கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையிலும், வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் லட்சக்கணக்கானோர் வீதியில் இறங்கி நீதி வேண்டி போராடி வருகின்றனர்.
அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியால் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் உள்ள மினபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரை சாலையில் கிடத்திய போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின், இளைஞரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து மினபொலிஸ் நகரில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து, அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர் இதேபோன்று நியூயார்க் நகரில் லட்சக்கணக்கானோர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு பேரணியாக சென்றனர். இதையடுத்து, போராட்டத்தை முன்னெடுத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதேவேளையில், புரூக்ளின் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி, போலீசார் விரட்டியடித்தனர். இதனால், அப்பகுதியில் வன்முறை வெடித்தது.
கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல்சில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தடியடி நடத்தப்பட்டது. பின்னர், அங்கிருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் போர்க்களமானது.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கானோரை போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால், தடுப்புகளை தகர்த்தெறிந்த போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றதால், அவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் விரட்டியடித்தனர்.இதனிடையே, போராட்டதுக்கு காரணமாக போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின், கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில், கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் ஓர் இடத்தில் லட்சக்கணக்கானோர் கூடுவது, மேலும் பேராபத்தை விளைவிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
