மே தினம் கொண்டாடமுடியவில்லையென்ற கவலை எமக்கில்லை.இன்று நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளது.இந்நிலையில் நாட்டுக்காக வேலை செய்வதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாக தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.சர்வதேச தொழிலாளர் தினத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு இலவசமாக இன்றையதினம் நாட்சம்பளம் வழங்கப்படுகின்ற நிலையில் மலையகப்பகுதியிலுள்ள பெரும் எண்ணிக்கையானவர்கள் இன்று (01) மேதின விடுமுறையைப்பெற்றுக் கொள்ளாது.வேலைக்கு சமூகம் தந்திருந்தனர்.மேதினம் தொடர்பாக அவர்களிடம் கேட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று நாடு கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் பலர் இறக்கின்றார்கள். பலர் நோய்வாய்ப்படுகின்றார்கள்.இந்நிலையில் நாம் மேதினத்தினை கொண்டாடுவது நல்லதல்ல நாட்டு மக்கள் துன்பப்படும்போது எமக்கு கொண்டாட்டங்கள் அவசியமில்லை.கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் பலர் அங்கு ஒன்று கூடுவார்கள்.வீடுகளில் இருந்தாலும் பலர் கூடிக்கூடி கதைப்பார்கள். இதனால் சமூக இடைவெளி பேண முடியாது போய்விடும்.சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் ஆகவே தான் நாங்கள் இன்று வேலைக்கு வந்தோம.; என்று ஒருவர் தெரிவித்தார்.
மற்றுமொரு தொழிலாளியான பெண்மணி கருத்து தெரிவிக்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்த நேரம் நாம் தொழிலை இழப்போம். என்று, சொல்ல முடியாது. இன்றுள்ள சூழ்நிலையில் நாங்கள் பாரிய பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து வருகின்றோம்.கொழும்பில் வேலை செய்த எமது பிள்ளைகளும் வீடுகளுக்கு வந்துள்ளார்கள். ஆகவே எங்களுடைய உழைப்பு இன்றியமையாதது எனவேதான் நாங்கள் இன்று வேலை செய்கிறோம.; அதே நேரம் தோட்டங்களில் வேலைசெய்வதற்கு இன்று ஆட்கள் இல்லை. தேயிலைக்கொழுந்து பறிக்காது இருந்தால் அவை முற்றிப்போய் எமக்கு வேலைசெய்யமுடியாத நிலை ஏற்படும். நாங்கள் இந்த தொழிலைதான் நம்பியிருக்கிறோம்.ஆகவே அதனை பாதுகாக்கவேண்டியது எமது கடமையும் பொறுப்பும் ஆகும்.ஆகவே நாடு நல்லாயிருக்க வேண்டிக்கொண்டு இன்று நாங்கள் வேலைக்கு வந்தோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்.உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினையடுத்து தொழிலாளர்கள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படவில்லை.இலங்கையிலும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் இன்று தத்தமது தொழில்களில் ஈடுபட்டு வந்தனர்.தங்களுக்கு சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருப்பது தொடர்பாக கேட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
