தகுதியான தனித்துவ தலைமை ஒன்றை நாடு இழந்துள்ளது : நண்பனுக்கு இரங்கல் தெரிவித்த அதாஉல்லா !


நூருள் ஹுதா உமர்-
தொண்டமானென்ற வரலாற்றுப் பெயரும் இ.தொ.கா என்ற பேரியக்கமும் இந்நாட்டு அரசியல் வரலாற்றில் தடம் பதித்துள்ளதாக,தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது; கட்சியின் மரத ஓட்டத்துக்கான அடுத்த பொல்லை அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான், இளைஞரான ஆறுமுகம் தொண்டமானிடம் கொடுத்ததையடுத்து,கட்சியினதும் தலைமையினதும் இலட்சியங்களை முறையாக முன்னெடுத்து,நாட்டின் நிலைமைக்கேற்ப தனது சமூகத்துக்கு தேவையானவற்றை முறையாகவும் படிப்படியாகவும் சாதித்த தலைவர் அவர். சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகளில் என்னோடும் எமது கட்சியோடும் எப்பொழுதுமே பேச்சுவார்த்தை நடாத்தி முடிவுகளை எடுப்பதற்கு துணைபோன தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான். அவரது இச்செயற்பாடுகள் ,அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் அஷ்ரபின் உறவுகளையே நினைவு கூர்கின்றது. பாராளுமன்ற காரியாலயத்தில் கடைசியாக சந்தித்த வேளை,பல தரப்பட்ட விடயங்களை தீர்க்கமாக பேசிக் கொண்டிருந்தோம்.
நமது நாடு இன்று தேடி நிற்கின்ற அரசியல் தீர்வானது, சகல இனத்தவருக்கும் ஏதாவதொரு கணிசமான வீதாசாரத்தில் குடியிருப்பு நிலம் உட்பட விவசாயக் காணிகள், ஏனைய அரசியல் தொழில்வாய்ப்புக்கள் பகிரப்படுவதே சாலச் சிறந்ததென்ற, தேசிய காங்கிரஸின் பாலமுனைப் பிரகடனத்தின் மூலமே எட்டப்பட முடியுமென்பதை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.

இதுதான் நமது நாட்டின் முதுகெலும்பான தோட்டத் தொழிலாளர்களுக்கும் முறையானது என்ற எமது எண்ணக் கருவை ஏற்றுக் கொண்டு அவற்றைப் படிப்படியாக எட்டுவதற்கு உறுதி நிற்பதாக உறுதியளித்தவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான்.இப்படியான சிறந்ததொரு சமூகத் தலைவனின் இழப்பு,மலையக சமூகத்துக்கு மாத்திரமல்ல நாட்டுக்குத் தகுதியான சிறுபான்மைத் தலைமையை இழந்துள்ளதாகவே நாம் கருதுகிறோம். மேலும் தேசிய காங்கிரஸ் நல்லதொரு சகோதரக் கட்சியின் தலைமையை இழந்து தவிக்கிறது. தனிப்பட்ட முறையில் நானுமொரு நல்ல நண்பனை இழந்த துயரத்தில் தவிக்கிறேன். அந்நாரது இழப்பால் துயருறும் அவரது மனைவி, மக்கள், குடும்பம் உறவுகளுக்கப்பால் ஒரு சமூகமே முழுமையாக சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மாத்திரமன்றி,பெரும்பான்மை சிங்கள சமூகமும் நம்பிக்கையுடன் அன்பு கொண்டிருந்த ஆறுமுகத்தின் இழப்பால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளது.இதே வேளை நானும் அந்நாரின் ஆத்ம சாந்திக்காக என் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.காலத்தின் அவசரத்தால் சௌமியமூர்த்தி தொண்டமான் அமரத்துவம் அடைந்ததைப் போன்றே, இன்று ஆறுமுகம் தொண்டமானும் அமரராகி விட்டார்.அவர் பிரதிநிதித்துவப்படுத்திய இந்த சமூகமும் அவரது கட்சியும் அடுத்த பொல்லை கையிலெடுத்து இலக்கு நோக்கி ஓட மேலும் பலப்பட வேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -