குச்சவெளி பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள், மீனவ சங்கத்தின் உறுப்பினர்களுக்கான விசேட கலந்துரையாடல் திரியாய் கடற்படை முகாமில் கடற்படையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது தற்போது மீன்பிடியினை மேற்கொள்கின்ற மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அனுமதிப்பத்திரம் இல்லாமல் மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள், மற்றும் வெளியூர் மீனவர்களின் வருகை, சட்டவிரோதமான தடைசெய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தி மீன்பிடி மேற்கொள்கின்றவர்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியை மேற்கொள்ளவர்கள் தொடர்பாக எதிர்காலத்தில் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பாக மீனவர்களுக்காக தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் கருத்து தெரிவிக்கையில் :
பிரதேசத்திலுள்ள மீனவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குவதுடன் மேலும் எதிர்காலத்தில் மீன்பிடி தொடர்பான பல நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் மீனவர்களுக்குரிய பூரன ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்ததுடன் சட்டவிரோதமான தடைசெய்யப்பட்ட மருந்துகளை பாவித்து மீன்களை பிடித்து மக்களுக்கு விநியோகிப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் இதனால் மீன் இனங்கள் அழிவடைவதுடன் எதிர்காலத்தில் மீன்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் இம்மீன்களை உட்கொள்வதாலும் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தவிசாளர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் இலங்கை கடற்படையின் குச்சவெளி பிரதேசத்திற்கான பொறுப்பதிகாரி மற்றும் திருகோணமலை கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மற்றும் குச்சவெளி பிரதேசத்திற்கு பொறுப்பான மீன்பிடி திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.