திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் 8 ம் வட்டாரம் சிறுப்பிட்டி இலுப்பைக்குளத்தை சேர்ந்த அன்டன் பிரதீப் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி 13வது தளத்தில் வேலை செய்யும்போது தவறி விழுந்தமையால் சுயநினைவிழந்ததுடன் தற்போது அங்கவீனமடைந்து வீட்டிற்குள் எவ்வித வேலையும் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர்பற்றிய தகவல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவின் கவனத்திற்கு வந்ததும் உடனடியாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரை குறித்த இடத்திற்கு களவிஜயம் மேற்கோண்டு அவரது தேவைப்பாடுகளை தமக்கு அறியப்படுத்துமாறு பணித்ததற்கமைய முதல் கட்டமாக அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலிற்கமைய குறித்த மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலியொன்றும் ,இருக்கை கொமட் (மலசலகூட)என்பன (01) மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபனால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கமைய இலங்கை நிர்வாக சேவை சங்கத்தினரால் 5000 கொடுப்பனவும் மற்றும் அரசாங்கத்தின் விசேட தேவையுடையவரிற்கான 5000 கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளதுடன் அவரிற்கு சுயதொழிலை தொடராக வழங்கவும் மருத்துவ உதவிகளையும் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் மற்றும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
