான அளுத்கமையில் இடம்பெற்ற கலவரம் போன்றவை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமேயாகும். அது சாமான்யமானதல்ல.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வெற்றிகொண்டதாக கூறிக்கொண்டு சதா காலமும் ஜனாதிபதியாகவே இருந்துவிடலாம் என்ற ஆணவம் மற்றும் அகங்காரத்தினால் தனது ஆட்சி காலம் நிறைவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னவே தேர்தலை வைத்துவிடலாமெனக் களமிறங்கினார். அப்போதைய அவரது தோல்விக்கு முக்கியமான காரணம் இவ்வாறான வன்முறை சம்பவங்களை மக்கள் மத்தியில் அரங்கேற்றியதேயாகும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகளாக சித்திரித்தார்கள்.; இத்தாக்குதலுக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவரும், ஆளுநர்கள் இருவருமே காரணமெனவும், இவர்கள் 48 மணித்தியாளங்களுக்குள் தத்தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும் கோஷமிட்டு பெரும்பான்மை மக்களை சாரை சாரையாக உண்ணாவிரத கூடாரங்களில் ஒன்று சேர்த்தனர். இரு தனியார் தொலைக்காட்சி ஊடகங்களைப் பயன்படுத்தி நேரடி ஒளிபரப்புக்களினூடாக மக்கள் மத்தியில் பரவச் செய்தார்கள்.



இவ்விடயம் தொடர்பில் நாங்கள் தீர்வை பெறுவதற்கு அன்றைய பிரதமரை நாடிய போதிலும் அதனை சரியான விதத்தில் கையாள எத்தனிக்கவில்லை. எதுவுமே கைக்கூடாத நிலையில்தான் நாம் அனைவரும் கூட்டாக இராஜினாமா செய்வோம் என்ற முடிவை எட்டினோம். அன்றைய சூழ்நிலையில் அம்முடிவு மக்களுக்கு பாரியதொரு மன ஆறுதலை அளித்தது. சமூகத்தின் பாதுகாப்பை கருதி எங்களது முஸ்லிம் தலைமைகள் அனைவரும் பதவிகளை துறந்து அரசாங்கத்திற்கு இவ்வாறான அழுத்தமொன்றை வழங்கியதனால் மக்கள் மத்தியில் முஸ்லிம் தலைமைகள் மீது கொண்ட நம்பிக்கை மேலும் அதிகரித்தது. அன்று அது சமூகத்திற்கு ஆறுதலை அளித்திருந்தாலும், இப்போது இன்று எதிர் தரப்பிற்கு வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்கின்றோம்.
பெரும்பான்மை மக்களிடத்தில் இவ்விடயத்தை வேறு கோணத்தில் வைத்து வியாபாரம் செய்தார்கள். குற்றமுள்ளவர்களை இராஜனாமா செய்ய சொன்னால், மாறாக குற்றமிழைக்காதவர்களும் சேர்ந்து தமது பதவிகளை ஏன் இராஜனாமா செய்ய வேண்டும்? குற்றமிழைத்தோரை பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றாக சேர்ந்துவிட்டார்கள் என்ற பாங்கில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வழிப்பாட்டு தலங்கள் உள்ளடங்களாக பிரசாரங்களை முன்னெடுத்தார்கள். இதன் விளைவாகவே பெரும்பாலான வாக்குகள் எதிரணிக்கு கிடைத்தன. இது எங்களுக்கொரு படிப்பினையாகும்.

எதிர்காலத்தில் எங்களது அனுகுமுறைகள் எவ்வாறு அமையவேண்டுமென்பதை தீவிரமாக சிந்திக்கவேண்டும். நாங்கள் எதை செய்தாலும், அதில் குறையை காணுகின்ற கும்பல் தான் ஆட்சியில் இருக்கின்றது. மீண்டும் உதிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுத்து அங்கு வழங்கப்படுகின்ற சாட்சியங்களை தொலைக்காட்சிகளில் பகிரங்கமாக காட்டுகின்றார்கள். இதன் மூலம் மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குகின்றார்கள். அதனால் அவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றும் திட்டமே அரங்கேறுகின்றது. இந்தக் கட்டத்தில் தான் சமூகம் மிகவும் அவதானமாக சிந்திக்கவேண்டும்.
அவர்களை பொறுத்தமட்டில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புதிதாக உரிமைகளை வென்றெடுப்பதற்கு பதிலாக இப்போது இருக்குகின்றவற்றை மேலும் தக்கவைத்துக்கொள்வதற்காகவே தேர்தலை பகடை காயாக்கியுள்ளார்கள். அதற்காக திட்டமிட்டு புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம்களது பிரதிநிதித்துவத்தை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கூலிப்படைகளை அமர்த்தி அவர்களிடம் கொந்தராத்தக்களைக் கொடுத்திருக்கின்றார்கள்.

எமது மக்கள் இவ்விடயம் தொடர்பில் தெளிவான அறிவோடு இருக்கின்றார்கள்;. மக்களை எல்லா காலங்களிலும் மடையர்களாக்க முடியாது. அவர்களுக்கு இப்போது நிலைமை நன்றாக விளங்குகின்றது. தலைமைகளை பறிக்கொடுத்தால் திரும்பவும் அவர்களை மீளப் பெறுவதென்பது அவ்வளவு சாதாரண விடயமல்ல. இவ்வாறு தான் முன்னர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரையும் இழந்தோம். இதனால் அந்த களுத்துறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இன்று வரை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

பாராளுமன்த்திற்குள்ளும், வெளியிலும், சர்வதேசத்திற்கு மத்தியிலும் ஏதாவதொரு விடயத்தை தைரியமாக சொல்லக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட தலைமைத்துவமொன்று இல்லாமல் போனால், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்பையும், பாரதூரத்தையும் நாங்கள் இப்போது நன்கு உணர்கின்றோம்.
இப்போது பெரும்பான்மை மக்களிடத்தில் பேசக் கூடிய அரசியல் ஆளுமைகள் எங்களிடத்தில் குறைவாகவே உள்ளனர். அவர்;களுக்கு மத்தியில் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தெளிவை ஏற்படுத்துமளவுக்கு விளங்க கூடிய மொழியிலும், அதற்கான பாங்கிலும் பக்குவத்தோடும் பண்போடும் சொல்ல வேண்டும். அதனால் தான் சிறந்த தலைமைகள் பாராளுமன்த்தில் இருந்தாகவேண்டும். அதற்காகவே சஜித் பிரேமதாஸ இவ்வாறான ஆளுமைகளை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பும் பணியில் இறங்கியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் எங்களது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காக பல கோணங்களிலும் திட்டங்களை தீட்டி செயற்படுகின்றார்கள். முஸ்லிம்களை புண்படுத்துவதற்காக வேண்டுமென்றே கபட நாடகங்களை அரங்கேற்றுகின்றார்கள். அவற்றை நாம் முறியடிக்கவேண்டும்.
கொரோனா பிரச்சினையின் போது முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி கேட்டால், வேண்டுமென்றே எரிக்க வேண்டும் என்று கூறி அவற்றை தகனம் செய்தார்கள். உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 180க்கு மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை எறிக்கவோ, புதைக்கவோ முடியும் என அனுமதி வழங்கியிருந்த போதிலும், அதனை ஏற்றுக்கொள்ள இன்றைய ஆட்சியாளர்கள் தயாராக இருக்கவில்லை.
ஏனென்றால், இனவாதிகள் அதிருப்தியடைவதை அரசாங்கம் விரும்பவில்லை. முஸ்லிம்களுக்காக என்று வரும்போது அதனை செய்யக் கூடாது என்றவாறாக அவ்வளவு மட்டகரமான அடக்குமுறையை இவர்கள் கட்டவிழ்த்திருக்கின்றார்கள் என்பதை கண்டோம்.
நோய் தொற்றாளர்களின் உடல்களை எரிக்கின்ற விடயம் முஸ்லிம்களின் மனங்களை மிகவும் புண்படுத்துவதால் இதனை மீள்பரீசிலினை செய்யுங்கள் எனக் கோரினோம். அதனை விட்டுக்கொடுத்திருந்தால் முஸ்லிம்கள் மத்தியில் இந்த ஆட்சி சம்பந்தமாக இருந்த அதிருப்தி குறைய காரணமாக இருக்கும் எனக் கூறினேன்.
முஸ்லிம்களது உடல்களை நல்லடக்கம் செய்வதற்குரிய அனுமதியை அளிப்பதனூடாக எங்களுக்கு விட்டுத்தந்திருந்தால் அவர்களது பெரும்பான்மை வாக்கு வங்கியில் பாரிய சரிவை எதிர்கொள்ளவேண்டி வருமென அஞ்சினார்கள். பெரும்பான்மை இனவாதிகளை எதிர்த்துகொள்ளவதற்கு ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. இவ்வாறு மோசமான அராஜக போக்கில் இந்த அரசாங்கம் சென்றுக்கொண்டிருக்;கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்ததை வைத்து பாராளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. இப்போது அனைவரும் ஐக்கிய தேசிய கட்சி உடைந்து போய்விட்டது என நினைக்கின்றார்கள். அவ்வாறு அல்ல. ரணில் விக்கிரமசிங்கவோடு சிறு குழுவொன்றே நிற்கின்றது. ஏனைய 95சதவீதமான பாராளுமன்ற உறுப்பினர்களும் 5 கட்சிகளின் தலைவர்களும் எங்களுடனேயே இந்தக் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருக்கின்றார்கள். இது தான் மாற்று அரசாங்கமாக அமையும்.
இந்த மாற்று அரசாங்கமானது எதிர்வரும் தேர்தலில் போதிய ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, அரசாங்கத்திற்கு எதிராக போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுடைய வாக்கு வங்கியை சிதறடிப்பதற்காக ஆங்காங்கே கூலிப்படைகளை அமர்த்தி இருக்கின்றார்கள். அவர்களை சுயேட்சை சின்னங்களில் போட்டியிடச் செய்திருக்கின்றார்கள். இந்த ஜம்பம் எல்லாம் இனி பழிக்காது.
ஏனென்றால், முஸ்லிம்களுக்கு இந்த விவகாரங்களின் பின்னணியும், அதிலுள்ள சூழ்ச்சியும் நன்கு விளங்கிவிட்டது. முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இந்த சதிகளுக்குள் சிக்கி முஸ்லிம் தலைமைகளை இனியும் பழிக்கொடுக்க இயலாது என்ற தெளிவு மக்கள் மத்தியில் உள்ளது. இருந்தாலும், நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

அடுத்த கட்ட அரசியலை மிகவும் அவதானமாக கையாள வேண்டியுள்ளது.
இந்த ஆட்சியாளர்களின் போக்கில் மாற்றம் இல்லை. முழுப் பிராந்தியத்திலும் உள்ள சக்திகளை பற்றி மிக அவதானமாக இருக்க வேண்டும். நிறையவே ஊடுருவல்கள் இடம்பெறுகின்றன. பதற்ற நிலையை உருவாக்கி அதனூடாக அரசியல் செய்து அதில் குளிர் காய இந்த கும்பல் எத்தனிக்கின்றது. இதற்காக அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி வேலை செய்வார்கள்.
ஆனால், இவற்றை மிக பக்குவத்தோடு கையாள வேண்டும். எங்கள் வாய்களை மூடுவதற்கென்றே பீதியில் பாராளுமன்றத்தை களைத்து விட்டார்கள்.
எதிர்வரும் தேர்தலில் பாராளுமன்றத்தில் எங்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்வதே தற்பொழுது நாங்கள் எதிர்நோக்கும் சவாலாகும். அந்த அறைகூவலுக்கு எங்களுக்கு ஒத்துழைப்பதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -